ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

வடமராட்சி கிழக்கு மக்கள் மீள்குடியமர யாழ் படை தளபதி அனுமதி!

வடமராட்சி கிழக்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர், யுத்த நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

நேற்று மாலை பலாலி படைத் தலைமையகத்தில் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையிலான குழுவினரிடம் இதற்கான உறுதிமொழியை வழங்கினார் தளபதி ஹத்துருசிங்க. முதற்கட்டமாக அம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த 81 குடும்பங்கள் நாளை திங்கட்கிழமை அங்கு மீளக் குடியமர்த்தப்படவுள்ளன. ஏற்கனவே அம்பன் பிரதேசத்தில் ஒரு சிறிய பகுதியில் மக்கள் மீள்குடிய மர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அனுமதி வழங்கப்பட்ட 81 குடும்பங்களும் மிக நீண்டகாலமாக தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படாமல் தற்காலிக இடங்களிலேயே குடியமர்த்தப்பட்டிருந்தன. இதில் 73 குடும்பங்களுக்கு தற்காலிக இடங்களில் தலா 2 பரப்பு அரச காணி வழங்கப்பட்டதுடன் அரச திட்டங்களின் கீழ் வீட்டு உதவிகளும் வழங்கப்பட்டிருந்தன. மேலும் செம்பியன்பற்று வடக்கு (ஜே/426), செம்பியன்பற்று தெற்கு (ஜே/427), மருதங்கேணி (ஜே/428), வத்திராயன்(ஜே/429), உடுத்துறை (ஜே/430), ஆழியவளை(ஜே/431) ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 2ஆயிரத்து 455 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 531 பேர் மீளக் குடியமர்த்துவதற்கான அனுமதியையே நேற்று யாழ்.மாவட்டக் கட் டளைத் தளபதி வழங்கியுள்ளார். அத்துடன் இப்பிரதேசத்துக்கான மீள்கட்டுமானப் பணிகளை யாழ்.மாவட்டச் செயலகத்தை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இதற்கமைய இப்பிரதேசத்தின் புனரமைப்புப் பணிகளை யாழ்.மாவட் டச் செயலகம் மேற்கொள்ளவுள்ளது. இப்பிரதேச மக்களுக்காக இராணுவத் தினரால் 75 அரை நிரந்தர வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை: