தினமலர் : ஒரே தொகுதியை ஒரே கட்சிக்கு, பல ஆண்டுகளாக ஒதுக்கி தருவதால், அந்த பகுதிகளில் கட்சி வளர்ச்சியும், கட்சியினர் முன்னேற்றமும் பாதிக்கப்படுதாக தி.மு.க., தலைமை கருதுகிறது.
அதனால், வரும் லோக்சபா தேர்தலின்போது, கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளை, மீண்டும் அக்கட்சிகளுக்கே ஒதுக்கக் கூடாது என்பதில், ஆளும் கட்சி உறுதியாக உள்ளது.
மோதல்
குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு எட்டு எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்களில் பலர், தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு வருகின்றனர்.
அவர்களில் சிலர், அ.தி.மு.க., அனுதாபிகளாகவும் உள்ளனர். அவர்கள் மீண்டும் வெற்றி பெறுவதை, தி.மு.க., விரும்பவில்லை.
அதனால், அக்கட்சிக்கான தொகுதிகளை இம்முறை மாற்றித் தர திட்டமிட்டுள்ளது. அதாவது, தி.மு.க.,வுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் விசுவாசமாக இருப்போருக்கே, தொகுதிகளை ஒதுக்குவதில் இம்முறை முன்னுரிமை தரப்பட உள்ளது.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கரூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணிக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், ஒன்றரை ஆண்டுகளாகவே மோதல் நீடித்து வருகிறது.
செந்தில் பாலாஜியின் ஆதரவாளருக்கு, கரூர் லோக்சபா தொகுதியை ஒதுக்க வேண்டும் என, அம்மாவட்ட நிர்வாகிகள், மேலிடத்தில் பேசி உறுதி செய்து விட்டனர்.
அதன் காரணமாக, கரூர் தொகுதி முழுதும், தி.மு.க., வேட்பாளருக்கு தேர்தல் விளம்பரம் எழுதுவதற்காக, இப்போதே சுவர்களில் இடம் பிடித்து வைத்துள்ளனர்.
உள்ளூர் தி.மு.க.,வினரின் போக்கையும், எதிர்ப்பையும் அறிந்துள்ள ஜோதிமணி, திருச்சி அல்லது ஈரோடுக்கு மாற எண்ணுகிறார்.
கடும் போட்டி
அதேபோல், திருவள்ளூர் தொகுதி, எம்.பி., ஜெயகுமாருக்கும் சிக்கல் உள்ளது. அத்தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுள்ளார். அதனால், திருவள்ளுவருக்கு பதிலாக, காஞ்சிபுரத்தை காங்கிரசுக்கு ஒதுக்கலாம் என, தி.மு.க., திட்டமிடுகிறது.
ஈரோடு தொகுதி எம்.பி., கணேசமூர்த்திக்கு, ம.தி.மு.க.,வில் மீண்டும் 'சீட்' தர வாய்ப்பில்லை. பல ஆண்டுகளுக்கு பின், அந்த தொகுதியில், தி.மு.க., போட்டியிட விரும்புகிறது.
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக்தாகூருக்கு தொகுதி மாற வேண்டிய நெருக்கடி வரலாம். ஏனெனில், தன் மகன் துரைக்காக, விருதுநகரை பேசி வைத்துள்ளார் வைகோ.
முதல்வரும் சம்மதம் அளித்து விட்டதாக தெரிவதால், காங்கிரசில் சிவகங்கைக்கு கடும் போட்டி ஏற்படும். கார்த்தி சிதம்பரமும், மாணிக்தாகூரும் மல்லுக்கட்ட வேண்டிய நிலை உருவாகும்.
இது தலைவலியை தரும் என்பதால், சிவகங்கையை காங்கிரசுக்கு ஒதுக்காமல், தேனியை தரலாம் என நினைக்கிறது, தி.மு.க., தலைமை. பல ஆண்டுகளுக்கு பின், சிவகங்கையில் தி.மு.க., போட்டியிடும் கணக்கும் உள்ளது.
தடை
அதேபோல், திருச்சி தொகுதி எம்.பி., திருநாவுக்கரசர், மீண்டும் போட்டியிட விரும்பினாலும், அது கிடைப்பதற்கு, அமைச்சர் நேரு பெரிய தடையாக இருக்கிறார்.
நேரு தன் மகனை நிறுத்த விரும்புவதால், திருச்சி திருநாவுக்கரசருக்கு இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.
அதனால், ராமநாதபுரம் தொகுதிக்கு குறி வைக்கிறது காங்கிரஸ். அது கைமாறினால், முஸ்லிம் லீக் கட்சிக்கு மயிலாடுதுறை தரப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக