tamil.samayam.com : முடியும் ரஷ்யா-உக்ரைன் போர்; இறங்கிய புதின்..
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் 10 மாதங்களாக தொடர்ந்தபடி உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரினால் இதுவரை 2 நாடுகளை சேர்ந்த 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்து உள்ளது.
இருந்தபோதிலும் ரஷ்ய ராணுவத்துக்கு உக்ரைன் வீரர்கள் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷ்யாவின் படைகள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்து உள்ளன.
இந்த போரில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த முக்கியமான உள் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே தான் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன் 2 நாடுகளிடமும் நல்ல நட்புறவு வைத்து இருப்பதால் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த விவகாரத்தில், சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பலமுறை ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோரை துருக்கிக்கு அழைத்து வர முயற்சி செய்து உள்ளார்.
மேலும் ரஷ்யா அதிபர் புதினுடன் துருக்கி அதிபர் எர்டோகன் இன்று மீண்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது உக்ரைன் மீதான போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று, புதினிடம் எர்டோகன் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதில் அளித்த புதின் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை ரஷ்யாவின் பிராந்தியமாக உக்ரைன் ஏற்றுக் கொண்டால் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் கூறி உள்ளார்.
இந்த தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. மேலும், புதிய பிராந்தியங்கள் குறித்த உண்மை நிலையினை கருத்தில் கொண்டு உக்ரைன் அதிகாரிகளின் நிபந்தனை மீது தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான ரஷ்யாவின் திறந்த நிலைப்பாட்டை புதின் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாக அதிபர் மாளிகை தெரிவித்து உள்ளது.
டோனெட்ஸ், லுகான்ஸ்க், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகளை முழுமையாக கட்டுப்படுத்தாவிட்டாலும் அவற்றை இணைத்துவிட்டதாக ரஷ்யா கூறும் நிலையில் உக்ரைன் அதிபர் இதை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்யாவின் பிராந்தியமாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் அது, நடக்க வேண்டும் என உலக நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக