minnambalam : தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மே 20, 21 தேதிகளில் மதுரைக்குப் பயணம் மேற்கொண்டார் மு.க.ஸ்டாலின். கொரோனா தடுப்புப் பணிகள் ஆய்வு செய்யவும், புதிய ஆக்சிஜன் படுக்கையோடு கூடிய மருத்துவமனையை தொடங்கி வைக்கவும் என்று அரசு ரீதியான இந்த மதுரைப் பயணத்தின் போது... ஸ்டாலின் தனது அண்ணன் மு.க. அழகிரி வீட்டுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழகிரியின் வீட்டுக்கு ஸ்டாலின் செல்லவில்லை.
அன்று சந்திராஷ்டமம் கரி நாள் என்பதால், பல ஆண்டுகளுக்குப் பின் முதல்வராக தன் வீட்டுக்கு வரும் தம்பி ஸ்டாலின் நல்ல நாளில் வரட்டும் என்று அழகிரி சொல்லிவிட்டார். அதனால்தான் அழகிரி வீட்டுக்கு ஸ்டாலின் செல்லவில்லை. இருவரும் மதுரையில் இருந்தபடியே போனில் பேசிக் கொண்டார்கள்.இந்த நிகழ்வுகளைப் பற்றி அழகிரியுடன் பேசிய ஸ்டாலின்: அமைச்சர்களை டென்ஷனாக்கிய மதுரை சம்பவம் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அச்செய்தியில் மதுரையில் நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளின் போது இருவரும் ஒன்றாக சென்று மரியாதை செலுத்துவார்கள் என்று அழகிரிக்கு நெருக்கமானவர்கள் கூறியதை குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் மே 24 ஆம் தேதி கோபாலபுரத்தில் இருக்கும் கலைஞரின் வாரிசுகளில் ஒருவர் வீட்டில் குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக மதுரையில் இருந்து அழகிரி வருகிறார். அந்த குடும்ப நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்கிறார்.ஜூன் 3 ஆம் தேதிக்கு சில தினங்கள் முன்பாகவே, ஸ்டாலினும் அழகிரியும் கோபாலபுரம் குடும்ப நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். ஜூன் 3 ஆம் தேதி வரையிலும் அழகிரி சென்னையில்தான் இருக்கிறார். அப்போது இருவரும் ஆசுவாசமாக நிறைய விஷயங்களைப் பேசிக் கொள்ள இருக்கிறார்கள். எனவே இந்த சந்திப்புகளின் போது அழகிரி மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவது உள்ளிட்ட முக்கியமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள் கோபாலபுரம் வட்டாரங்களில்.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக