tamil.filmibeat.com -Mohanraj Thangavel : விக்கிரவாண்டி: தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருப்பவர் நடிகர் விஜய். மிகப்பெரிய ஓப்பனிங் கொண்ட கதாநாயகன்,
அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என விஜய்யின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் ரொம்பவும் பெருசு. இப்படியான நிலையில் அவர் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டுத் திடலில் அரசியல் தலைவர்களின் கட் - அவுட்டுகளுக்கு மத்தியில் விஜய்க்கும் கட் - அவுட் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி முழுநேர அரசியல்வாதியாக செயல்படவுள்ளார் என தான் கட்சி தொடங்கிய முதல் நாளே அறிவித்தார். விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் என்ற தகவல்கள் ஏற்கனவே இணையத்திலும் மக்கள் மத்தியிலும் பேச்சுகள் அடிபட்டு வந்தாலும், அவர் சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகப்போகின்றேன் என்ற அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. குறிப்பாக அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் பலர் அவரை வரவேற்றனர்.
thalapathy vijay tvk
அரசியல்: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் விஜய்யோ அல்லது அவரது கட்சியினரோ நேரடியாக மக்களைச் சென்று சந்தித்து அவர்களின் பிரச்னைக்காக குரல் எழுப்பவில்லை எனவும் ட்விட்டரில்தான் அறிக்கைகளை வெளியிட்டு அரசியல் செய்து வருகின்றார் என விமர்சனம் முன் வைக்கப்பட்டது. ஆனால் இந்த விமர்சனத்திற்கு முன்னரே அவர் தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்தது மட்டும் இல்லாமல், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அரசியல் நிலைப்பாடு?: மேலும் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களின் பிறந்த நாளுக்கும் நினைவு நாளுக்கும் மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாள் என தொடர்ந்து அறிக்கைகள், அரசியல் தலைவர்களின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தல் மரியாதை செய்தல் என இருந்தனர். மேலும் விஜய் நெற்றியில் பொட்டு வைத்த புகைப்படம், பொட்டு இல்லாத புகைப்படம், விநாகர் சதூர்த்திக்கு வாழ்த்து இல்லை, ஆயுத பூஜைக்கு வாழ்த்து என இவரது அரசியல் நிலைப்பாட்டினை புரிந்தே கொள்ளமுடியவில்லை.
thalapathy vijay tvk
கட் - அவுட்: இந்நிலையில் மாநாட்டு திடல் மிகவும் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றது. இன்னும் மூன்று நாட்களே இடையில் உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாநாட்டுத் திடலில், சட்டமாமேதை அம்பேத்கர், தமிழ்நாட்டு அரசியலின் திசைவழிப்போக்கைத் தீர்மானித்த தந்தை பெரியார், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆகியோருக்கு 70 அடி உயரத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதில் சட்டமேதை அம்பேத்கருக்கும் தந்தை பெரியாருக்கும் இடையில் விஜய்க்கு கட் -அவுட் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக