வியாழன், 24 அக்டோபர், 2024

இலங்கையில் இஸ்ரேலிய பயணிகள் மீதான தாக்குதல் திட்டம்

 Letchuman Shanmuganathan  :  இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் – இருவர் கைது.. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, சர்ப் வீரர்கள் அடிக்கடி வந்து செல்லும் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் இடமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் அருகம்பே பிரதேசத்தில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு அறிவித்துள்ளன.
இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிவிக்கப்பட்டது.


தாக்குதலுக்காக அவர்களுக்கு சுமார் 50 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த இருவரின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்திய புலனாய்வு அமைப்புகளால் இந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்களை இஸ்ரேல் கொன்றமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிட பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவலைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அருகம்பே கரையோரத்திற்கு மேலதிகமாக காலி, ஹிக்கடுவ மற்றும் வெலிகம போன்ற பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய பிரஜைகளை இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புத் தலைமையகம் எச்சரித்துள்ளது.
மேலும், பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள பகுதிக்கு உடனடியாக செல்லுமாறும் அல்லது உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் இஸ்ரேல் அரசாங்கம் இந்த அறிவிப்பின் மூலம் அவர்களுக்கு அறிவித்திருந்தது.
இதனிடையே, ஹீப்ரு சின்னங்கள் மற்றும் யூத மதத்தை பரப்பும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், பாதுகாப்பற்ற இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: