வியாழன், 19 அக்டோபர், 2017

சென்னையில் பட்டாசு புகை.. வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்

சென்னையில் பட்டாசு வெடித்து கடும் புகைமூட்டம்: வாகன ஓட்டிகள் கடும்
அவதி சென்னை: சென்னையில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட கடும் < புகைமூட்டத்தால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காலையில் குளித்து முடித்து புத்தாடை அணிந்து கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். அதன்பின்னர் தங்களின் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இனிப்புகளை பரிமாறி கொண்டனர். வீடுகளில் இருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
பட்டாசுகளை வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். மாலையில் பல்வேறு வண்ணக் கலவைகள் கொண்ட பட்டாசுகள் வெடித்தனர். இதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தால்
சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். குறிப்பாக, சாலைகளில் நடந்து சென்றவர்கள் அதிகளவில் பாதிப்பு அடைந்தனர்.

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்ததன் காரணமாக புகை மூட்டம் ஏற்பட்டது. சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பயணித்தவர்கள் கடுமையாக அவதிப்பட்டனர். முன்னால் சென்ற
வாகனங்கள் தெரியாமல் முட்டிக்கொண்ட நிகழ்வுகளும் சில இடங்களில் நடைபெற்றன. மேலும், பட்டாசு வெடித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தால் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வந்தன. புகைமூட்டத்தால் விமானங்கள் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. விமானிகளும் பாதிப்பு அடைந்தனர்.


பட்டாசு புகையால் சென்னையில் காற்று மாசு பெருமளவு அதிகரித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னையில் மூன்று இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்றில் நுண்துகள் கலப்பதால் சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

எனவே, வரும் காலங்களில் குறைந்தளவில் மாசுகளை உருவாக்கும் பட்டாசுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே, தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்ததால் பட்டாசு விற்க சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: