சனி, 29 மே, 2021

பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் காலமானார்! தமிழ்க் கணினித் துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்

May be an image of 1 person, eyeglasses and text that says 'Konica'

Subashini Thf :    பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டேன். தமிழகக் கணினித் துறை வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு அவருக்கு உண்டு என்பதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் தமிழ்க் கணினித் துறை வளர்ச்சி, உத்தமம் அமைப்பு தோற்றத்திற்குக் காரணமானவர்,
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின்  (TVU - Tamil Virtual University) உருவாக்கத்தில் பங்களித்தவர் எனபதோடு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பை நாங்கள் 2001ம் ஆண்டும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கிய போது அதன் தொடக்கத்தில் பங்கு கொண்டவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
2001ம் ஆண்டு தொடங்கி  2010ம் ஆண்டு வரை உத்தமம் அமைப்பின் ஆண்டுக் கருத்தரங்க விழாக்கள் ஒவ்வொன்றிலும் நான் கலந்து கொண்டேன். உத்தமம் அமைப்பின் ஐரோப்பியப் பகுதி செயலாளராகவும், அதன் உலகளாவிய அமைப்பில் செயற்குழு உறுப்பினராகவும் 2010 வரை  நான் இயங்கிய காலம் அது.  உத்தமம் அமைப்பு  உலகளாவிய அளவில் தமிழ்க்கணினி வளர்ச்சிக்கு தரம் அமைத்தல்,  மென்பொருள் உருவாக்க முயற்சிகளை ஒருங்கிணைத்தல் என்ற பல்வேறு பணிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.


உத்தமம் அமைப்பில் இடம்பெற்று மாநாடுகளில் நான் கலந்து கொண்ட காலகட்டங்களில் தான் பேராசிரியர்.டாக்டர். அனந்தகிருஷ்ணன் அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஆனது.  அது 2001ம் ஆண்டு.  
அப்போது நான் தீவிரமாக குழந்தைகளுக்கான கணினி இயந்திரக் கல்வியைத் தமிழில் வடிவமைக்க வேண்டும் எனச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்திற்கும் அப்போதுதான் நான் வரத் தொடங்கியிருந்தேன்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் வரும் போது தவறாமல் நான் இவரைச் சந்திப்பதுண்டு.  தமிழ்க்கணினி தொடர்பான கலந்துரையாடல்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும், சில நேரம் கணித்தமிழ்ச்சங்க அலுவலகத்திலும் என நடைபெறும். ஜெர்மனியின் கொலோன் நகருக்கு 2010ம் ஆண்டு உத்தமம் கருத்தரங்கில் கலந்து கொள்ள பேராசிரியரும் வந்திருந்தார்.  கணினி தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி அப்போதும் உரையாடினோம்.
2010ம் ஆண்டு செம்மொழி கருத்தரங்கம் நடைபெற்ற போது  உத்தமத்தின் கருத்தரங்கமும் இணைந்து நடைபெற்றது. அதில் நான் ஒரு கட்டுரை வாசித்ததோடு ஓர் அரங்கிற்குத் தலைமை தாங்கினேன். பேராசிரியரின் வழிகாட்டுதல்கள் எனக்கு மறக்கமுடியாதவை.
கடந்த மூன்று ஆண்டுகள் நான் அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று அவர் காலமானார் என்ற செய்தியைக் கேட்கும் போது கலங்கிப் போகிறேன்.  அருடைய குரல், கலந்துரையாடிப்  பேசிய விசயங்கள் என அனைத்தும் மனதில் நிழலாடுகின்றன.
உலகளாவிய வகையில் ஒட்டு மொத்த தமிழ்க்கணினி வளர்ச்சியில் பேராசிரியர்.டாக்டர்.அனந்தகிருஷ்ணனின் பங்கு தவிர்க்கமுடியாது.  தனிச்சிறப்பிடம் பெறுவது!
தமிழ் மரபு அறக்கட்டளையின் அஞ்சலிகள்!
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

 

Aazhi Senthil Nathan  : விடைபெற்றார் பேரா. மு. ஆனந்தக்கிருஷ்ணன்
தலைமுறையை அழிக்கும் நோயின் இன்றைய உயிர்ப்பறிப்பாக அமைந்திருக்கிறது முதுபெரும் முனைவர் பேராசிரியர் மு. ஆனந்தக்கிருஷ்ணனின் மறைவு.
கல்வித்துறையில், கணித்தமிழ்த்துறையில் இது ஒரு சகாப்தத்தின் மறைவு. சமூகநீதி பார்வைகொண்ட கல்வியாளரான ஆனந்தக் கிருஷ்ணனின் மறைவு எனக்கு ஒரு தனிப்பட்ட பேரிழவு.  
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், ஐஐடி கான்பூரின் முன்னாள் இயக்குநர்,  தமிழ்நாடு உயர்கல்வி ஆணையம், உத்தமம் போன்ற அமைப்புகளின் தலைமைப் பொ பொறுப்புகளை வகித்தவர். மாபெரும் வாழ்வொன்றை வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
அண்மையில் அமைச்சர் திரு. க பொன்முடி பாடநூல் தொடர்பான காவிச் சதி ஒன்றை அம்பலப்படுத்திய நேரத்தில் நான் புரபசரைத்தான் நினைத்துக்கொண்டேன். திமுக ஆட்சி அவரைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மனம் நாடியது.
96 முதல் அவருடன் ஏற்பட்ட உறவால் நான் பெற்ற அறிவுச்செல்வங்கள் பல. உலகத் தமிழர்களின் இடையில் ஒரு பாலமாக இருந்தார் அவர்.
சில மாதங்களுக்கு முன்புகூட நண்பர் மணி மணிவண்ணனின் பிறந்தநாள் விழா (இணைய வழியில்) நிகழ்ச்சியில் புரபசர் பேசியிருந்தார். நன்றாக இருந்தார். 93 வயதுக்காரர் என்று நம்புவது கடினம். சென்னையில் இருந்தாலும் சமூக காலங்களில் அவரைப் போய்ப் பார்க்கவில்லை என்கிற உணர்வு இப்போது எனக்குள் இப்போது ஒரு குற்றவுணர்வாகவோ மாறுகிறது.
அவரைப் பற்றி நிறைய எழுதவேண்டும். இந்த கொரானா காலத்தில் மறைந்த பலரைப் பற்றியும் நிறைய எழுதவேண்டியிருந்தது. எதை எழுதவும் மனமில்லை.
இன்னும் எத்தனை ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கவேண்டும், காலமே? இன்னும் எவ்வளவு ஆழமாக இரங்குதல்வேண்டும்?
விடைபெற்றுவிட்டார் புரபசர். கணித்தமிழ் உலகில் புரபசர் அல்லது பேராசிரியர் என்றால் அது அவரைத்தான் குறிக்கும்.
தமிழுக்குத் தொண்டுசெய்தோன் சாவதில்லை என்றான் புரட்சிக்கவிஞன். நீங்களும் நீடித்து நிற்பீர்கள்.
(ஊடகவியலாளர்களுக்கு: நண்பர்களே. அவர் பெயர் ஆனந்தக் கிருஷ்ணன். அனந்தகிருஷ்ணன் அல்ல. தமிழ்மாமனிதர் ஒருவரின் பெயரை காலம்காலமாக தவறாக எழுதுவதே உங்கள் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனந்தம் அனந்தம் ஆகும்போது அது சமூகநீதி பார்வையின் குறைபாடாகவும் இருக்கிறது. அவர் பெயரை ஒழுங்காகக் குறிப்பிடுங்கள்.)

கருத்துகள் இல்லை: