செவ்வாய், 17 மே, 2022

ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் மன்மோகன் சிங்?

ஐ.நாவின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்: ரணில் விக்கிரமசிங்க -  | lanka4.com | லங்கா4.கொம்

Nadarajah Kuruparan  : விழுந்து கிடந்த ரணிலை தூக்கி நிறுத்தியது எதிர்கட்சிகளே!
“மயிரைக் கட்டி மலையை இழுத்தால் வந்தால் மலை போனால் மயிர் –  இழுத்தார் ரணில், வந்தது மலை!”
இலங்கையின் அரசியல் யாப்பில் பிரதமராக  நியமிக்கப்பட்டதன் பின் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என எங்கும் சொல்லப்படவில்லை என நினைக்கிறேன் (அவ்வாறு  இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன்)
நாடாளு மன்றில்  பெரும்பான்மை உள்ளவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் – அரசியல் யாப்பு விதியும் கூட.
அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் ஜனாதிபதி பிரதமராக நியமித்த ஒருவர் தனது பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால் எதிர்கட்சிகள் வாக்கெடுப்புக்கு கோரி வாக்கெடுப்பு நடத்தலாம்.


ஆனால் JVP தவிர்ந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன, சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிர்ப்த்தியாளர்களான G10 குழுவினர், இறுதியாக சஜித் பிரேமதாஸா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி யாவுமே பிரதமரை ஆதரிப்பதாகவும், அமையவுள்ள தேசிய அரசை ஆதரிப்பதாகவும் இணங்கியிரக்கிறார்கள்.
அதுபோல தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமராகவோ, அமைச்சராகவோ முடியாதென அரசியல் அமைப்பில் எங்கும் சொல்லப்படில்லை.
1978ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பு விதிகளின் படி நாடாளுமன்றில் உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்தால், அவர் நாடாளுமன்றால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வமான உறுப்பினரே.
இந்திய அரசியல் அமைப்பில் மாநில சட்டசபை உறுப்பினர் அல்லாத ஒருவரோ, நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரோ அவர்களின் கட்சியால் முதலமைச்சராகவோ, பிரதமராகவோ நியமிக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் ஒரு தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றிபெறவேண்டும்.
அண்மைய மேற்கு வங்க தேர்தலில் தனது தொகுதியில் தோல்வியடைந்த மம்தாபானர்ஜி முதலமைச்சரானார். பின்னர் மற்றுமொரு தேர்தல் தொகுதியின் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று பதவியை தொடர்கிறார்.  ஜனநாயகத்தில் இதற்கான வாய்ப்புகள் உண்டு.
தவிரவும் ரணிலை பிரதமராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தை – டீல் 2 மாதங்களாகவே நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண கூறியிருந்தார். சஜித் பிரேமதாஸாவை முறைப்படி ஜனாதிபதி கேட்கவில்லை என்றும் சொன்னார்.
ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சஜித்தையோ, அல்லது அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரவரிடமோ பிரதமர் பதவியை கொடுக்க மாட்டேன் என எங்கும் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை.
அத்துடன் நாடாளுமன்றில் பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் எவருக்கும் பிரதமர் பதவியை, அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் என கோட்டாபய வெளிப்படையாக ஊடகங்களிலும் அறிக்கைகளிலும் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் கள்ளர்களுடன் ஆட்சி செய்ய முடியாது என ஆரம்பத்தில் இருந்தே சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் தெரிவித்து வந்தன.
பின்னர் இந்த இரண்டு கட்சிகளும் ஜனாதிபதியிடம்  நிபந்தனைகளை முன்வைத்து அதற்கு இணங்கினால் ஆட்சியை பொறுப்பெற்பதாக தெரிவித்தனர்.
ஆக அரசாங்கத்தையும், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும், ஜனாதிபதியையும்,  ராஜபக்ஸக்களையும் எதிர்த்த எதிர்க்கட்சிகளிடமும், பொதுஜனபெரமுன கட்சியின் பங்காளிகளிடமும் குறைந்த பட்ச இணக்கப்பாடுகளோ, வேலைத்திட்டமோ இருக்கவில்லை.
"கோட்டா கோ கம", "மைனா கோ கம" உள்ளிட்ட நாடு தழுவி எழுந்த மக்கள் போராட்டங்களினால் ஜனாதிபதியும், பிரதமரும், ஆளும் தரப்பினரும் தூக்கியெறியப்படுவார்கள் என அதிர்ப்தியாளர்கள் நம்பினார்கள்.  
அவ்வாறான சூழலில் நாடு ஒரு பொதுத்தேர்தலுக்கு சென்றால் மக்களின் எதிர்பலைகளை தமக்கு வாக்குகளாக மாற்றி ஆட்சிக்கு வரலாம் என பகற்கனவு கண்டார்கள்.
நாடு தழுவிய ஒருமித்த பலமான கிளர்ச்சியினால் ஜனாதிபதி தானாக பதவி விலகினாலே அல்லாமல், அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியை பதவி விலக்குவது என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது எனதெரிந்திருந்தும், பொருத்தமான காத்திரமான முடிவை எடுப்பதற்கு பதில் நிபந்தனைகளை விதிப்பதில் காலத்தை போக்கினார்கள்.
உண்மையில் ஜனாதிபதி பிரதமர் பதவியை வழங்குவாரா? வழங்க மாட்டாரா என்ற விவாதங்களை விடுத்து ஆளும் தரப்பிற்கு அடுத்தபடியாக அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட எதிர்கட்சி களத்தில் இறங்கி ஆட்சியமைக்க தயார் என எழுத்து பூர்வமாக ஜனாதிபதியிடம் கடிதத்தை வழங்கி இருக்க வேண்டும். அதனை ஊடகங்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதன் பின்பும் அவர் ரணிலிடம் பிரதமர் பதவியை கொடுத்திருந்தால் ஜனாதிபதி நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு இருப்பார்.  அதற்கான வாய்ப்பை எதிர்கட்சிகள் கையில் எடுக்கவில்லை.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்திக்கும், சஜித் பிரேமதாஸாவுக்கும் நாட்டை ஆளுவதற்கு முடியாது என, தமது அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம்  விளம்பரப்படுத்தி உள்ளனர். ஆரம்பத்தில் சஜித்திற்கு ஆதரவாக எழுதிய ஊடகங்கள் கூட இப்போ அவரை விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இங்கே ரணில் விக்கிரமசிங்கவினதும், ராஜபக்ஸக்களினதும், Political Gameற்கு எதிர்கட்சிகளும், அதிர்ப்த்தியாளர்களும் ஈடுகொடுக்க முடியமல் தத்தளிக்கின்றனர் என்பதனை நாட்டுமக்கள் கண்முன்னே காண்கின்றனர்.
ஆக ரணில் மயிரைக் கட்டி மலையை இழுத்தார் மயிர் போகவில்லை மலை வந்தது. இனியும் கூட  தனது  Political Gameல் தோற்றுப் போனால் மயிர்தானே போனது என சிரித்துக்கொண்டு இருப்பார். காரணம் இப்போது பிரதித் தலைவராக இருக்கும் தனது மருமகன் ருவான் விஜயவர்த்தனவிடம் பலமான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை ஒப்படைக்க வேண்டும் என்ற கனவில் 50 வீதத்தையாவது அடைவதற்கு இந்த சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்திக் கொள்வார். அத்துடன் அரசியலில் அமைதிகொள்வதில் அவருக்கு முரண்பாடு இருக்காது என நம்புகிறேன்

கருத்துகள் இல்லை: