வியாழன், 12 டிசம்பர், 2019

நான் ஒரு தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறார் ரிச்சர்ட் பிரான்சன்.Virgin Mobile Richard Branson

ரெபெல்ரவி  : தமிழண்டா…. .. ரிச்சர்ட் ஜார்ஜ் நிக்கோலஸ் பிரான்சன், ஒரு பிரிட்டிஷ்
தொழிலதிபர்.
அவரது வர்ஜின் குழுமம் உலகின் மிகப்பெரிய செல்வந்தக் குழுமங்களில் ஒன்றாகும்.
சிறு வயதிலே இவருக்குச் சரியாக படிக்க வரவில்லை.
டிஸ்லெக்ஸியா என்கிற வியாதி அவருக்கு இருந்ததால் படிப்பில் கவனம் செல்லவில்லை. அந்தக் காரணத்தால் அவர் பள்ளியை விட்டு விலகினார். பள்ளியின் கடைசி நாளன்று அவரது ஹெட்மாஸ்டர் ரோபட் ரேசன், பிரான்ஸனிடம் கூறினார்: ஒன்று நீ சிறைக்கைதியாவாய் அல்லது கோடீஸ்வரன் ஆவாய்..
தொழிலதிபர் ஆகவேண்டும் என்று விருப்பப்பட்ட பிரான்சன் தனது 16வது வயதில் ஸ்டுடென்ட் என்கிற பத்திரிகையை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு வர்ஜின் ரெக்கார்ட்ஸ் என்கிற நிறுவனத்தைத் துவக்கிப் பல பாடல்களை அதன் மூலமாக வெளியிட்டு 1972இல் இருந்து அந்தத் துறையிலேயே கோலோச்சி வந்தார்.
அவரது பெற்றோர் அவரது எல்லா தொழில் முனைவுக்கும் ஊக்கம் தந்து உதவி புரிந்தனர்.அந்தக் காரணத்தால் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது.
ஒருமுறை அவர் போர்ட்டோ ரிக்கோவுக்கு விமானத்தில் செல்ல இருந்தார். ஆனால், அவர் செல்ல இருந்த விமானம் ஏதோ காரணங்களால் ரத்தாகிவிட்டது. உடனே அவர் ஒரு விமானத்தையே சார்ட்டர்ட் என்கிற முறையில் வாடகைக்கு எடுத்து, ரத்தான விமானத்தில் பயணிக்கவிருந்த மற்ற பயணிகளையும் என்னோடு வாருங்கள் ஒரு சிறிதளவு பணம் கொடுங்கள் என்று கூறி அவர்களையும் அந்த விமானத்தில் அழைத்துச் சென்றார்.

அப்படித்தான் விமான சேவை நிறுவனம் தொடங்கும் ஆசை அவருக்குத்துளிர் விட்டது.
1984இல் வர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேஸ் நிறுவனத்தைத் தொடங்கிய ப்ரான்ஸன், 85ல் வர்ஜின் ஹாலிடேஸ் என்கிற சுற்றுலாப் பயணச் சேவை நிறுவனத்தை தொடங்கினார். 93ல் வர்ஜின் டிரெயின்ஸ் என்கிற ரயில்வே நிறுவனத்தையும் அவர் தொடங்கினார்.
அதற்கு முன்னால் 1992ல் அவரது வர்ஜின் ரெகார்ட்ஸ் நிறுவனத்தை 500 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டிற்கு விற்றார். அப்போது, தான் அழுததாக அவர் குறிப்பிடுகிறார்.
அவரது வர்ஜின் ஏர்வேஸ்சுக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்சுக்கும் இடையே பற்பல சண்டைகள் ஏற்பட்டன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனக்கு போட்டியாக வந்து விடக்கூடும் என்று கருதி தமது நிறுவனத்தை அழித்துவிட முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.பிரிட்டிஷ் ஏர்வேஸ் தமது கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து தகவல்களைத் திருடுவதாகவும், தமது பயணிகளை அவர்கள் எடுத்துக் கொள்வதாகவும், மீடியாவில் வர்ஜினைப் பற்றிக் கேவலமாக சித்தரிப்பதாகவும் வழக்கு தொடுத்து, வென்று, அந்த வழக்கின் மூலமாக கிட்டத்தட்ட ஆறு லட்சத்து பத்தாயிரம் பவுண்ட் பணத்தை பிரிட்டிஷ் ஏர்வேஸிடம் இருந்து அவர் நஷ்ட ஈட்டுத் தொகையாக பெற்றார்.
அந்தப் பணத்தை தனது சக பணியாளர்களுக்கு போனசாக கொடுத்துவிட்டார்.
2004ல் வர்ஜின் எலக்ட்ரிக் என்கிற நிறுவனத்தை தொடங்கி விண்வெளிப் பயணத்திற்கான அடித்தளத்தை அவர் அமைத்திருக்கிறார்.
இன்னும் சில காலத்தில் விண்வெளிப் பயணத்தை அவர் பொதுமக்களுக்கும் மேற்கொள்ளும் அளவில் மாற்றப் போகிறார். அதற்காக அவர் விண்வெளியில் பயணிக்கக்கூடிய ஸ்பேஸ்கிராப்ட் களை உருவாக்கி வருகிறார்.
இப்படி எல்லாம் மிகப்பெரிய சாதனைகளை புரிந்திருக்கிற பிரான்சன் வாழ்க்கையைப் பற்றி என்ன சொல்கையில் ”வாழ்க்கையில் எப்போதுமே ஏதாவது ஒரு பிடிப்பு எப்படி வருமென்றால் அணுக முடியாத, எட்டமுடியாத இலட்சியங்களை, இலக்குகளை நாம் வைத்துக்கொண்டு அவற்றை எட்டி, பின்னர் அவற்றை தாண்டி போகவேண்டும் அப்படிச் செய்கிற போது தான் வாழ்க்கையை வாழ்ந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது” என்கிறார்.
2010 ஆம் ஆண்டு லோட்டஸ் எஃப்1 ரேசிங் நடந்துகொண்டிருந்தபோது ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டஸ் உடன் பிரான்சன் ஒரு பந்தயம் வைத்தார். அந்த ரேசிலே இருவரது அணிகளும் கலந்து கொண்டன. இந்தப் போட்டியில் தோற்றுப் போகிற அணியின் தலைவர் வெற்றி பெறுகிற அணித்தலைவரின் விமானத்தில் ஒரு நாள் விமானப் பணியாள் ஆக பணிபுரிய வேண்டும் என்பதுதான்.
துரதிர்ஷ்டவசமாக பிரான்சன் அணி தோற்று விட்டது. எனவே பிரான்சன் சொன்னபடியே, 2013ம் ஆண்டு மே 12ம் தேதி, பெர்த்தில் இருந்து கோலாலம்பூர் போன ஏர் ஏசியா விமானத்தில் அவர் பணியாளாக பணிபுரிந்தார்.
இப்படியெல்லாம் பல சாகசங்களையும் சாதனைகளையும் புரிந்து இருக்கிற ரிச்சர்ட் பிரான்சன் அண்மையில் அவரது டிஎன்ஏவை சோதித்துப் பார்த்தார். அப்போது அவருக்கு ஓர் ஆச்சரியமிக்க உண்மை தெரிந்தது. அவரது டிஎன்ஏ வில் 3.9 சதவிகிதம் இந்திய டிஎன்ஏ இருந்தது.
பிறகுதான் அவருக்கு புரிய வந்தது அவரது எள்ளுத்தாத்தா எட்வர்ட் ஜான்சன் 1793 இல் இந்தியாவில் சென்னைக்கு வந்திருக்கிறார். எட்வர்டின் தந்தை அதன் பின்னர் அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறார்.
இப்படியாக அவர்களுக்குள் ஓர் இந்திய-தமிழக தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரது எள்ளுப் பாட்டி கடலூரைச் சேர்ந்தவர் என்கிற உண்மையும் அவருக்கு தெரிந்தது.
அதனால் அவர் தன்னை ஓர் இந்தியனாகவும் குறிப்பாகத் தமிழனாகவும் கருதிக் கொள்கிறார்.
பல இந்தியர்களோடு இணைந்து அவர் பல தொழில்களை புரிந்ததற்கும் அதுவே காரணம்.
நான் ஒரு தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறார் ரிச்சர்ட் பிரான்சன்.
நமக்கும் அது பெருமை தானே?
ரெபெல்ரவி
12/12/19

கருத்துகள் இல்லை: