tamil.oneindia.com - Velmurugan P ;கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 28-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி வி.ஜி.ராவ் நகர் பகுதியில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைந்துள்ளது.
இந்த கால்வாயை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை காலி செய்ய வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தியும் அங்கிருந்தவரகள் கேட்கவில்லை.. இதையடுத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 50 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
மேலும் 151 கட்டிடங்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. கோவையை ஒட்டி கிராமங்களே இல்லை என்கிற அளவிற்கு அந்த பகுதியில் எல்லா ஊர்களும் கோவை மாநகரை ஒட்டி வளர்ந்துவிட்டன. இதனால் கோவை மாநகரை சுற்றியுள்ள எல்லா பகுதிகளும் மாநகராட்சியில் தற்போது இணைக்கப்பட உள்ளன. கோவை மாநகரம் தற்போது 100 வார்டுகளாக உள்ள நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர், இதன் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.
கோவை மாநகரம் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறதோ, அதேவேகத்தில் நிலத்தின் மதிப்பும், வீடுகளின் மதிப்பும் வளர்ந்து வருகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளும் வளர்ந்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் வாழ்பவர்களை அந்த பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 28-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி கணபதி வி.ஜி.ராவ் நகர். இங்கு சுமார் 3 கி.மீ நீளத்துக்கு கால்வாய் இருக்கிறது. இது கணபதி எப்.சி.ஐ. குடோனில் இருந்து மகாத்மா காந்தி வீதி வரை நீண்டு செல்கிறது. இந்த கால்வாயின் இருபுற கரைகளையும் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருக்கிறார்கள். அப்படி கட்டியவர்கள பல ஆண்டுகளாக அங்கேயே வசித்து வருகின்றனர்.
கணபதி வி.ஜி.ராவ் நகர் காலனியில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பெரும்பாலானவை ஓட்டு வீடுகள் ஆகும். இவர்கள் நீண்ட காலமாக இப்பகுதியை ஆக்கிரமித்து இருப்பதால், காலி செய்ய மறுத்துவிட்டனர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில் இவர்களுக்கு கீரணத்தம் பகுதியில் அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்பட்டு, அதற்குரிய ஆணைகளும் வழங்கப்பட்டுவிட்டன.
அடுக்குமாடி வீடு ஒதுக்கீட்டு ஆணையை வாங்கிய பிறகும் இவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற அவர்கள் முன்வரவில்லை. இந்த வீடுகளை காலி செய்யவும் இல்லை. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு, காலி செய்வதற்கான கால அவகாசமும் முறைப்படி வழங்கப்பட்டது.ஆனாலும், காலி செய்யவில்லை. இதையடுத்து கடந்த வாரம் இங்குள்ள 201 வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டித்தனர் ஆனாலும் வீடுகளை காலி செய்யவில்லை.
இதையடுத்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில் நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இறங்கினர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ஒரே நாளில் 50 வீடுகள் இடிக்கப்பட்டன. அடுத்தக்கட்டமாக மேலும் 151 வீடுகளையும் இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக