திங்கள், 21 அக்டோபர், 2024

குவைத்தில் பாதிக்கும் மேல் திருமணம் ஆகாத இளம் பெண்கள்... தொடரும் விவாகரத்துகள்

 tamil.samayam.com - மகேஷ் பாபு  : சர்வதேச அளவில் பண மதிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது? என்றால் குவைத் என்று தான் பதில் கிடைக்கும்.
எண்ணெய் வளங்களால் செல்வம் கொழித்து காணப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து பெரிய அளவில் பொருள் ஈட்டி வருகிறது.
இந்நாட்டில் பிறப்புரிமை பெற்றிருந்தால் கல்வி, வேலை, திருமணம் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
குவைத் நாட்டில் பெண்கள்



இருப்பினும் பாதிக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பது ஆச்சரியம் அளித்திருக்கிறது. குவைத் நாட்டின் தற்போதைய மக்கள்தொகை என்று எடுத்து பார்த்தால் 10.65 லட்சம் பேர். இதில் 4,09,201 பேருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்களில் 2,15,000 பேர் ஆண்கள். 1,94,000 பேர் பெண்கள். திருமண வயதுடைய மொத்த பெண்களில் பாதிக்கும் மேல் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

குறையும் திருமணங்கள்

இதன் பின்னணி குறித்து ஆராய்கையில், குவைத் நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விஷயங்கள் தான் பிரச்சினையாக முன்வந்து நிற்கிறது. அதுமட்டுமின்றி வரதட்சணை என்ற விஷயம் மிகவும் பெரியதாக காணப்படுகிறது. இத்தகைய காரணங்களால் பெண்கள் திருமணம் வேண்டாம் என்று கூறி தள்ளி போட்டு கொண்டே செல்கின்றனர். இது ஆரோக்கியமான சமூக பங்களிப்பில் சிக்கலை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

அரசு திட்டம் என்ன?

ஒருகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என்ற சமநிலையற்ற போக்கு ஏற்படும். அதன்பிறகு அரசு தீட்டும் திட்டங்கள் பயனற்று போக வாய்ப்புள்ளது. எனவே இதற்குரிய நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயமும் குவைத் நாட்டில் அரங்கேறி வருகிறது.

19 வயதுக்கு உட்பட்ட திருமணங்கள்

15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வயதினரிடையே திருமணங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. தற்போது வரை மேற்சொன்ன வயதுடையவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதிலும் சிறுமிகள் பலருக்கு விரைவாகவே திருமணம் செய்து வைத்துள்ளனர். இது இள வயது கர்ப்பம், குடும்ப சுமை, நெருக்கடியான வாழ்க்கை முறை போன்ற சிரமங்களை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: