இலக்கியா .நெட் :பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை திங்கட்கிழமை அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் பதவி விலகவுள்ளதுடன், முழு அமைச்சரவையும் பதவி விலகவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள்,உறுப்பினர்களை நாளை மாலை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக சுயாதீன தரப்பினர் குறிப்பிட்டனர்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளாந்தம் தீவிரமடைந்து வருகின்ற நிலைமையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மாளிகையில் அவசர அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது.
நாட்டின் தற்போதைய பொருளாதர மற்றும் அரசியல் பாதிப்பு,சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து ஆளும் தரப்பினர் மத்தியில் முரண்பாடான தன்மை காணப்படுவதாக அமைச்சர் நாலக கொடஹேவா குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை.
தற்போதைய நிலைமையில் பாராளுமன்றத்தை கலைத்து உடன் பொதுத்தேர்தலுக்கு செல்வது சிறந்த தீர்மானமாக காணப்பட்டாலும், நாட்டின் நிதி நிலைமை அதற்கு சாதகமானதாக அமையாது.
இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்து பொதுத்தேர்தலை நடத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்தி பொதுத்தேர்தலை நடத்துவது சிறந்த தீர்மானமாக அமையும் என அமைச்சர் ரமேஷ் பதிரன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தீவிரமடைந்துள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி அதனுடன் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பொருளாதார நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது சிக்கல் தன்மையில் உள்ளது என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
நடைமுறை நெருக்கடிகளினால் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமை பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதால் பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும்.
நெருக்கடியான சூழ்நிலையில் தொடர்ந்து முன்னோக்கி செல்ல முடியாத காரணத்தினால் பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பதவி விலகுவது நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்களான தினேஷ் குணவர்தன,விமலவீர திஸாநாயக்க ஆகியோர் பிரதமரின் கருத்தை ஏற்றுக்கொண்டு கருத்துரைத்துள்ளனர்.
நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்து விட்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பது குறித்து அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க,ரமேஷ் பதிரன சன்ன ஜயசுமன மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
தான் பதவி விலகுவது நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக அமைந்தால் தான் பிரதமர் பதவியில் இருந்து விலகி எதிர்க்கட்சி பக்கம் அமர தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவி விலகினால் புதிய அமைச்சரவை சுயமாகவே கலைவடையும்.பிரதமரின் பதவி விலகல் நாளை அல்லது எதிர்வரும் ஓரிரு நாட்களில் இடம்பெறவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக