சனி, 9 மார்ச், 2019

தேமுதிக தினகரன் கட்சியோடு பேச்சு வார்த்தை ...பணமும் தொகுதிகளும் கௌரவமான (?) அளவு தேவையாம் ....


டிஜிட்டல் திண்ணை: பிரேமலதாவுக்கு தைரியம் தந்த தினகரன்மின்னம்பலம் : தேமுதிகவில் நடக்கும் மூவ்களை இன்ச் பை இன்ச் ஆக மின்னம்பலத்தில் எழுதி வருகிறோம். ஏழு சீட்டுகளுக்கும் மேல்
என்பதில் தொடங்கிய தேமுதிக இப்போது எப்படியாவது 4 சீட் கொடுத்தால் போதும் என்ற நிலைமைக்கு இறங்கிவிட்டது. டெல்லிக்கு நேற்று மாலையில் இருந்தே தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார் சுதீஷ். டெல்லியில் இருந்து பேசியவர்களோ, 'எடப்பாடியிடம் பேசிவிட்டு சொல்வதாக சொன்னார்கள். இன்று காலையில் தான் எடப்பாடி தரப்பிடம் டெல்லியில் இருந்து பேசி இருக்கிறார்கள். 'தேமுதிகவில் இருந்து தொடர்ந்து கேட்டுக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எந்த தொகுதி என்பது முக்கியம். இல்லை. 4 சீட்டுக்கு இறங்கி வந்திருக்காங்க. அதைக் கொடுத்துடலாம். கூட்டணியில் அவங்களும் இருந்தால் பலம்தானே...' என சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு எடப்பாடி, 'என் அரசியல் வாழ்க்கையில் இப்படி மாத்தி மாத்தி பேசி நான் பாத்ததே இல்ல. அரசியலையே வியாபாரமா மாத்திட்டாங்க பிரேமலதா. அவங்களை சேர்த்துக்கிட்டா மோடியின் இமேஜுக்குதான் பாதிப்பு ஏற்படும். தேமுதிக நம்மோடு வரணும் என்ற எண்ணத்தில் மட்டும் இருந்திருந்தால் நீங்க சொல்றது சரிதான். ஆனால் அவங்க ரெண்டு குதிரையில் சவாரி பண்ண நினைச்சாங்க. நம்மகிட்ட பேசிய அதே நேரத்தில் திமுகவுடனும் பேசினாங்க. அவங்க கூட்டணிக்குள் வருவதை பாமகவும் விரும்பவில்லை.
 தேமுதிக நம்ம அணிக்கு வந்தால் நமக்கு இழப்புதானே தவிர எந்த நல்லதும் இல்ல. தேமுதிக, பாமகவுக்குள் நல்ல உறவு இல்லை. அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து நம்ம கூட்டணிக்குள் கொண்டு வருவதால் நமக்கு இழப்புதான் அதிகமாக இருக்கும். தேமுதிக இனி எங்கேயும் போக முடியாது. திமுகவும் அவங்களை சேர்த்துக்கப் போறது இல்லை. அதனால் இதை அப்படியே விட்டுடுங்க..’ என்று சொன்னாராம். ‘கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவெடுப்போம்’ என டெல்லியில் இருந்து சொல்லியிருக்கிறார்கள்.
இது ஒருபக்கம் போய்க் கொண்டிருக்க தேமுதிக தரப்பில் சுதீஷ் அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வனுக்கு போன் செய்திருக்கிறார். அவரது பி.ஏ. மணி என்பவர்தான் போனை எடுத்திருக்கிறார். பிறகு தங்கத்திடம் பேசியிருக்கிறார். ‘கேப்டன் டிவி 150 கோடி ரூபாய் கடன்ல மூழ்கியிருக்கு. அதனால எங்களுக்கு கௌரவமான தொகுதியும், நிதியும் கொடுத்தால் உங்க கூட வர தயாரா இருக்கோம்’என சொல்லியிருக்கிறார். அதற்கு தங்கம், ‘இதில் நான் முடிவெடுக்க முடியாது. சார்கிட்ட கேட்டு சொல்றேன்’ என்று சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் தினகரனுக்கு சொல்லப்பட, ‘சரி பேசுவோம்’ என்று தகவல் தந்திருக்கிறார். தினகரன் தந்த இந்த நம்பிக்கையில்தான் பிரேமலதா திமுக, அதிமுகவுக்கு எதிராக கோபமான வார்த்தைகளை வீசியிருக்கிறார்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதை ஷேர் செய்துவிட்டு இன்னொரு தகவலை ஷேர் செய்தது வாட்ஸ் அப்.
” மார்ச் 2 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணை பகுதியில் அமமுக பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். ’அமமுகவில் தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் செந்தமிழனுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட வேளச்சேரி சரவணன் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அடுத்து திருவள்ளூர் சீனிவாசனுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட லக்கி முருகனும் தேவர். லேட்டஸ்டாக விருகம்பாக்கம் முரளி என்பவரையும் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக தேவர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை நியமித்திருக்கிறார்கள்’ என்று அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
இதற்கு அமமுக சென்னை மண்டலப் பொறுப்பாளரான வெற்றிவேல் விளக்கமளித்திருக்கிறார். அதில், ‘அமமுகவில் குறிப்பிட்ட எந்த சாதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. சாதி, மத பேதங்களைத் தாண்டி அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய இயக்கம்தான் அமமுக. மேலும், செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது போல வேளச்சேரி சரவணன் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்லர். அவர் அம்மா காலத்திலேயே அதிமுகவில் வேளச்சேரி பகுதிச் செயலாளராக பணியாற்றியவர். அடுத்து திருவள்ளூர் சீனிவாசனுக்கு பதிலாக திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் லக்கி முருகன் அம்மா காலத்திலேயே கழகத்தின் பகுதிச் செயலாளராக இருந்தவர். திரு. விருகை முரளி அவரது நடவடிக்கைகள் தவறாக இருந்ததால் நீக்கப்பட்டார். காலையிலேயே டாஸ்மாக் பார்களுக்கு சென்று மது அருந்துவதன் மூலம் கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினார். மேலும் வட்டச் செயலாளர்களை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று தன் தனிப்பட்ட ஆதாயத்துக்காக பயன்படுத்தியதன் காரணத்தால் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாகியும் கூட தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் மீண்டும் சொல்கிறேன் அமமுக எந்த குறிப்பிட்ட சாதிக்கும் ஆதரவானதல்ல, அம்மாவின் வழியில் அனைவருக்கும் பொதுவான வெகு மக்கள் இயக்கமாகும்’ என்று தன் விளக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் வெற்றிவேல்

கருத்துகள் இல்லை: