புதன், 18 மே, 2022

ஸ், ஷ், ஜ், ஹ், க்ஷ், ஸ்ரீ போன்ற ஒலிகளும் எழுத்துகளும் தமிழில் இருந்த ஒலிகள்தான்

No photo description available.

Ravanan Ambedkar :  ஸ், ஷ், ஜ், ஹ், க்ஷ், ஸ்ரீ போன்ற ஒலிகளும் எழுத்துகளும் தமிழுக்கு உரியன அல்ல என்று தனித் தமிழ் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள்.
இவர்களுக்கு ஒலியியல் மொழியியல் ஆகியவற்றில் போதிய பயிற்சி இல்லாமையால் இப்படி உளறிக் கொண்டு இருக்கின்றர்.
இந்த ஒலிகளில் ஷகரம், க்ஷகரம் தவிர மற்ற எல்லாமே தமிழிலும் உண்டு. ஆனால் அவற்றுக்கு நாம் முற்காலத்தில் தனி எழுத்துகளை உருவாக்கி வைக்கவில்லை
வெகு பிற்பாடே ஒலி வேறுபாட்டை கான்பிக்க தனி எழுத்துகளை உருவாக்கினார்கள்.
இசை, விசை, தசை, கசை போன்ற சொற்களில் நாம் ஸகரத்தைதான் ஒலிக்கிறோம். இவைகளை முறையே இஸை, விஸை என எழுதினாலும் குடிமுழுகி விடாது.
மஞ்சை, தஞ்சை, பஞ்சம், தஞ்சம் போன்ற சொற்களில் நாம் ஜகரத்தை ஒலிக்கிறோம். இவைகளையும் நாம் மன்ஜம், தன்ஜம் என எழுத முடியும்.


எஃகு, அஃது, ஆஃகு, மூஃப்பது போன்ற சொற்கள் ஸங்க காலத்தில் அதிகமும் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் பயன்படுத்தும் ஆஃய்தம் ஹகரத்தை ஒலிக்கும். காலப் போக்கில் நாம் ஆஃய்தத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருந்ததால் நமக்கு அந்த ஒலி தமிழ் அல்ல என்று தோன்றுகிறது. இன்றும் தென் தமிழகத்தில் வந்தாஹ, போனாஹ என ககரத்தை ஹகரம் ஆக்கி ஒலிப்பது மக்கள் வழக்காற்றில் உள்ளது. இதை நாம் வந்தாஃக, போனாஃக என ஆய்தம் பயன்படுத்தியோ, ஹகரம் பயன்படுத்தியோ எழுத முடியும். தமிழில் ககரம் - ஹகரமாவதை போல கன்னடர்கள் பகரத்துக்கு மாற்றாக ஹகரத்தை பயன்படுத்துகிறார்கள். பள்ளி - ஹள்ளி, புகை - ஹொகெ என.

அடுத்து ஸ்ரீ என்பது தமிழல்ல என்போருக்கு அது தூய தமிழ் சொல்தான் என தெரிவித்துக் கொள்கிறேன். பழைய தம்மலிபி கல்வெட்டுகளில் அது சீரி என எழுதப்பட்டுள்ளது. சீர், சீரான, சீரிய ஆகிய சொற்களின் பொருளிலேயே ஒருவரை போற்ற முன்னொட்டாக அது பயன்படுத்தப்பட்டுள்ளதை வட இந்தியா முதல் தென் தமிழகம் வரை உள்ள கிபி. 7 நூற்றாண்டிற்கு முன்பான கல்வெட்டுகளில் காணப்படுகிறது. பாலியிலும், தமிழிலும் சீரி என்பதற்கு ஒரே பொருள்தான். இரண்டெழுத்தகளாக இருந்ததை பல்லவ கிரந்தம் தோன்றிய பொழுது ஒரெழுத்தாக மாற்றி ஸ்ரீ என்றாக்கி விட்டனர். ஆக இதுவும் தமிழுக்கு பொருந்தும் சொல்/எழுத்துதான்.

ஷகரமும், க்ஷ்கரமும்தான் தமிழ் ஒலியியலில் முற்றிலும் இல்லாத ஒலிகள். வட மொழியான பாலியிலும் இவ்வொலிகள் கிடையாது. மபி, உபி, பீகார் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் வாய் புழக்கத்திலும் இவ்வொலிகள் கிடையாது. பண்டைய இந்தியாவின் வடமேற்கான இன்றைய பாகிஸ்தான்/ஆஃப்கனிஸ்தான் பகுதி மக்கள் புழக்கத்தில் இவ்வொலிகள் இன்றும் உள்ளன.
மகாயான பெளத்தம் அந்த பகுதிகளில் செழித்து ஓங்கிய காலத்தில் மகாயானிகளால் உருவாக்கப்பட்ட சமஸ்கிருத மொழியில் இவ்வொலிகள் கலந்து இன்றைய இந்தியாவின் பிற நிலப் பகுதிகளுக்கு பரவியது. ஆனாலும் அது எழுத்து/இலக்கிய வடிவில் மட்டும்தான் இருக்கின்றனவே தவிர மக்கள் வழக்கில் இல்லை. இந்த இரு ஒலிகளும் கொண்ட சொற்கள் இந்திய மொழிகளில் அரிதினும் அரிதாகவே காணக் கிடைக்கின்றன. தமிழில் ஸுத்தமாகவே இல்லை என சொல்லலாம்.

இப்போது நாம் அடிப்படையான கேள்வியை எழுப்புவோம். ஏன் இந்த ஒலிகளுக்கான வரிவடிவங்கள் எல்லாம் தமிழைத் தவிர மற்ற இந்திய மொழிகளில் இருக்கின்றன தமிழில் கிடையாது என்றால்... இவ்வொலிகளில் தொடங்கும் சொற்கள் மற்ற மொழிகளில் நிறைய உருவாகி இருக்கின்றன. தமிழில் இவ்வொலிகள் எப்போதும் மொழிமுதலாகாது. இடையில்/இறுதியில்தான் வரும்.ஆகவே தமிழர்கள் தங்களுக்கு இப்படி தனி எழுத்துகள் தேவையில்லை என கருதியிருக்க கூடும். ஆனால் பாருங்கள் தொல்காப்பியரின் கூற்றுப்படி சகரம் தமிழில் மொழி முதலாகாது. குறைந்தபட்சம் அவர் காலத்தில் இல்லை! சக்கரை, சக்கரம், சதங்கை போன்ற சொற்கள் பிற்காலத்தில் தமிழில் சேர்ந்து கொண்டன. ஸங்கம், ஸமம், ஸதிர் போன்ற சொற்கள் வந்து சேர்ந்த பொழுது அவற்றுக்கும் ஒரே வரிவடிவமாக சகரத்தை மட்டுமே பயன்படுத்திக் கொண்டோம். பிற்காலத்தில் ஒலி வேறுப்பாட்டை காட்ட ஸகரத்தை உருவாக்கிக் கொண்டோம். ஸகரம் தமிழ் இல்லையென்றால் சகரமும் தமிழ் இல்லை என சொல்லி விட முடியும்.

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு ஐகரமும், ஒளகரமும் கூட தமிழில் கிடையாது, பாலியிலும் கிடையாது. இவையும் பெளத்த சமஸ்கிருதத்தின் கொடைகளே. இந்திரன் ஐந்திரன், புத்தம் பெளத்தம் என காந்தாரப் பகுதிகளில் திரிந்து தமிழுக்கு வந்து சேர்ந்த ஒலிகளே. ஐகரமும், ஒளகரமும் இல்லாமல் கூட தமிழால் இயங்க முடியும். ஐயா - அய்யா, ஒளவை - அவ்வை என புழங்கலாம். ஆனால் ஒரு மெல்லிய ஒலி வேறுபாடு இருக்கும்.
இது போலவே றகரமும், னகரமும் கூட வெகு பிற்கால சேர்கைதான். இவை இல்லாமல் கூட மாட்ரம், குட்ரம், சீட்ரம், மநம், சிநம் என எழுதலாம். இவற்றிலும் மெல்லிய ஒலி வேறுபாடு இருக்கும். இந்த வேறுபாடுகளை சுட்டதான் புதிய எழுத்துகளை உருவாக்கிக் கொள்கிறோம்.

இப்படி புதிய ஒலிகளுக்காக புதிய எழுத்துகளை உருவாக்குவதும் சேர்த்துக் கொள்வதும் சரியா தவறா என்பது பன்னெடுங்காலமாக நடக்கும் விவாதம். இது பெரும்பாலும் மொழியையும் இலக்கணத்தையும் எக்காலத்திலும் மாறாமல் இருக்க வேண்டும் என நினைக்கும் பழமைவாதிகளால் தான் முன்னெடுக்கப்படும். வெகுமக்கள் ஸாதாரனமாக ”ஸனிக்கிழமை ஆச்சு ஸரக்கடிக்க போலாம் மாம்ஸ்” என ஜாலியாக ஜோடிப் போட்டுக் கொண்டு தங்கள் ஜோலியை பார்க்கப் போவார்கள்.

கருத்துகள் இல்லை: