மின்னம்பலம் : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டிருக்க பேரறிவாளன் நேற்று மே 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருக்கும் கைதிகளின் தண்டனையைக் குறைப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கா, ஆளுநருக்கா, ஒன்றிய அரசுக்கா, குடியரசுத் தலைவருக்கா என்ற சட்ட ரீதியாக எழுந்த பல கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறது உச்சமன்றத்தின் தீர்ப்பு.
இந்த நிலையில் மறைந்த தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் 2016ஆம் ஆண்டு இந்தச் சட்டப் பிரச்சினை தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எதிரொலிக்கின்றன.
2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் பேரறிவாளன் சிறைக்குள் தாக்கப்பட்டது பற்றி கலைஞர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில், "அரசியல் சாசனத்தின் 161ஆவது சட்டப் பிரிவின்படி மாநில அமைச்சரவையே பேரறிவாளனை விடுவிக்க முடியும்" என்று குறிப்பிட்டிருந்தார் கலைஞர். தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
2016 செப்டம்பர் 14ஆம் தேதி கலைஞர் வெளியிட்ட நீண்ட அறிக்கையில்,
"தமிழகச் சட்டப்பேரவையில் 30-8-2011 அன்று ஜெயலலிதா 110வது விதியின்கீழ் படித்த அறிக்கையில், கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற, மேதகு ஆளுநர் அவர்கள் 21-4-2000 அன்று ஒப்புதல் அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். அதே முறையில்தான் இந்த மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டு மென்ற அக்கறையுடன் தமிழக அரசும், ஜெயலலிதா வும் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டுமென்று நானும், தமிழகத்திலே உள்ள வேறு சில கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி என்ற நால்வரில், நளினிக்கு தூக்குத் தண்ட னையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான முறையான ஏற்பாடுகளைத் தி.மு. கழக அரசு செய்தது - இன்றைக்கும் நமக்கு மன ஆறுதலைத் தருகிறது. ஒரு பெண் என்பதால் - மேலும் ஒரு குழந்தையின் தாய் என்பதால் - நளினிக்குக் கிடைத்துள்ள அந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டு - இருபதாண்டு காலத் திற்கு மேலாக ஆயுள் தண்டனையை நிறைவு செய்து விட்ட கைதிகளாகச் சிறையிலே இருந்து வாடும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இவர்களை, தொடர்ந்து கைதிகளாகவே அடைத்து வைத்திருக்காமல் அவர்களை விடுவித்திடவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; கருணை காட்டப்பட வேண்டும்; அவர்கள் மீது சாற்றப்பட்ட குற்றம் மிகப் பெரியது என்ற போதிலும், அவர்கள் அனுபவித்த மிக நீண்ட தண்டனைக் காலத்தைக் கருதிப் பார்த்து மனிதாபிமானத்தோடு மன்னிக்க முன் வர வேண்டும் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன்; இப்பொழுதும் அதையே கூறுகிறேன்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி. சதாசிவம் கூறும்போது, "எங்களது தீர்ப்பில், மூன்று குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக நாங்கள் எதுவும் கூறவில்லை. சம்பந்தப்பட்ட மாநில அரசு வழக்கமான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம்.
அந்த நடைமுறைகளின்படி குற்றவாளிகள் முறைப்படி கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதன் பின் மாநில அரசு சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத் திடம் அறிக்கை கோர வேண்டும். அதன் பின்னரே உரிய முடிவெடுக்க வேண்டும். குற்றவாளிகள் விடுதலை செய்யப்படக் கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. எல்லாவற்றுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அவற்றைத் தான் பின்பற்ற வேண்டும்.
இது தொடர்பான சட்ட நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்க வேண்டும்" என்றெல்லாம் நீதிபதி கூறியிருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, நம்முடைய மாநில அரசுதான் இந்தப் பிரச்சினையை சட்டப்படி முறையாக அணுகவில்லை என்று தெரிகிறது.
"மிகவும் தாமதமாகிவிட்ட இந்த நிலையிலாவது இவர்களை விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு முறைப்படி மூத்த வழக்கறிஞர்களோடு கலந்தாலோசனை செய்து, மத்திய அரசின் அனுமதியினைப் பெற்று, தண்டனை பெற்றவர்களை விதிமுறைகளை அனுசரித்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டிட வேண்டும்" என்று சில மாதங்களுக்கு முன்பு கூட நான் அறிக்கை விட்டிருந்தேன். ஆனால் தமிழக அரசு இந்தப் பிரச்சினை பற்றி எந்த வழக்கறிஞரிடமும் ஆலோசனை கேட்டதாகத் தெரியவில்லை.
2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ராஜீவ் கொலையாளிகள் அனைவரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435ன் கீழ் விடுதலை செய்யப்போவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார் ஜெயலலிதா. அந்த அறிவிப்பில் சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் மத்திய அரசைக் கலந்தா லோசிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால், இந்த முடிவு குறித்து மத்திய அரசுக்குத் தெரிவித்திருப்பதாகவும், மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் முடிவு தெரிவிக்க வில்லை என்றால், மாநில அரசுக்கு உள்ள அதிகா ரத்தைப் பயன்படுத்தி, ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாகவும் சட்டப்பேரவையில் அறிவித்தாரா? இல்லையா? ஏன் இதுவரை விடுதலை ஆகவில்லை?
இந்த அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணையில் இருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், கோவைக்கு வருகை தந்திருந்த சதாசிவம், தமிழர்களின் விடுதலை தொடர்பாக ஒரு நல்ல தீர்ப்பு வரும் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
இவ்வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில், மத்திய அரசின் முன் அனுமதி பெற்ற பிறகே மாநில அரசு விடுவிக்க முடியும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435க்கு விளக்கமளித்து தீர்ப்புக் கூறியது.
தமிழக அரசு ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கப் பிறப்பித்த உத்தரவு சரியா தவறா என்பதை விசாரித்து தனியாக தீர்ப்பளிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அந்த வழக்கை மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த கலைஞர்... தொடர்ந்து,
"குற்றவாளிகளுக்குத் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய மாநில அரசுக்கு குற்றவியல் நடை முறைச் சட்டம் 435ஐத் தவிர அரசியல் சாசன சட்டப் பிரிவு 161ன் படி அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தின் படி மாநில அரசு அமைச்சரவையைக் கூட்டி விவாதித்து, விடுதலை செய்வது என்று முடிவெடுத்து மாநில ஆளுநருக்கு அனுப்பி விடுதலை செய்ய முடியும். 161வது பிரிவின் கீழ் மாநில அரசுக்கு உள்ள உரிமைகள் இது வரை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டதில்லை.
மேலும், அரசியல் சாசனப் பிரிவு 161ன்படி விடுதலை செய்வதில், குற்றவாளிகளின் வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்ததா, மாநில போலீஸ் விசாரித்ததா என்பது போன்ற நிபந்தனைகளும் இல்லை. அது மாநில அரசுக்கு வழங்கப்பட்ட முழுமையான அதிகாரம். ஆனால் இந்த அதிகாரத்தை ஜெய லலிதா பயன்படுத்தாமல், மீண்டும் குற்றவியல் நடை முறைச் சட்டத்தில் உள்ள 435வது பிரிவு அதிகாரத் தைப் பயன்படுத்தியே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா அல்லது மாநில அரசுக்கு இருக்கிறதா? என்ற வழக்கில், சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் முன் அனுமதி பெற்றே குற்றவாளிகளை விடுவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், குற்றவாளிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவு 161 வழிவகுக்கிறது. இதைப் பயன்படுத்தி, யாரையும் கேட்காமல் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் தான் தற்போது பேரறிவாளன் சிறைக்குள்ளே கடுமையாகத் தாக்கப்பட் டுள்ளார். அவர் தாக்கப் பட்டதற்கு சிறைத் துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அ.தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு தக்க மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.
உடனடியாக பேரறிவாளனையும், அவருடன் கைதானவர்களையும் சிறையிலிருந்து விடுவிக்க, தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 161 இருக்கும்போது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 435ஐத் தேடி அலைவானேன்? வெண்ணெயைக் கையிலே வைத்துக் கொண்டு, நெய்க்காக யாரும் அலைவரா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார் கலைஞர்.
ஆறு வருடங்களுக்கு முன்பு கலைஞர் குறிப்பிட்ட இந்த சட்டப்பிரிவை 2022ஆம் வருடம் மே 18ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில்...
"மாநில அரசின் அறிவுரைக்கு கட்டுப்பட்டே அரசியலமைப்பு சாசனத்தின் 161ஆவது அதிகாரத்தை கவர்னர் செயல்படுத்த முடியும். இதை இந்த கோர்ட்டு பிறப்பித்த பல்வேறு தீர்ப்புகள் உறுதி செய்கின்றன. ஒரு சிறைக்கைதியை விடுவிக்க அமைச்சரவை முடிவு எடுத்து அதை கவர்னருக்கு பரிந்துரைக்கும்போது, அரசியலமைப்பு சாசனத்தின் 161ஆவது அதிகாரத்தை கவர்னர் செயல்படுத்தாமல் இருந்தாலோ, விவரிக்க முடியாத கால தாமதம் செய்தாலோ அவற்றை கோர்ட்டு விசாரணைக்கு உட்படுத்த முடியும்.
இதன்படி அரசமைப்புச் சட்டம் 142ஆவது பிரிவு நீதிமன்றத்துக்கு அளித்த சிறப்பு அதிகாரத்தின் படி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக