மின்னம்பலம் :முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசாவின் மனைவி திருமதி பரமேஸ்வரி இன்று (மே 29) மாலை 7.10 மணியளவில் காலமானார்.
பரமேஸ்வரி கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனபோதும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலமானார்.
கடந்த 27 ஆம் தேதி மாலை அவர் கவலைக்கிடமாக உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ரேலா மருத்துவமனை சென்று பரமேஸ்வரியின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடமும் ராசாவிடமும் விசாரித்து அறிந்தார்,இந்த நிலையில் இன்று (மே 29) பிற்பகல் 2 மணிக்கு ரேலா மருத்துவமனை
வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருமதி பரமேஸ்வரியின் உடல் நிலை மிகவும்
கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்தது. மருத்துவ நிபுணர்கள் அவரை
கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தது அதேநேரம் திமுக தலைவரும் முதல்வருமான
மு.க.ஸ்டாலின் இன்று (மே 29) மீண்டும் ராசாவையும், ராசாவின்
குடும்பத்தினரையும் சந்தித்தார்.
அடுத்த சில மணி நேரங்களில் ஆ.ராசாவின் மனைவி திருமதி பரமேஸ்வரி காலமான செய்தியை ரேலா மருத்துவமனை வெளியிட்டது.
ஆ.ராசாவின் சொந்தத் தாய்மாமாவின் மகள்தான் பரமேஸ்வரி. 1957-62 காலகட்டத்திலேயே நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியின் இரட்டை உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் உறுப்பினர் அய்யாக்கண்ணு, அவர்தான் ராசாவின் தாய்மாமா.
தான் எழுதியிருக்கும் 2ஜி அவிழும் உண்மைகள் நூலில் தனது தாயார், தாய்மாமா, தன் மனைவி ஆகியோரைப் பற்றி வரலாறும் பாசமும் நிறைத்துப் பதிவு செய்திருக்கிறார் ராசா.
“என் தாயும் தந்தையரும் இலங்கையில் தங்களின் வியர்வையை தேயிலைக்காகவும், ரத்தத்தை அட்டைகளுக்காகவும் வழங்கிட அந்நிய நாட்டிலும் இன்னொரு வடிவில் அடிமைகளாகவே வாழ்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு மத்தியில், பலசரக்குக் கடை, துணிக்கடை வியாபாரம், கூடவே கற்றுக்கொண்ட டைலர் தொழில் உதவிக்கு அதே தொழிலில் தம்பி, ஏழெட்டு கறவை மாடுகள். இவற்றோடு தன் விழிமூடா உழைப்பால் பத்திரப் படுத்திய பொருள் வளத்தோடு மட்டுமல்ல...குடும்பக் கட்டுப்பாடு அப்போது சுவர் விளம்பரங்களில் கூட இடம்பிடிக்காத அந்த காலத்தில், கப்பலில் வந்து என் அப்பாவும் அம்மாவும் இக்கரை சேர்ந்த ஆண்டு 1961. அப்போது நான் பிறக்கவே இல்லை.
இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை மட்டுமல்ல விசாவும் கூட மறுக்கப்பட்ட அந்த நாட்களில், அதாவது சாஸ்திரி-பண்டாரநாயக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முன்பு என் தாயின் அண்ணன் இந்திய நாடாளுமன்றத்தின் அப்போதைய காங்கிரஸ் உறுப்பினர் அய்யாக்கண்ணு, பிரதமர் நேருவிடமே நேரில் பேசி விசா வாங்கியதாகவும், அதனால் தன் அண்ணன் உங்களுக்குக் கண்ணன் என்று தான் சாகும் வரை போதித்தது மட்டுமல்ல... அவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நானும் என் சகோதர சகோதரிகளும் அரசு உயர் அலுவலர்களாகவோ, அமைச்சராகவோ வந்திருக்க வாய்ப்பே இல்லையென்றும் அவர் சுட்டிக் காட்டத் தவறியதில்லை. பாசமும் நன்றியும் பின்னிப் பின்னி ஜடை போட்டுக் கொண்டிருந்த என் தாய் தந்தையரின் தணியாத உணர்ச்சிதான் அவரின் மகள் பரமேஸ்வரி அவர்களே எனக்கு மனைவியானார்.” என்று குறிப்பிடுகிறார் ஆ,ராசா.
எழுதும்போது கூட தன் மனைவியை அவர்கள் என்று விளிக்கும் ராசா, தன் வாழ்விலும் மனைவியை மரியாதையுடனே பார்த்தார். பாசம் வைத்த அளவுக்கு மரியாதையும் வைத்திருந்தார்,
ஆ.ராசா மீது 2ஜி வழக்கு, கைது என்று அவர் வாழ்வில் நெருக்கடிகளை எதிர்கொண்ட நிலையில் பரமேஸ்வரியின் ஆளுமைத் திறன் ராசாவுக்கு பெரும் ஆறுதலாகவும் அருமருந்தாகவும் இருந்தது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் இந்த வழக்கை உடைக்காமல் டெல்லியை விட்டு நகரமாட்டேன் என்று ராசா டெல்லியிலேயே தங்கியபோது தானும் டெல்லியிலேயே இருந்துவிட்டார் பரமேஸ்வரி.
தமிழகத்தில் இருந்தும் சரி, இந்தியாவின் எப்பகுதியில் இருந்தாலும் சரி ராசாவின் நண்பர்கள் டெல்லிக்கு சென்றால்... அவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் அவர்களை வயிறார உபசரிப்பதில் பரமேஸ்வரியின் தாய்மைப் பண்பு மிகப் பிரசித்தம். சிபிஐ நீதிமன்றத்தில் தன் மீதான பொய் வழக்கை உடைத்து நொறுக்கி வெற்றிபெற அவருக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாகவும் உற்ற தோழியாகவும் விளங்கியவர் பரமேஸ்வரி.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆ.ராசா நீலகிரி தொகுதியில் போட்டியிட்டபோது தன் கணவருக்காக பிரச்சாரமும் செய்தார் பரமேஸ்வரி.
தேர்தல் முடிந்த நிலையில் பரமேஸ்வரியின் உடல் நிலை மோசமடைந்ததால், அவருடனேயே எப்போதும் இருந்து கவனித்துக் கொண்டார் ராசா.அதனால்தான் முக்கிய அரசியல் நிகழ்வுகளில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. கடந்த மாதம் முழுவதையும் தன் மனைவிக்காகவே செலவழித்த ஆ.ராசாவிடம் இன்று விடைபெற்றுக் கொண்டார் பரமேஸ்வரி.
பரமேஸ்வரியின் அகால மரணம் ராசாவை மட்டுமல்ல திமுக தொண்டர்களையும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக