திங்கள், 20 மே, 2024

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது - என்ன நடக்கிறது?

  BBC News தமிழ் :இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.
இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியனும் அந்த ஹெலிகாப்டரில் இருந்ததாக கூறப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைவதில் சிக்கல் நீடிப்பதாக இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி கூறினார்.
ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை, இன்னும் எந்த தொடர்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் பனிமூட்டம் - மீட்புப் பணியில் சிக்கல்
கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது. உள்ளது.

அவசரகால மீட்புக் குழுவினருடன் இருக்கும் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர், தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் விமானத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறுகிறார்.

விபத்து நடந்தது எங்கே?
இரான் - அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவுடன் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கி.மீ. முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையில் மோதியுள்ளது.
இரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் எங்கே?
"பல்வேறு மீட்புக் குழுக்கள்" ஹெலிகாப்டரை இன்னும் தேடி வருவதாக இரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிடி தெரிவித்துள்ளார்.

இரானிய அரசு தொலைக்காட்சியில் பேசிய வஹிடி, "மோசமான வானிலை மற்றும் அப்பகுதியில் நிலவும் மூடுபனி" காரணமாக விபத்து நடந்த இடத்தை மீட்புக்குழு அடைய "நேரம்" ஆகும் என்று கூறுகிறார்.

"அனைத்தும் கட்டுக்குள் இருக்கிறது. மீட்புக் குழுக்கள் தங்கள் பணியைச் செய்து வருகின்றன. கூடிய விரைவில் மீட்புப் பணி நிறைவடையும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

இரானின் அவசர சேவைப் பிரிவு அளித்துள்ள தகவலின் படி, சம்பவ இடத்திற்கு 8 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் மோசமான வானிலை காரணமாக, மீட்புக் குழு சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.

மீட்புக் குழுவில் 3 பேரை காணவில்லை
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் 3 பேர் காணாமல் போய்விட்டதாக ரெட் கிரசண்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

தேடுதல் குழுக்கள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வானிலை விரைவில் "கடுமையான குளிராக" இருக்கும், மழையும் வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேடுதல் பணி இன்னும் தாமதமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
இரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம், Getty Images

இரான் அதிபருக்காக பிரார்த்திக்க வேண்டுகோள்

இரானின் அரசு தொடர்பு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், அதிபர் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு இரானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர் பயணம் செய்த வாகனத்தொகுதியில் இடம் பெற்றிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த நிறுவனம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

மஷாத் என்ற நகரில் அதிபர் ரைசி நலமாக இருக்க வேண்டி பலரும் பிரார்த்தனை செய்வதைக் காட்டும் காட்சிகளும் அரசு தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளன.

அஜர்பைஜான் 'ஆழ்ந்த' கவலை
இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்து பற்றிய செய்திகளைக் கேட்டதும், தான் "ஆழ்ந்த கவலை" அடைந்ததாக அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ் கூறியுள்ளார்.

இரான்-அஜர்பைஜான் எல்லையில் இரண்டு அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் இப்ராஹிம் ரைசியுடன் அலியேவும் உடனிருந்தார்.

"இன்று, இரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரைசிக்கு நட்பு ரீதியில் விடை கொடுத்தேன். அதன் பிறகு இரான் உயர்மட்டக் குழுவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் தரையில் மோதியது என்ற செய்தியால் நாங்கள் மிகவும் கவலையடைந்தோம்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மீட்புப் பணிக்கு தேவையான எந்த உதவியையும் வழங்க அஜர்பைஜான் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

    இரான் இப்ராஹிம் ரைசி தீவிர பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்ட கடுமையான மத குருவாகக் கருதப்படுகிறார்.
    63 வயதான ரைசி, 25 வயதில் இரான் தலைநகர் தெஹ்ரானில் துணை வழக்கறிஞரானார்.
    2014ம் ஆண்டில் இரானின் வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மாநில இன்ஸ்பெக்டரேட் அமைப்பின் தலைவராகவும், நீதித்துறையின் முதல் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
    ரைசி 2017ம் ஆண்டில் முதல் முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டு அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அந்த தேர்தலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
    2019 ஆம் ஆண்டில், ஆயதுல்லா காமனெயி அவரை நீதித்துறையின் சக்தி வாய்ந்த பதவிக்கு நியமித்தார்.
    அவர் ஜூன் 2021 இல் இரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: