செவ்வாய், 5 செப்டம்பர், 2023

உதயநிதி மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்!

மின்னம்பலம்  - Selvam  : செப்டம்பர் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, “டெங்கு, மலேரியா, கொரோனா போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும். எதிர்க்க கூடாது” என்று தெரிவித்திருந்தார். அவரது பேச்சு தேசிய அளவில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சனாதன தர்மம் குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கக்கோரி 14 ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்பட  260 முக்கிய பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.


அந்த கடிதத்தில், “சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது மட்டுமல்லாமல் தனது பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க மறுக்கிறார். அவரது வெறுப்பு பேச்சு இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக உள்ளது. நாட்டின் மதச்சார்பின்மையைக் காக்க அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது தாமதமின்றி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

தமிழ்நாடு அரசு உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து நீதிமன்ற உத்தரவுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வெறுப்பு பேச்சுக்களை தடுப்பதற்கும் பொது அமைதிக்கு களங்கம் ஏற்படாமல் இருப்பதற்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறோம். சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்வதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

செல்வம்

கருத்துகள் இல்லை: