வெள்ளி, 28 மே, 2021

தோழர் இரா ஜவஹர் ! வாழ்நாள் கம்யூனிஸ்ட். தொழிற்சங்கவாதி எழுத்தாளர் பத்திரிக்கையாளர் நினைவு பகிர்வு! திரு எல் ஆர் ஜெகதீசன்

May be an image of 2 people

எல் ஆர் ஜெகதீசன்  :  தர்க்கம்; தன்னம்பிக்கை; உற்சாகம். இந்த மூன்றும் சேர்ந்து ஒரு மனித உருவெடுத்தால் அது தான் இரா ஜவஹர். வாழ்நாள் கம்யூனிஸ்ட். தொழிற்சங்கவாதி; எழுத்தாளர்; பத்திரிக்கையாளர்; பல இடதுசாரி பெண்ணியவாதிகளுக்கு வளர்ப்புத்தந்தை. இன்னும் பல அடையாளங்கள்.
சின்கக்குத்தூசி சார் அறையின் மாலை நேரக்கச்சேரியில் நிரந்தர உறுப்பினர்.
முதன்மை உறுப்பினரும் கூட. அவர் உற்சாகமின்றியோ தன்னம்பிக்கையின்றியோ ஒரே ஒருநாள் கூட பார்த்ததே இல்லை.
வாழ்வின் மீதும் சக மனிதர்கள் மீதும் அவ்வளவு நம்பிக்கை வைத்தவர். எத்தனை சண்டைகள். எத்தனை வாக்குவாதங்கள். எத்தனை தர்க்கங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அத்தனையின் முடிவிலும் தோளில் கைபோட்டபடி “சரி சொல்லுங்க தோழர்” என்கிற நிரந்தர அரவணைப்பு. பாராட்டுவதிலும் சரி தர்க்கிப்பதிலும் சரி அவர் மிகுந்த தாராளவாதி.


தொழிலாளர் பிரச்சனைக்காகவோ கம்யூனிஸ குடும்பங்களின் சொந்த வீட்டுப்பிரச்சனைக்காகவோ  பஞ்சாயத்து செய்தபடி, யாருக்காவது உதவிகோரி நிதி திரட்டியபடியே வாழ்வின் பெரும்பகுதியை கழித்தவர்.
இவர் இப்படி 24 மணிநேரமும் ஊருக்கு உழைக்க அவருக்கும் அவரை நாடிவரும் அத்தனைபேருக்கும் சேர்த்து உழைத்தவர் அவர் மனைவி பூரணம். வெறும் உழைப்பல்ல தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்.
ஜவஹருக்கு இயற்கை கொடுத்த மிகப்பெரிய கொடை அவர். எப்போதோ மறைந்திருக்கவேண்டிய அளவுக்கு உடலில் நோய்களை சுமந்த ஜவஹரை இத்தனை ஆண்டுகாலம் பாதுகாத்த தாயும் செவிலியும் வாழ்க்கைத் துணைவியுமாய் இருந்தவர் அவர் தான்.
நண்பர்கள் ஜவஹரைப்பார்த்து வியப்பார்கள். நான் அவரது மனைவியைப்பார்த்தே அதிகம் வியந்திருக்கிறேன். அவரது அதீத பொறுமையும் நிரந்தர புன்னகையும் எனக்கு நீங்கா வியப்பைத்தரும்.
ஜவஹர் ஊருக்கு வாழ்ந்தார். பூரணமோ ஜவஹருக்காகவே வாழ்ந்தார். எனவே சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் பூரணம் அம்மையார் மறைந்தபோதே ஜவஹரின் வாழ்நாள் கேடயம் மறைந்ததாகவே நண்பர்கள் உணர்ந்தோம்.
கொரோனா ஒரு சாக்கு. பூரணத்தம்மாள் தன் கணவரை தனியாக விட மனமின்றி தன்னிடமே அழைத்துக்கொண்டார் என்றே தோன்றுகிறது.
மற்றபடி ஜவஹர் தன் மனைவியைத்தேடிப்போகும் ரகமல்ல. ஊரில் ஏதாவது பஞ்சாயத்துக்காக தன் ஜோல்னா பையும் சிகரெட் புகையும் கையுமாக கிளம்பிவிடும் 24/7 கம்யூனிஸ்ட். ஆனால் இதில் இறுதி வெற்றி என்னமோ பூரணத்தாம்மாளுடையதே.
போய் வாருங்கள் ஜவஹர். உங்களின் அறை அதிரும் சிரிப்பொலி கேட்க இனி வாய்ப்பில்லை என்கிற துக்கம் நெஞ்சை அடைத்தாலும் சின்னக்குத்தூசியின் கச்சேரிக்கு அங்கேயும் இந்நேரம் ஒரு துணை கிடைத்திருக்கும் என்கிற நம்பிக்கையை ஆறுதலாய் கொள்கிறோம்.
கம்யூனிஸ்டுக்கேது மேலோகம் பரலோகம்? என்று நீங்கள் சண்டைக்கு வருவீர்கள் என்று தெரியும். என் நோக்கமே அதுதானே? உங்களை சண்டைக்கிழுப்பது.

கருத்துகள் இல்லை: