தினமணி : மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை இரவு 8 மணியளவில் 108.92 அடியாக அதிகரித்தது.
கர்நாடக மாநிலத்தில், காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் பெய்த பலத்த மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, நொடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வரை இருந்தது. இதனால் கடந்த 9-ஆம் தேதி 54.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், புதன்கிழமை இரவு 108.92 அடியாக உயர்ந்தது. தற்போது, கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மழை தணிந்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாகக் குறைந்து புதன்கிழமை இரவு அணைக்கு நொடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 76.88 டி.எம்.சி.யாக இருந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால், பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் நீரின் வெளியே தெரிந்து கொண்டிருந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயமும், கிறிஸ்தவ ஆலயக் கோபுரமும் நீரில் மூழ்கின
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக