வெள்ளி, 13 மே, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது, அமைச்சர் கே.என்.நேரு அதிருப்தி?

tamil.samayam.com  :  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது, அமைச்சர் கே.என்.நேரு அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றிப் பெற்றதை அடுத்து, தமிழக முதலமைச்சராக, முதன் முறையாக, கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி, அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி ஏற்றது.
அப்போது நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை என, இரண்டு துறைகளாக, உள்ளாட்சித் துறை பிரிக்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக, திமுக மூத்தத் தலைவர் கே.என்.நேரு நியமிக்கப்பட்ட நிலையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக, பெரிய கருப்பன் நியமிக்கப்பட்டார்.



இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. இதை அடுத்து, தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்கும் வேலைகள் படு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி உறுப்பினரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை, அமைச்சரவையில் சேர்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
எடப்பாடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்: இவ்வளவு நாள் இதை மறந்துட்டோமே!

அவருக்கு, உள்ளாட்சித் துறை இலாகாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக, நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளை, உள்ளாட்சித் துறை என ஒருங்கிணைத்து, உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க திமுக தலைமை முடிவு செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது. கே.என்.நேரு, பெரிய கருப்பன் ஆகியோருக்கு புதிய துறைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

நகர்ப்புற வளர்ச்சித் துறை கைவிட்டுப் போவதால், அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய மண்டலத்தில் ஏற்கனவே அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி என, இரு முக்கிய துறைகளின் அமைச்சர்கள் இருக்கும் நிலையில், மூன்றாவதாக எஸ்.எஸ்.சிவசங்கரும் வந்ததால், ஏற்கனவே அதிருப்தியில் இருந்த அமைச்சர் கே.என்.நேரு, தற்போது இந்த விவகாரத்தால் மேலும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை: