செவ்வாய், 31 டிசம்பர், 2024

சீமான் கைது! தடையை மீறி போராட்டம்

 மின்னம்பலம் - Kavi : சென்னையில் நாம் தமிழர் கட்சியின் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட வந்த சீமான் கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்போடப்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று (டிசம்பர் 31) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நடந்த கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

இதற்காக சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர்.

புத்தாண்டு வருவதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்பதாலும், மனுவில் குறிப்பிடட்ட நபர்களைக் காட்டிலும் அதிகம் பேர் கூடுவார்கள் என்று தகவல் கிடைத்ததாலும் போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல்கள் வருகின்றன.

அனுமதி மறுக்கப்பட்டதை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வள்ளுவர் கோட்டத்தில், பேரிகார்டு, போலீஸ் வேன், பேருந்துகளுடன் போலீசார் குவிந்தனர்.

இந்தநிலையில் 10 மணிக்கு மேல் வள்ளுவர் கோட்டத்துக்கு வந்த நாதக நிர்வாகிகளை கைது செய்து ஏற்கனவே கொண்டு வந்து நிறுத்தியிருந்த பேருந்துகளில் ஏற்றினர்.

அப்போது கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் போராட்டம் நடத்த வந்தார். காரில் இருந்து இறங்கிய அவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும் சீமானுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா

கருத்துகள் இல்லை: