BBC Tamil : 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு போலியான நடவடிக்கை என்று அது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆணையத்தின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதிவு செய்து கொண்டது. அந்த அறிக்கையை சீலிட்ட கவரிலேயே வைத்திருக்க வேண்டும் என்று தெலங்கான அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அந்த அறிக்கையை வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் பகிருமாறும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த் ஷர்மா, ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
"இந்த விவகாரத்தில் அறிக்கை அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் விடுத்துள்ள கோரிக்கை அடிப்படையிலும் அடுத்த கட்ட நடவடிக்கையை தெலங்கானா உயர் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்," என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னதாக விசாரணை ஆணையத்தின் வழக்கு தொடர்பாகப் பேசிய நீதிபதிகள், "இது என்கவுன்டர் வழக்கு தொடர்பானது. இங்கு வைக்க எதுவும் இல்லை. ஆணையம் சிலரை குற்றவாளிகள் என்று கண்டறிந்துள்ளது. இந்த விஷயத்தை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப விரும்புகிறோம்" என்று தெரிவித்தனர்.
விளம்பரம்
இது குறித்து தங்களுடைய உத்தரவில், "வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும், இந்த வழக்கை எங்களால் கண்காணிக்க முடியாது. விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் மீது என்ன விதமான சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் கேள்வி. அவர்கள் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். எனவே, தமது அறிக்கையின் நகலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் வழங்க ஆணையத்தின் செயலகத்துக்கு உத்தரவிடுகிறோம்," என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆணையத்தின் பரிந்துரைகள்
தெலங்கானா என்கவுன்ட்டர்
இந்த வழக்கில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சிர்புர்க்கர் ஆணையம் தமது அறிக்கையில், "தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரும் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள். கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவர்கள் சுடப்பட்டுள்ளனர். சுடப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் சிறார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கொல்லப்பட்ட மூவரும் 'சுமார் 20 வயதுடையவர்கள்' என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் வெளிப்படையான குறைபாடுகளை சுட்டிக்காட்டிய ஆணையம், 10 போலீசார் மீது கொலைக் குற்றம் சுமத்துமாறு பரிந்துரைத்தது.இதை விவரித்துள்ள ஆணையம், "எங்களுடைய கருத்தின்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் இறக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வேண்டுமென்றே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவ நாளில் ஜோலு சிவா, ஜோலு நவீன் மற்றும் சிந்தகுண்டா சென்னகேசவுலு ஆகியோர் சிறார்களாக இருந்தனர் என்பது எங்கள் கருத்து" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலங்கானா என்கவுன்ட்டர்
படக்குறிப்பு,
போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர்
2019ஆம் ஆண்டு நவம்பரில் 27 வயது கால்நடை பெண் மருத்துவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து எரித்துக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் முகமது ஆரிஃப், சிந்தகுண்டா சென்னகேசவுலு, ஜோலு சிவா, ஜோலு நவீன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் ஹைதராபாத் அருகே தேசிய நெடுஞ்சாலை 44இல் சுட்டுக் கொல்லப்பட்டனர் - அதே நெடுஞ்சாலையில்தான் அந்த அந்த கால்நடை மருத்துவரின் எரிந்த உடல் சில தினங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
ஹைதராபாத் பாலியல் வல்லுறவு வழக்கு என்கவுன்டர்: கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா?
ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: '100 ஊடகத்தினரும் வந்து ஒரே கேள்வியை கேட்க வேண்டுமா?'
இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர்: நீதி கேட்கும் ஒரு தாயின் பல ஆண்டுகால போராட்டம்
மேலும், சந்தேக நபர்கள் பிடிபட்டதும் தங்களின் விசாரணையின் ஒரு பகுதியாக குற்றம் நடந்த இடத்தில் குற்றம் நடந்ததை விவரித்துக் காட்ட அவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட போது காலை 6:30 மணியளவில் என்கவுன்டர் சம்பவம் நடந்தது.
10 காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை?
'கும்பல் தாக்குதல் படுகொலையை எப்படி ஏற்க முடியாதோ அதுபோல், உடனடி நீதி என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த நேரத்திலும் சட்டத்தின் ஆட்சியே நிலவ வேண்டும். குற்றத்திற்கான தண்டனை என்பது சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி மட்டுமே இருக்க வேண்டும்' என்று ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆணையம் பதிவு செய்த முக்கிய பரிந்துரையில் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீதான நடவடிக்கை குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
அ) ஷேக் லால் மதர், முகமது சிராஜுதீன், கோச்செர்லா ரவி ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302இன் கீழ் கொலை குற்றத்திற்காக விசாரிக்கப்படுவார்கள்.
முகமது சிராஜுதீன், கோச்செர்லா ரவி, கே. வெங்கடேஸ்வரலு, எஸ். அரவிந்த் கவுட், டி. ஜானகிராம், ஆர். பாலு ரத்தோட் மற்றும் டி. ஸ்ரீகாந்த் ஆகியோர் பிரிவு 302 r/w 34 IPC, 201 r/w 302 இன் கீழ் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் செய்த வெவ்வேறு செயல்கள் இறந்த சந்தேக நபர்களைக் கொல்வதற்கான பொதுவான நோக்கத்தில் செய்யப்பட்டவை. குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது காவல்துறையின் பொறுப்பு என்று ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூன்று முறை நீட்டிக்கப்பட்ட ஆணையம்
தெலங்கானா என்கவுன்ட்டர்
படக்குறிப்பு,
2019இல் என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட இடம்
முன்பு, என்கவுன்டருக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து விசாரிக்கவும் ஆறு மாதங்களில் அதன் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி சிர்புர்கர் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் என்கவுன்டர் தொடர்பான இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆணையத்துக்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஆணையத்தில் உறுப்பினர்களில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரேகா சொந்தூர் பல்டோடா, சிபிஐ முன்னாள் இயக்குநர் டிஆர் கார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
YouTube பதிவின் முடிவு, 1
இந்த விசாரணைக் குழுவின் பதவிக் காலம் 2020 ஜூலையில் முதல் முறையாக ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.
ஆணையத்தை நியமித்தபோது இதே விவகாரம் தொடர்பாக தெலங்கானா உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) நிலுவையில் உள்ள நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஆணையத்தின் முன் நிலுவையில் உள்ள விவகாரத்தை வேறு எந்த அமைப்பும் விசாரிக்கக்கூடாது என்றும் அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறும் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த ஆணையத்துக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் விசாரணையின் முதல் நாளில் இருந்து கமிஷன் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான ஆறு மாத காலக்கெடு தொடங்கும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த குழு ஹைதராபாத்தில் அமர்வதாகவும் அதன் செயலகத்துக்கு ஊழியர்கள் உட்பட அனைத்து செலவுகளையும் தெலங்கானா அரசே ஏற்கும் என்றும் அது உத்தரவிட்டது. மேலும், ஆணையத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளை மாநில அரசே செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுதந்திரமான விசாரணை தேவை என்று கோரி வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப் குமார் யாதவ் ஆகியோரால் இரண்டு மனுக்களும் மற்றொன்று வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மூலமாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கறிஞர்கள் மணி மற்றும் யாதவ் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தெலங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் "போலி" என்றும் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக