வியாழன், 23 மே, 2024

எச்சில் இலை மீது உருளும் வேண்டுதல் - தனிமனித உரிமையா? சமூக பிரச்னையா?

எச்சில் இலை மீது உருள்தல்

BBC News தமிழ் - பிரம்மேந்திர சபா - சாரதா வி : கரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கியுள்ள தீர்ப்பில்,
 "சமூக விருந்தில் பங்கேற்கும் பக்தர்கள் விட்டுச் சென்ற வாழை இலைகளில் உருள்வது அவருக்கு ஆன்மீக பலனைத் தரும்" என்ற நம்பிக்கை,
அந்தத் தனிப்பட்ட நபரின் "ஆன்மீக தேர்வு" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன சடங்கு?
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நேரூர் கிராமத்தில் உள்ளது, ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி. அவர் ஜீவ சமாதியான நாளை அவரது பக்தர்கள்   ஆறு நாள் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

இதையொட்டி பிரம்மேந்திரர் அதிஷ்டானம் எனும் கோவிலில் வேத பூஜைகள் நடைபெறும். பிரம்மேந்திரரின் திருவுருவப் படம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, நெரூர் அக்ரஹாரத்தில் உள்ள பஜனை மடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும்.

எச்சில் இலை மீது உருள்தல்

பட மூலாதாரம், என் எஸ் நரசிம்மன், பிரமேந்திர சபா

இதையடுத்து நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சபாவின் சார்பாக அக்ரஹார வீதியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் சாப்பிடும் பிரமாண்ட அன்னதானம் நடைபெறும். அப்போது சாப்பிட்ட இலைகள் மீது பக்தர்கள் உருண்டு வழிபடுகின்றனர்.

குழந்தைபேறு, திருமணம் எனப் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்ற இந்தச் சடங்கு நடக்கிறது. இது தொடர்பாக நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சபா செயலாளர் என்.எஸ்.நரசிம்மன் கூறுகையில், "புதுக்கோட்டை அரசர் தொண்டைமானின் ஆன்மீக குருவாக இருந்தவர் பிரம்மேந்திரர். பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்தது 1700களின் முன்பாதியில் என்று கூறப்படுகிறது."

இந்த சபாவும் இந்த வழக்கமும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அக்ரஹாரத்தின் தெருவில் அன்னதானம் நடைபெறும். பிரம்மேந்திரர் இந்த அன்னதானத்தில் வந்து சாப்பிடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதற்கு சாட்சி கொடு என்று கேட்டால் எப்படிக் கொடுக்க முடியும்? இந்த வழிபாட்டில் சாதிப் பாகுபாடு கிடையாது. இந்த முறை உருண்டவர்களில் முதலில் இருப்பதே பிராமணர்கள்தான்," என்று கூறினார்.

இதேபோன்ற சடங்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒதியத்தூரில் உள்ள விருபாக்ஷீஸ்வரர் கோவிலிலும் நடைபெற்றுள்ளது. கர்நாடகாவிலும் நடைபெற்றுள்ளது.

நீதிமன்றம் விதித்த தடை

எச்சில் இலை மீது உருள்தல்

பட மூலாதாரம், பிரம்மேந்திர சபா

கர்நாடக மாநிலம், மங்களுரூக்கு அருகிலுள்ள குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலில் இதேபோன்ற சடங்கு நடந்து வந்தது. அங்கே பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள்மீது, இதர சாதியினர் அரை நிர்வாணமாக உருளும் சடங்கு நடந்து வந்தது. இதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உட்படப் பலரும் அறிக்கை விடுத்தனர். இதற்கு எதிரான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. “இப்படிப்பட்ட சடங்குகள் பொது ஒழுங்கு, அறநெறி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு எதிரானது” என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால் 500 வருடங்களாக நடைபெற்று வரும் சடங்கை மாற்ற வேண்டாம் என எதிர் தரப்பு வாதிட்டது. அதை ஏற்காத நீதிபதி மதன் லோகுர், தீண்டாமைக்கு ஈடாக கருதி இந்தச் சடங்குக்குத் தடை விதித்தார்.

தமிழ்நாட்டிலும் இதேபோன்ற வழக்கினை 2015ஆம் ஆண்டு தலித் பாண்டியன் தொடுத்தார்.‌ விசாரணையில் சாட்சியளித்த கரூர் மாவட்ட ஆட்சியர், இந்த நிகழ்வில் தீண்டாமை, சாதிப் பாகுபாடு இல்லை என்றும் அனைத்து சாதியினரும் பங்கு பெறலாம் என்றும் கூறினார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிக்குமார் உள்ளிட்ட இரண்டு பேர் கொண்ட அமர்வு இந்தச் சடங்குக்குத் தடை விதித்தது. அதில் கர்நாடகாவில் நடந்து வந்த சடங்குக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை மேற்கோள் காட்டப்பட்டது.

தடை நீக்கப்பட்டது ஏன்?

எச்சில் இலை மீது உருள்தல்

பட மூலாதாரம், வழக்கறிஞர் ராமகுரு

கடந்த 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவு பக்தர்கள் அல்லது பிரம்மேந்திர சபையின் அறங்காவலர்களின் கருத்தைக் கேட்காமல் வழங்கப்பட்டதால், இது செல்லாது என்று நவீன்குமார்‌ என்பவர் நீதிமன்றத்தை நாடினார். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 (1) -இன் கீழ் எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதற்கான உரிமை பாதுகாக்கப்படுகிறது என்றும் அவர் வாதிட்டார்.

இந்தச் சடங்குக்கு எதிராக 2015ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு தவறானது என்கிறார் நவீன்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமகுரு.

“இந்தச் சடங்கின்போது சாதிப் பாகுபாடு இருப்பதாகக் கூறி இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றுதான் 2015ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது சாதிப் பாகுபாடுகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் கூறிவிட்டது."

"மனித கண்ணியம் இந்தச் சடங்கால் பாதிக்கப்படுகிறது என்று எப்படிக் கூற முடியும்? பக்தியில் என்ன கண்ணியம் உள்ளது?" என்று கேள்வியெழுப்பும் அவர், "பக்தி என்பதே இறைவனிடம் முழுவதுமாகச் சரணாகதி அடைவதுதான். இந்நிகழ்வு காரணமாக சுகாதாரக் கேடு ஏற்படுவதாகக் கூறினால், இன்றைய தேதியில் ஒருவர் வீட்டைவிட்டு வெளியே வந்தாலே சுகாதாரக் கேடுதான்," என்று கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தனது தீர்ப்பில் தடையை நீக்கி உத்தரவிட்டார்.

"ஒரு நபர் தனது ஆன்மீக விருப்பத்தை அவர் பொருத்தமாகக் கருதும் விதத்தில் வெளிப்படுத்த முடியும். நிச்சயமாக, அது மற்றவர்களுக்குச் சொந்தமான உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதிக்கக்கூடாது. இந்த எல்லை கடக்கப்படாத வரை, அரசோ நீதிமன்றமோ ஒருவரின் செயலில் தலையிட முடியாது" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், தனியுரிமை என்பது பாலியல் மற்றும் பாலின தேர்வுகளுக்கு மட்டுமல்ல, ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிமன்ற உத்தரவு கூறுகிறது.

பாகுபாடுகளுடன் நடத்தப்படும் பிற சடங்குகளுடன் இந்த வழக்கத்தை ஒப்பிட்ட முந்தைய தீர்ப்பை நீதிமன்றம் நிராகரித்தது.

"அரசியலமைப்பின் 17வது பிரிவு கூறும் மனித கண்ணியத்திற்கான உரிமை மீறப்பட்டுள்ளது என்று (2015 உத்தரவைக் குறிப்பிட்டு) முடிவு செய்ய நீதிமன்றத்தின் முன் எந்த ஆதாரமும் இல்லை. மறுபுறம், நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட ஆவணங்கள் சாதிப் பாகுபாடு முற்றிலும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டின” என்று கூறியது. மே17ஆம் தேதி இந்தத் தீர்ப்பு வெளியானதை அடுத்து, மே18ஆம் தேதி ‘உருளை சேவை’ நடைபெற்றது.

இந்தத் தீர்ப்பு மேலும், "முருகனின் பக்தர்கள் பலர் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஒருவரின் நாக்கு, உதடு அல்லது முதுகின் தோலில் சிறிய கொக்கிகளைத் துளைப்பதன் மூலம் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். அதேபோல், அம்மன் பக்தர்கள் தீ மிதிப்பது, நெருப்புப் பானை தூக்குவது போன்றவற்றை மேற்கொள்கின்றனர். இவை தமிழ் மத கலாசாரத்தின் பிரிக்க முடியாத அம்சங்கள்,” என்றும் குறிப்பிட்டுள்ளது.

'ஏற்க முடியாத தீர்ப்பு இது'

எச்சில் இலை மீது உருள்தல்

பட மூலாதாரம், ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துரு

"சுத்தம் சோறு போடும் என்று சிறு பிள்ளைகளுக்கு பாலபாடம் நடத்தும் நாம், எச்சில் இலையில் உருள்வதை அடிப்படை உரிமையாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு.

"மக்களின் நம்பிக்கைகள் அனைத்தும் சடங்குகளாக மாறிவிட முடியாது. மத உரிமையை, அடிப்படை உரிமையாக ஆக்கிய அரசமைப்புச் சட்டத்தின் 25வது பிரிவு அதை பொது ஒழுங்கு, அறநெறி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு உட்பட்டதாகக் கூறியிருக்கிறது. குறிப்பிட்ட சடங்கு (அ) நடைமுறை சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று சொன்னால், அதற்கு அரசு தடை விதிப்பதோடு, அந்த உத்தரவுகளை நீதிமன்றம் செயல்படுத்த வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

உடன்கட்டை ஏறும் வழக்கத்துக்கு எதிராக 1987ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதை நினைவுப்படுத்தும் அவர், “கொரோனா பெருந்தொற்று பரவியபோது, ஆகம விதிப்படி கோவில்களில் அனுஷ்டானங்கள் நடைபெற அனுமதித்தாலும், பக்தர்கள் கோவில்களுக்குச் செல்ல அனுமதி இல்லை. அப்போது யாராவது, ‘நோய் தொற்றினாலும் பரவாயில்லை. என்னுடைய நம்பிக்கைதான் முக்கியம்’ என்று கோவிலுக்குச் செல்ல அனுமதி கேட்டிருந்தால், எந்த நீதிமன்றமாவது அனுமதித்திருக்குமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும், "சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வதை நீதிபதி சுவாமிநாதன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே சபரிமலையில் பெண்களுக்கும் அனுமதி வேண்டும் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியதை அவர் தவிர்த்துவிட்டார்."

தீர்ப்பை விமர்சிக்கும் திராவிடர் கழகம்

எச்சில் இலை மீது உருள்தல் - தனி மனித உரிமையா மனித நேயமற்ற செயலா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கலாமா என்று கேள்வி எழுப்புகிறார் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி.

“உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அதிகாரம் உண்டா? உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி எச்சில் இலை மீது உருள்வது மத அடிப்படை உரிமை, அதைத் தடுக்க முடியாது என்று உத்தரவு பிறப்பிப்பது சட்டப்படி குற்றச் செயல் இல்லையா?"

"உச்சநீதிமன்றத்தைவிட தனக்கு அதிக அதிகாரம் உண்டு என்று நினைக்கிறாரா? நீதிபதியின் மீது சட்டப்படியான நடவடிக்கை தேவை. அரசமைப்புச் சட்டம் 51 ஏ(எச்) அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், கேள்வி கேட்கும் உரிமை மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று கூறுகிறது,” என்கிறார் அவர்.

ஆனால், சட்ட வல்லுநர்களின் கூற்றுப்படி, ஒரே வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு உயர்நீதிமன்ற மாறாக தீர்ப்பளிக்க முடியாது. இருப்பினும், "வெவ்வேறு வழக்குகளாக இருந்தால், அந்தத் தீர்ப்பு நீதிபதியின் கவனத்திற்குச் சென்றதா, வழக்கின் தன்மைகள் என்ன என்பன கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்," என்று தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: