tamil.filmibeat.com - Karunanithi Vikrama : –சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) தனது உயிரை காப்பாற்றியதே கமல் ஹாசன் என ஆர்.எஸ்.சிவாஜி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பாசமலர் உள்ளிட்ட படங்களை தயாரித்த எம்.ஆர்.சந்தானத்திற்கு பிறந்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. இவரது மூத்த சகோதரர்தான் இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதி. சந்தான பாரதியும், வாசுவும் இணைந்து பாரதி - வாசு என்ற பெயரில் படங்கள் இயக்கிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் உதவி இயக்குநராக சேர்ந்து சினிமாவுக்குள் நுழைந்தவர். இவருக்கு பி.வாசு பள்ளிக்கூட சீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்: உதவி இயக்குநராக இருந்த சிவாஜி பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பிறகு விக்ரம், சத்யா, ஜீவா, மைக்கேல் மதன் காமராஜன், மை டியர் மார்த்தாண்டம், குணா என பல படங்களில் நடித்திருக்கிறார். தனது எதார்த்தமான நடிப்பாலும், பக்குவமான முக பாவனைகளாலும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தவர் சிவாஜி.
கமலுடன் நெருக்கம்: கமல் ஹாசனுடன் நெருங்கி பழகியவர்களில் ஒருவர் ஆர்.எஸ்.சிவாஜி. கமலின் பெரும்பாலான படங்களில் சிவாஜிக்கு ஏதேனும் ஒரு கேரக்டர் ரிசர்வ் செய்யப்பட்டுவிடும். அன்பே சிவம் படத்தில் ஒரே ஒரு சீனில்தான் வருவார். ஆனால் அந்த சீனில் இவர் பேசும் டூ டூ டூ டூ என்ற வசனத்தின் மூலம் பல வருடங்கள் ரசிகர்களின் நினைவுகளில் இருக்கக்கூடியவர். அதுமட்டுமின்றி சவுண்ட் டிசைனராகவும் பணியாற்றியிருக்கிறார்.
அதுவும் கமல் கொடுத்ததுதான்: சவுண்ட் டிசைனராகும் வாய்ப்பையும் சிவாஜிக்கு கமல் ஹாசனே முதலில் கொடுத்தார். ஆளவந்தான் படத்தின் மூலம் ஆரம்பித்த அவரது சவுண்ட் டிசைனிங் பயணம் விருமாண்டி உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்தது. அவர் கடைசியாக லக்கிமேன் படத்தில் நடித்திருந்தார். சாய் பல்லவி நடித்திருந்த கார்கி படத்தில் அவருக்கு தந்தையாகவும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் கேரக்டரிலும் போல்டாக நடித்திருந்தார்.
உயிரிழப்பு: இந்தச் சூழலில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், "எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன்.
சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
உயிரை காப்பாற்றிய கமல்: இந்தச் சூழலில் ஆர்.எஸ்.சிவாஜியின் உயிரை ஏற்கனவே கமல் காப்பாற்றியிருக்கும் விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது, மருதநாயகம் படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது அலுவலகத்தில் இருந்திருக்கிறார் சிவாஜி. அப்போது தனது உடல்நிலை சரியில்லை என்பதை உணர்ந்துகொண்ட அவர் தனது நண்பருடன் ஸ்கூட்டரில் சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார். பிறகு அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.
கண் விழித்து பார்த்தபோது கமல் ஹாசன் எதிரில் நின்றிருக்கிறார். உடனே கமல், என்ன அங்கே வேலை அவ்வளவு கெடக்கு நீங்க இங்க வந்து படுத்துருக்கீங்க என சொல்லியிருக்கிறார். உடனே சிவாஜியோ இல்லை சார் நாளைக்கு வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு கமலையே பார்த்திருக்கிறார். அதனையடுத்து கமல் ஹாசன், "உங்கள் மண்டைக்குள் என்ன ஓடுகிறது என்பது எனக்கு தெரியும். மருத்துவமனையிலிருந்து நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகுறவரை அத்தனை செலவும் என்னுடையதுதான். மருத்துவர்களிடம் பேசிவிட்டேன். நீங்கள் பயப்பட வேண்டாம்" என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் சிவாஜிக்கு இதயத்தில் நான்கு அடைப்புகளாம்.
அதேபோல் கொரோனா சமயத்தில் வருமானம் இல்லாததால் மருத்துவ செலவுக்கு என்ன செய்வதென்று யோசித்த சிவாஜி, கமலுக்கு ஃபோன் செய்து தயங்கிக்கொண்டே விஷயத்தை சொல்லியிருக்கிறார். சரி என்று கமல் சொல்லிய பிறகு சிறிது நேரத்தில் ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து ஃபோன் செய்து என்னென்ன மருந்து வேண்டும் என்பது தொடர்பான விவரத்தை கேட்டு கடைசிவரை மருந்தை அனுப்பிக்கொண்டே இருந்தார்களாம். அதனால்தான் கடவுளுக்கு அடுத்து சிவாஜிக்கு எப்போதும் கமல்தான் முக்கியமாம். இந்தத் தகவலை ஆர்.எஸ்.சிவாஜி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக