செவ்வாய், 22 அக்டோபர், 2024

தென் மாநில மக்கள் தொகை குறைவது குறித்து முதல்வர்கள் கவலை

 முரளிதரன் காசிவிஸ்வநாதன் :   தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துவருவது மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது.
ஆந்திரப் பிரதேச மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமையன்று கூறியிருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அதேபோன்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமையன்று, அமராவதி நகரில் கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்துப் பேசும்போது ஆந்திர மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்படி பெற்றுக்கொள்வோருக்கு சலுகைகள் அளிக்கப்படுமென்றும் குறிப்பிட்டார்.



"இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது என முன்பிருந்த சட்டத்தை நீக்கியிருக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இனி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவருவோம்" என அவர் குறிப்பிட்டார்.
விளம்பரம்

இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 1950களில் 6.2 சதவீதமாக இருந்தது தற்போது 2.1 சதவீதமாகக் குறைந்திருக்கும் நிலையில், ஆந்திராவில் இது 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்று குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, "ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாகப் பெற்றுக்கொள்வது இளம் வயதினரின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும். இரண்டு குழந்தைகளுக்குக் கூடுதலாக பெற்றுக்கொள்வதே மாநில மக்கள் தொகையைத் தக்கவைக்கும்.

மக்கள் தொகை அதிகமாக இருப்பதன் பலன் (demographic dividend) 2047வரைதான் நமக்குக் கிடைக்கும். 2047க்குப் பிறகு, ஆந்திர மாநிலத்தில் இளைஞர்களைவிட வயதானவர்களே அதிகம் இருப்பார்கள். ஜப்பான், சீனா, பல ஐரோப்பிய நாடுகளில் இது ஏற்கனவே நடக்க ஆரம்பித்துவிட்டது. அதிக குழந்தைகளைப் பெறுவது உங்கள் பொறுப்பு. இதனை உங்களுக்காக நீங்கள் செய்யவில்லை. தேசத்தின் நலனுக்காக செய்கிறீர்கள்” என்றும் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமையன்று காலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இதே தொனியில் கருத்து ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.

மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இப்போது யாரும் 16 செல்வங்களை பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துவது கிடையாது. அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்றுதான் சொல்கிறோம்" என்று சொன்னவர் தொடர்ந்து, "ஆனால், இன்று நாடாளுமன்றத் தொகுதிகளெல்லாம் குறையும் நிலை வந்திருக்கும்போது, ஏன் அளவோடு பெற வேண்டும், நாமும் 16 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாமே என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

ஆந்திர முதலமைச்சரும் தமிழ்நாடு முதலமைச்சரும் வெவ்வேறு நோக்கில், இந்த விவகாரத்தை அணுகினாலும் இந்தியாவின் தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துவருவது குறித்த கவலைகள் ஏற்கனவே பல முறை தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தென்னிந்திய மாநில மக்களின் நடு வயது (median age), வட இந்திய மாநில மக்களின் நடு வயதைவிட அதிகமாக இருக்கிறது.

2011 கணக்கீட்டின்படி இது கேரளாவில் 31.9 ஆகவும் தமிழ்நாட்டில் 29.9ஆகவும் ஆந்திராவில் 27.6ஆகவும் கர்நாடகாவில் 27.4ஆகவும் தெலங்கானாவில் 26.7ஆகவும் இருக்கிறது. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 21.5ஆகவும் பிஹாரில் 19.9ஆகவும் இருக்கிறது.

இந்தியாவில் 1872-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2021-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக அது நடக்கவில்லை. இந்நிலையில், 2011-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே சமீபத்திய கணக்கெடுப்பாக இருக்கிறது.

தென்னிந்திய மாநில மக்களின் நடு வயது (median age), வட இந்திய மாநில மக்களின் நடு வயதைவிட அதிகமாக இருக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை

இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கி, 'Precursor to Census 2024: The Fine Prints of a Rapidly Changing Nation' என்ற ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த ஆய்வறிக்கை 2024ல் இந்தியாவின் மக்கள் தொகை 138 - 142 கோடிக்குள் இருக்கும் எனக் குறிப்பிடுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பில் தென்மாநிலங்களின் பங்களிப்பு 14லிருந்து 12 சதவீதமாக குறையும் எனவும் வட மாநிலங்களின் பங்களிப்பு 27ல் இருந்து 29 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சதவீதம் 30.9ஆக இருந்த நிலையில், 2024ல் இது 24.3ஆகக் குறையும் எனவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியாவின் நடு வயது 24ஆக இருந்தது தற்போது 28-29ஆக இருக்கும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. மேலும், இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் வயதானவர்களின் சதவீதம் அதிகம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துவருவது குறித்து, அந்தந்த மாநில அரசியல் கட்சிகள் கவலையடைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது காரணம், வரிப் பகிர்வு. இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையில் வரி வருவாய் பகிர்ந்துகொள்ளப்படுவதற்கு முக்கியக் காரணியாக, அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 1950களில் 6.2 சதவீதமாக இருந்தது தற்போது 2.1 சதவீதமாகக் குறைந்துள்ளது

இரண்டாவதாக, நாடாளுமன்ற தொகுதிகள் மக்கள் தொகைக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்யப்படுவது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, ஒவ்வொரு பத்தாண்டிற்குப் பிறகும் நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைத் திருத்த முடிவுசெய்யப்பட்டது.

1975ல் இந்தியாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போதுதான் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. அந்தத் தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதால், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்தத் திருத்தம் கூறியது. ஏனென்றால், மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலம் இதனால் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2001ல் இந்த 25 ஆண்டு காலம் முடிவுக்கு வந்தபோது, 2002ல் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 84வது திருத்தத்தின் மூலம் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடப்பட்டது.

   மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களால், தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது
அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆலோசனை வழங்குவது சரியா?

2000வது ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கொள்கையின்படி, 2026க்குள் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் மக்கள் தொகை நிலைபெற்றுவிடும் எனக் கருதப்பட்டது. ஆகவேதான், அந்த ஆண்டிற்குப் பிறகு, தொகுதி மறுசீரமைப்புச் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.

2026 நெருங்கும் நிலையில், மக்கள் தொகையை குறைத்த தென் மாநிலங்கள், தங்கள் மாநிலத்தில் உள்ள தொகுதிகள் குறையலாம் அல்லது வட மாநிலங்களில் உள்ள தொகுதிகள் அதிகரித்து, தங்கள் செல்வாக்கு குறைக்கப்படலாம் என அஞ்சுகின்றன.

இந்தப் பின்னணியில்தான் இரு மாநில முதல்வர்களின் கருத்துகள் தற்போது பார்க்கப்படுகின்றன. ஆனால், அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்காக கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தீர்வல்ல என்கிறார் 'SOUTH vs NORTH : India’s Great Divide' நூலை எழுதிய ஆர்.எஸ். நீலகண்டன்.

"பெண்களை படிக்கவைத்தால் மக்கள் தொகை குறைவது இயல்பாகவே நடக்கும். உலக மக்கள் தொகையைப் பொறுத்தவரை, கடந்த 200 ஆண்டுகளில்தான் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்த 200 ஆண்டுகளில் மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றம்தான் இதற்கு முக்கியக் காரணம். பெண்களை படிக்க வைக்கும்போது மக்கள் தொகை அதன் இயல்பான அளவை நோக்கி குறைய ஆரம்பிக்கும். உலகில் ஏற்கனவே சுமார் 800 கோடி பேர் வசிக்கும் நிலையில் கூடுதல் குழந்தைகள் தேவையில்லை" என்கிறார் நீலகண்டன்.

படக்குறிப்பு, இந்தியாவில் மிகப் பெரிய பிரச்னை மக்கள் தொகை அதிகரிப்புதான். இந்தியாதான் உலகிலேயே தற்போது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு

சென்னை பொருளியல் கல்லூரியின் கௌரவ பேராசிரியர் முனைவர் கே.ஆர். ஷண்முகமும் இதே கருத்தை எதிரொலிக்கிறார்.
"ஒரு மாநில மக்கள் தொகை அதிகரிக்க வேண்டுமென சொல்பவர்கள் இரு காரணங்களுக்காக இதைச் சொல்கிறார்கள். ஒன்று, அந்த மொழியை பேசும் மக்களின் தொகை குறைந்து வருவது. இரண்டாவதாக, இந்தியாவில் வரிப் பகிர்வுக்கு முக்கியமான அம்சமாக மக்கள் தொகை இருக்கிறது. முன்பு, 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டது.

இப்போது 1991ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதாகக் கருதி, இந்தக் கருத்தைச் சொல்கிறார்கள்.

ஆனால், இந்தியாவில் மிகப் பெரிய பிரச்னை மக்கள் தொகை அதிகரிப்புதான். இந்தியாதான் உலகிலேயே தற்போது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு. இதில், மேலும் மக்கள் தொகையை அதிகரிக்கச் சொல்வது சரியான ஆலோசனையாக இருக்காது. சில மாநிலங்கள் அப்படிக் கருதுகின்றன. மாறாக, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்கள் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென சொல்லலாம்" என்கிறார் அவர்.

பெண்களை கூடுதல் குழந்தைகளைப் பெறச் சொல்வது சரியல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்
ஆனால், மக்கள் தொகை குறைந்துவருவதில் வேறு சில பிரச்னைகளும் இருக்கின்றன.

மக்கள் தொகை குறைய ஆரம்பிக்கும்போது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இளைஞர்களின் எண்ணிக்கை குறையும். இதனால், அதிக எண்ணிக்கையிலான வயதானவர்களை, குறைவான எண்ணிக்கையிலான இளைஞர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

"இப்போது ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் முன்பு 58ஆக இருந்தது தற்போது 60ஆக உயர்த்தப்பட்டுவிட்டது. ஆகவே வயதானவர்கள் அவர்களே தங்களைப் பார்த்துக்கொள்வார்கள். மீதமுள்ள ஆண்டுகளுக்கான சமூகப் பாதுகாப்பை அரசு உறுதிசெய்தால் போதுமானது" என்கிறார் ஷண்முகம்.

வேறு சில விஷயங்களையும் சுட்டிக்காட்டுகிறார் ஷண்முகம். "முன்பு ஒரு குடும்பத்தில் 4- 5 குழந்தைகள் இருந்தால், அதில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைத்தான் படிக்க வைக்க முடியும். மற்ற குழந்தைகள் விவசாயம் போன்ற தொழில்களைச் சார்ந்திருப்பார்கள். ஒரு பொருளாதார நிபுணரின் பார்வையில் பார்க்கும்போது அது சரியானதில்லை.

விவசாயத்தில் பொருளாதாரத்தின் பங்கு குறைவாக இருக்கும்போது, அதைச் சார்ந்திருப்பவர்களின் பங்கும் குறைவாக இருக்கவேண்டும். மக்கள் தொகையை அதிகரிப்பதன் மூலம் மீண்டும் 1950களுக்கு திரும்பிச் செல்ல நினைக்கக்கூடாது" என்கிறார் ஷண்முகம்.

ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் வரி பகிர்வு, மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஆகியவை மக்கள் தொகையோடு தொடர்புபடுத்தப்படும் நிலையில், பாதிக்கப்படுவதாகக் கருதும் மாநிலங்கள் தத்தம் மக்கள் தொகையை அதிகரிக்க விரும்புகின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன?

"இந்த இரு பிரச்னைகளையும் ஒன்றாக இணைக்கக்கூடாது. வரி பகிர்வை பொறுத்தவரை, தென் மாநிலங்கள், வட மாநிலங்களுடன் தங்கள் வளத்தை கூடுதலாக பகிர்ந்துகொள்வதாக கருதுகின்றன. அப்படியானால், ஒரே நிதிக் கட்டமைப்பிற்குள் இரு பிரிவினரும் இருப்பதுதான் பிரச்னை. அதை நிதி ஆணைய மட்டத்தில் ஆலோசித்துத் தீர்க்க வேண்டும். அதைவிடுத்து, பெண்களை கூடுதல் குழந்தைகளைப் பெறச் சொல்வது சரியல்ல" என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

கருத்துகள் இல்லை: