minnambalam.com -Aara : “பாமக பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் பேசி முடித்த நிலையில் நன்றியுரைக்கு முன்பாக… டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பும் அதற்கு பகிரங்கமாக அன்புமணி தெரிவித்த எதிர்ப்பும்தான் இன்று அரசியல் வட்டாரத்தில் ஹாட்டான விவாதமாக மாறி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தனை நியமிக்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அறிவித்தபோது கூட அந்த முகுந்தன் மேடை ஏறவில்லை.
ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை வாங்கிய அன்புமணி, ‘அவர் கட்சிக்கு வந்தே நாலு மாசம் தான் ஆகுது. அவருக்கு என்ன அனுபவம் இருக்கப் போகுது. அவருக்கு எதுக்கு இந்த பதவி?’ என்று கேட்க டாக்டர் ராமதாஸ் சூடாகிவிட்டார்.
‘இது என் கட்சி. நான் சொல்வது தான் இங்கே நடக்கும். யாருக்கு பிடிக்கவில்லையோ வெளியே போ’ என்று ஆவேசமாகவே தெரிவித்தார்.
அப்போது இறுகிய முகத்துடன் காணப்பட்ட அன்புமணி, ‘பண்ணுங்க பண்ணுங்க…,’ என்றபடியே ஜிகே மணி இடம் இருந்து மைக்கை வாங்கி, ‘கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் நான் ஒரு அலுவலகம் திறக்கிறேன். என்னை சந்திப்பவர்கள் அங்கு வந்து சந்திக்கலாம்’ என்று போன் நம்பரை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போதே டாக்டர் ராமதாஸ் கோபமாக பேசிக் கொண்டும் இருந்தார்.
இத்தோடு பொதுக்குழு கூட்டம் முடிந்து, டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று விட்டார். டாக்டர் அன்புமணி கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரையில் இருக்கும் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் பொதுக்குழுவுக்கே வரவில்லை. காலையில் தனது தாத்தா டாக்டர் ராமதாஸுடன் காரில் பொதுக்குழு மண்டபம் வரை வந்த முகுந்தன், பிறகு அங்கிருந்து திண்டிவனம் சென்றுவிட்டார்.
பொதுக்குழுவில் நடந்த இந்த மோதல் பற்றி பாமக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘இதில் ஊடகங்களுக்கு தான் பரபரப்பு. எங்களுக்கு ஒன்றும் இல்லை. டாக்டர் ஒரு கருத்தை சொல்கிறார், அன்புமணி அதற்கு இன்னொரு கருத்தை சொல்கிறார். இதுதான் ஜனநாயகம். இதை வேறு கட்சியில் நீங்கள் பார்க்க முடியாது’ என்கிறார்கள்.
மேலும் அவர்களிடம் விசாரித்தபோது, ‘ஏற்கனவே பாமக இளைஞரணி தலைவர் பதவிக்கு தனது நீண்ட நாள் நண்பரான ஜி கே மணியின் மகன் தமிழ் குமரனை நியமித்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் அவரை சந்திக்கவே அப்பாயின்மென்ட் கொடுக்காமல் தவிர்த்து வந்தார் அன்புமணி. இந்த போக்கு பிடிக்காமல் டாக்டர் ராமதாசை நேரில் சந்தித்து தனக்கு இளைஞர் அணி தலைவர் பதவியே வேண்டாம் என்று சொல்லிவிட்டு லைக்கா நிறுவனத்தின் சிஇஓ பணியில் மும்முரம் காட்ட ஆரம்பித்தார் தமிழ்குமரன்.
இந்த பின்னணியில்தான் சமீபத்தில் டாக்டர் ராமதாஸ் தனது மூத்த மகள் ஸ்ரீ காந்தியின் மகன் முகுந்தனை இளைஞர் அணி தலைவர் பதவியில் நியமிப்பது பற்றி தைலாபுரத்தில் ஆலோசித்தார்.
இந்த முகுந்தன் டாக்டர் அன்புமணியின் சொந்த அக்கா மகன். அதுமட்டுமல்ல அன்புமணியின் மாப்பிள்ளையுடைய தம்பி.
இப்படிப்பட்ட நெருக்கமான உறவு கொண்ட முகுந்தனை அவரது தாய் மாமாவான அன்புமணியே ஏற்கவில்லை. இது குறித்து டாக்டர் ராமதாசிடமே அவர் பேசியிருக்கிறார். ஆனாலும் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமிப்பதில் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருந்திருக்கிறார். சமீபத்தில் நடந்த திருவண்ணாமலை உழவர் உரிமை மாநாட்டில் கூட முகுந்தன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போதே அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் இது பற்றி ராமதாஸ் தெரிவித்துவிட்டார்.
பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடுவது என்றும் உட்கட்சி வட்டாரத்தில் கூறிவிட்டார். அன்புமணியிடமும் தெரிவித்துவிட்டார்.
இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் டிபன் சாப்பிடும்போதும் இதுபற்றிய விவாதம் வந்திருக்கிறது. அப்போது அன்புமணியிடம், ’உனக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் பொதுக்குழு மேடையிலேயே தெரிவித்துக் கொள்’ என்றும் கூறிவிட்டார் டாக்டர் ராமதாஸ்.
மேலும் பொதுக்குழு கூட்டத்துக்கு செல்லும் வழியெங்கும் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பைபாஸ் சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களில் பலவற்றில் முகுந்தன் படம் இடம்பெற்றிருந்தது. பாமகவின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், வானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகு ஆகியோர் டாக்டர் ராமதாஸின் உத்தரவுப்படி முகுந்தனின் படங்களை பேனர்களில் வைத்திருந்தனர்.
இந்த பின்னணியில் தான் பொதுக்குழு மேடையில் இறுதியாக டாக்டர் ராமதாஸ் அறிவிப்பை வெளியிட, ஏற்கனவே வீட்டில் தெரிவித்த எதிர்ப்பை மேடையிலும் தெரிவித்தார் அன்புமணி.
இதற்கு இன்னொரு பின்னணியும் இருக்கிறது. ‘டாக்டர் அன்புமணி தனது குடும்பத்தில் இருந்து தன் மூன்றாவது மகள் சஞ்சுமித்ராவை அரசியலுக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அதற்கு முகுந்தன் நியமனம் நெருடலாக இருக்குமோ என்பதால் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் அன்புமணியின் மூன்றாவது மகள் அரசியலுக்கு வருவதை டாக்டர் ராமதாஸும் விரும்புகிறார். அப்போது யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அதற்குரிய பதிலாகத்தான் இன்றைய பொதுக்குழு மேடையிலேயே, ‘இது எனது கட்சி. என து நியமனங்களை எதிர்த்தால் வெளியே போ’ என்று பேசியிருக்கிறார். ஆக முகுந்தன் நியமனம், அதற்கான எதிர்ப்பு எல்லாமே தைலாபுரம் தோட்டத்தில் விலாவாரியாக விவாதிக்கப்பட்டுதான் பொதுக்குழு கூட்டத்திலும் அரங்கேறி இருக்கிறது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக