ராதா மனோகர் : திராவிட சினிமாக்கள் அரங்கேற்றிய சமூக புரட்சி பற்றி இன்று பெரிதாக பேசப்படுவதில்லை.
மாறாக ஆரிய பார்ப்பனீய சினிமாக்கள் ஏதோ மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களை விதைப்பதாக பொதுவெளியில் பரப்புரை நடக்கிறது
அன்றைய திராவிட சினிமாக்கள் வெறும் சமூக சீர்திருத்தங்களை தாண்டி ஒரு சிந்தனை புரட்சியை நடத்தி காட்டியிருக்கிறது
இன்று கூட நினைத்து பார்க்க தயங்கும் பல விடயங்களை திராவிட சினிமாக்கள் அன்றே மக்களின் மனங்களில் பதித்து விட்டிருக்கிறது
வட இந்தியாவில் மதவாதம் கொழுந்து விட்டு எரிகிறது . ஜாதியும் மதமும் கொலைகள் மூலம் விவாதிக்கப்படும் அளவுக்கு அவை தவறான பாதையில் வெகு தூரம் சென்றுவிட்டன
மறுபுறம் தென்னிந்தியாவை நோக்கினால் .. குறிப்பாக தமிழ்நாட்டை நோக்கினால் இந்த சிந்தனை வளர்ச்சி வெகு தெளிவாகவே தெரிகிறது
தென் இந்தியா கல்வியிலும் சமூக வளர்ச்சியிலும் பல மடங்கு முன்னே சென்று கொண்டிருப்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்
துணைக்கண்டத்தின் ஒட்டு மொத்த சினிமா வரலாற்றை நோக்கும் பொழுது திராவிட சினிமாவின் தாக்கம் பற்றி சிந்திக்காமல் நகரவே முடியாது
ஒரு மக்கள் நலன் சார்ந்த கோட்பாட்டை திரைப்படங்கள் மூலம் பெரிய அளவில் மக்களிடையே கொண்டு சென்றது திராவிட சினிமாக்கள்தான்
ஹிந்தி வங்காளி படங்கள் பல நல்ல கருத்துக்கள் செறிந்த சினிமாக்களை அளித்திருக்கிறது
ஆனால் மக்கள் நலன் சார்ந்த ஒரு அரசியல் கோட்பாட்டை சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் , அவர்களின் மனங்களில் பதியும் வண்ணம் திரைப்படமாகவும் அதில் வரும் பாடல்களாகவும் எடுத்து சென்று பெருவெற்றி பெற்றது திராவிட சினிமாக்கள்தான்
இந்த இடத்தில் எவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக கலைஞர் மு கருணாநிதி என்ற ஒரு யுக புருஷனின் பெயரை உச்சரித்தாக வேண்டிய கடமை இருக்கிறது
அவரின் ஒரு பராசக்தி ஏற்படுத்திய திராவிட சமூக சிந்தனை புரட்சி பற்றி படிக்காமல் எந்த மேதாவியும் திரைப்படங்கள் பற்றியும் பேச முடியாது
அரசியல் பற்றியும் பேச முடியாது சமூகம் பற்றியும் பேச முடியாது
கலைஞர் மு கருணாநிதியின் பராசக்தி படவிமர்சனம் . 1953 பங்குனி 3 ஆம் தேதி . யாழ்ப்பாணம் இந்துசாதனம் பத்திரிகை.
முழு விமர்சனமும் ஒரு படு பிற்போக்கான தாக்குதலாகவே வெளியாகி இருக்கிறது
அன்றைய சனாதன சிந்தனை போக்கை இந்த விமர்சனம் தெளிவாக காட்டுகிறது .
பராசக்தி இவர்களை எவ்வளவு நோகடித்திருக்கிறது என்பதை அறிய இந்த பதிவு உதவக்கூடும்
இந்து சாதனம் :1953 பங்குனி 3
பராசத்திப் படமாம்! புதுமை என்ற போர்வையில் பழிமொழி பரநிந்தை
பராசத்தியாம் அங்கு இடமில்லையாம் . என்று தெருவிலும் திண்ணையிலும் பேச்சு ஆரம்பத்து விட்டது
இப்படியே முன்னர் சிந்தாமணி பின்னர் வாழ்க்கை என்ற படங்கள் அபிமானத்தை கிளப்பின
இப்படத்தை போய் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. ஏதோ கண்டனமென்றும் சண்டமாருத சொற்பெருக்கென்றும் அதில உணர்ச்சி கொள்ள பலர் தூண்டியும் ஊக்கம் கொள்ளவில்லை.
காரணம் பராசத்தி என்ற புனை நாமம் .தெய்வப்பெயர் கொண்ட ஒர் கதை தெய்வத்தன்மையை சித்திரிக்கும் வகைதாயல்லவா இருக்கும் ?
அவ்வாறில்லாது ஒரு பொழுது போக்குக்கு உள்ளத்தை புலரசெய்யும்படித்தானது என்று ஊகிக்க தக்கதாயிருந்தது
ஆனால் இப்படம் மக்களிடையே விபரீத மனப்பான்மையை உண்டுபண்ணி விடுமென்றும் சைவ நிந்தை திரைமறைவில் நடைபெறுவதால் தீமையாகும் என்று பலர் அஞ்சி இந்துசாதனம்
இதழிலில் இதற்கான தடையை காணோம் என்று கவலை கொண்டார்கள் எனவே படத்தை பார்க்க நேர்ந்தது
உள்ளங்கை நெல்லிக்கனி போல் படக்கலையின் விட களஞ்சியம் (விஷ களஞ்சியம்) வெளிப்படையாயிற்று.
பட முயற்சியை கலை என்று பேச்சு வழக்கில் சொன்னோமேயன்றி இன்று தமிழுலகில் காணப்படும் படத்திறமை கலையின் பால் படாதென்றே கூறவேண்டும் .. என்னே?
காதல் .. கள்ளக்காதல் அதற்கேற்ற பாடல் . இதற்காக பல்யுத்தம் புகைவண்டி விசைவண்டி விபத்து. கடல் அல்லது ஏரியிற் கண்டம் ஆபாசமான செயகைகளுக்கு நிலையங்களாக கோயில்கள் இவையெல்லாம் சேர்ந்து படமாகிறது... கலையாகுமோ?
நிற்க, பராசக்தி என்ற மகுடம் கொண்ட படத்தின் உயிர் அம்சம் பராசக்தியாக இருக்கவேண்டுமே?
ஆனால் ஒரு காட்சி மட்டும் பராசக்தி கோயிலை காட்டி அங்குள்ள அர்ச்சகரின் அந்தரங்க கீழ்மையை வெளிப்படுத்தி விட்டு கதைக்கு பராசக்தி என்று பெயர் தீட்டிவிட்ட கதையாசிரியரின் திறமையே திறமை?
சிலம்பின் கதை சிலப்பதிகாரம் என்றால் அங்கு சிலம்பு உயிர் நரம்பாக உள்ளது. இவ்வாறு பல உள்ளது.
ஆகவே பொருத்தமற்ற பெயரை சூட்டி விட்டு பொதுமக்களுக்கு கருத்தமையை அபிமானம் ஊட்டும் இந்த வெள்ளித்திரை விசித்திரத்தை உண்டு பண்ணியவர்களின் உள்ளக்கிடைக்க புலனாகிறது.
உலகில் பல இன்னல்கள் விளைகின்றன. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன.
இவை எல்லாம் அரசாங்கத்தின் அட்டூழியத்தால் நிகழ்கின்றன என்றால் இது விபரீத கொள்கையா?
அன்றி புத்தி மாறாட்ட பொதுவுடைமை என்ற பொதுமடைமை புரட்டா?
ருஷ்யா தேசத்தில் சர்வாதிகாரத்தின் இருந்த இடமில்லாமல் போகும் படுகொலை அட்டூழியம் அல்ல
சாதிவெறி பிடித்து யூதர்களை வேரற களையும் சமூக கொலை அட்டூழியம் அல்ல.
ஒரு பெண் மணமுடித்து விதிவலியால் கணவனை இறக்க வாழ வழி தெரியாது நின்றால் இது அரசாங்க அட்டூழியமாம்.
மாடமளிகையில் இருந்து இந்திரபோகம் சுகித்த பெண் சகட கால் போல் வரும் செல்வ புரட்டால் ஏழையாகி விட்டால் ..
வயலில் வேலை செய்து . அன்றி கூலி தொண்டரடி வயிறு வளர்க்க கூடாதாம் . என்றும் ஏழைகளாக உள்ளவர் மட்டும் கூழுக்கு கும்மாளம் போட்டு பாத நொந்து மேனி வாட பாடுபடவேண்டுமாம்?
அரசாங்கத்தை அவதூறு செய்ய ... அதுவும் அறநெறி உத்தமர் காந்தி மகான் அடிச்சுவட்டில் நிற்கும் அரசியற் கட்சி நடாத்தும் ஆட்சியை ஏளனம் செய்ய முன்வந்த பராசத்தி படத்தின் ஒவ்வாமை ஒன்றிலா இரண்டிலா?
அவ்வளவில் நின்றுவிட கூடாதா?
சமயத்தையும் ஒரு காய் பார்த்து விடுகிறேன் என்று சமயம் பார்த்துவிட்டதே?
பராசக்தி கோயிலிலே பூசகர் அபிசார பேர்வழி என்றால் கோயிற் பரிபாலனம் எவ்வாறு அங்ஙனம் என்று கொள்வதா?
அன்றி பராசக்தி வணக்கத்திற்கும் பூசகருக்கும் என்ன தொடர்பு?
பூசகர் ஒருவன் காமாந்தகன் ஆனால் சமயமும் சமய கொள்கையும் சமய கோயில்களும் வியபிசார பீடங்களாகின்றனவா?
கதை சித்தரித்ததவர் தாம் கலா பண்டிதர் என்று உலகிற்கு காட்ட முன்வந்தவர் போல அவரது அலங்கோல பிரயத்தனங்கள் காட்டுகின்றன.
விகட விருப்புள்ள மாணவர்கள் ஆலயம் தொழுவது வேலை மெனக்கேடு,
அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல் என்று முதுமொழிகளை மாற்றி அமைப்பது போல.
ஏளன முறையில் பழையனவற்றை சொல்லி காட்டிய பாடல்களும் ஆடல்களும் அவற்றை ஆக்கியோரின் யோக்கியதையையும் போக்கினையும் எடுத்து காட்டுகிறது.
நட்ட கல்லை நாலு புட்பம் சாத்துகிறீர் என்று நையாண்டி செய்யும் நிரீசுவரவாத பொதுமடமையினார் தங்களை தெய்வம் என்று பொதுமக்கள் ஏன் மலர் மாலை சூடவில்லை என மனம் புழுங்குகிறார்களா?
இவர்கள் அறங்குன்றி மறம் நின்ற மிருக கொள்கையின் நடுகற்களாக விளங்குகிறார்கள் என்று நாம் சொல்லவேண்டியதில்லை..
(கொழும்பு மைலன் தியேட்டரில் 38 வது வாரமாக ஓடிக்கொண்டிருந்த பராசக்தி படத்தின் விளம்பரம் இது
இது தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. சரியாக எத்தனை வாரம் இலங்கையில் பராசக்தி ஓடியது என்ற விபரம் தெரியவில்லை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக