மின்னம்பலம் - christopher : ஐந்து நடிகர்களுக்கு தடை: அதிரடியில் இறங்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்!
தயாரிப்பாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்காத சில நடிகர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்று தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 18) நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் உள்ள சில நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றனர். இதனால் தயாரிப்பாளர்களுக்கு செலவும், நஷ்டமும் அதிகரிக்கிறது.
அதன்படி முதல் கட்டமாக ஒத்துழைக்காத ஐந்து நடிகர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர்கள், நடிகர் சங்கம் மற்றும் பெப்ஸிக்கும் கடிதம் அனுப்ப உள்ளோம்.
அப்போது நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கும் பின்னரும் நடிகர்கள் பழைய நிலையையே தொடர்ந்தால் அவர்களின் பெயர்கள் பொதுவெளியில் வெளியிட்டு அவர்களுடன் படம் எடுக்க தயாரிப்பாளர் சங்கம் தவிர்த்து விடும்” என்றார்.
மூன்று நாட்களுக்கு பிறகு விமர்சனம்
மேலும் அவர், “புதிய திரைப்படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு இருக்கும் கால அவகாசத்தை 28 நாட்களில் இருந்து அதிக படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறோம்.
இப்போது திரைப்பட விமர்சனங்கள் குறித்து ஊடகத்துறைக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம். குறைந்த்து 3 நாட்களுக்கு பிறகு விமர்சனம் செய்யும் படி வலியுறுத்தியுள்ளோம்.
சிறிய படங்களுக்கும் முறையாக திரையரங்குகள் கிடைப்பதற்கான பேச்சுவார்த்தையை திரையரங்க சங்கத்தினருடன் நடத்தி உள்ளோம்.
மேலும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிதி முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளது குறித்து முன்னாள் நிர்வாகத்தினர் மீது புகார் வந்துள்ளது. அது தொடர்பான சட்ட நடவடிக்கை தொடர தீர்மானம் இயற்றியுள்ளோம்” என்று தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக