மின்னம்பலம் - Aara : அதிமுக முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத்திடம் கடந்த ஆட்சியில் உதவியாளராக இருந்து வந்த குமார் குடும்பத்தினருக்கும், அமைச்சர் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட பிரச்சினை நேற்று (ஜனவரி 2) மோதலாக மாறியது.
பிரச்சினை பண்ருட்டி காவல் துறைக்கு போனதால், அமைச்சர் எம்.சி. சம்பத்தின் அண்ணன் தங்கமணி மற்றும் உறவினர் பால்காரர் பழனி, கள்ளிப்பட்டு ராஜேந்திரன் மற்றும் பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராஜேந்திரன் மற்றும் ராதா இருவரை நேற்று இரவு கைது செய்த பண்ருட்டி போலீஸார் மற்றவர்களையும் தனி டீம் போட்டுத் தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்று மட்டும் 10 பேர் என்ற அடிப்படையில் 2 ஆவதாக முன்னாள்
அமைச்சர் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார். ஏ2வாக சம்பத்
பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எம்.சி.சம்பத் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டதாக தெரிகிறது.
எம்.சி.சம்பத் சொத்து பிரச்சினை தொடர்பாக நமது மின்னம்பலத்தில் சுருட்டிய பணம் எங்கே? மாஜி அமைச்சர் குடும்பத்தினர் மீது வழக்கு! என்ற தலைப்பில் நேற்று வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் கடலூர் காவல் துறையைக் கண்டித்து இன்று (ஜனவரி 3)காலை 10 மணியளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள் அதிமுகவினர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “அமைச்சர் குடும்பம்தான் குமாரை வெளியில் அடையாளம் காட்டினார்கள். சம்பத் அமைச்சராக இருந்தபோது நம்பிக்கையானவர் என்பதால் தனது உதவியாளராக வைத்துக்கொண்டார்.
அப்போது சசிகலாவிடம் தொடர்பில் இருந்து வந்த குமார் கோடிகளில் புரளத் துவங்கினார். அதிமுக ஆட்சியில் இருந்த போது தனது பண்ருட்டி வீட்டில் ஏசி பெட்டிக்குள் சுமார் 60 லட்சம் பணத்தை பதுக்கி வைத்திருந்தார்.
இது அவரது மனைவிக்கே தெரியாது. அப்போது ஏசி சரியில்லை என்று மெக்கானிக்கை வரவழைத்தார் குமார் மனைவி.
அப்போது மிஷினை திறந்து பார்த்த மெக்கானிக் பணத்தை பார்த்ததும் அந்த மிஷினை கடைக்கு எடுத்துப் போய்விட்டார். அப்போது அது பெரிய பஞ்சாயத்து ஆகிவிட்டது. போலீஸுக்கே கொண்டுவரப்படவில்லை.
ஆட்சி மாறும் என யோசித்த சம்பத் குடும்பத்தினர், குமார் குடும்பத்தார் வசம் பணம், சொத்துகள் என அப்போதே ஒப்படைத்துள்ளனர். அதை இப்போது திரும்பக் கேட்கும்போது, குமார் குடும்பம் மறுத்துள்ளதால்தான் பிரச்சினை ஏற்பட்டது.
குமார் மற்றும் குடும்பத்தினரிடம் 200 ஏக்கர் நிலம், பிளாட்டுகள், ஏகப்பட்ட தங்கம் இருப்பதாக சொல்கிறார்கள். விசாரித்து வருகிறோம்.
முன்னாள் அமைச்சர் சம்பத் ஜாமீனுக்கு முயற்சி செய்து வருகிறார் என்றும் அதுவரை தலைமறைவாக இருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது ” என்கிறார்கள் போலீஸார்.
இந்த நிலையில் தன்னிடம் உள்ள சொத்துக்களைக் காப்பாற்றிக்கொள்ள, சம்பத்தின் அரசியல் எதிரியான பண்ருட்டி பன்னீர்செல்வத்தை சந்தித்து சால்வை போட்டு கைகோர்த்துள்ளார் குமார்.
இதனால் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் குடும்பத்தினருக்கு கோபம் உச்சத்திற்கு ஏறியுள்ளது என்கிறார்கள் கடலூர் அதிமுக வட்டாரத்தினர்,
–வணங்காமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக