வியாழன், 24 நவம்பர், 2016

காப்பாற்றிய கடுகு டப்பா: காலி பண்ணிய மோடி!


minnambalam.com :நமது சமையலறைகளில் இருக்கும் குட்டிக்குட்டி கடுகு, மிளகு, டப்பாக்களே நமது இல்லத்தரசிகளின் சேமிப்பு வங்கிகள். இந்த குட்டிக்குட்டி வங்கிகள் அவசரக் காலத்தில் கை கொடுப்பது போல உலகில் எந்த வங்கிகளும் கை கொடுக்காது. காரணம், அது மரபு ரீதியாக நம் முன்னோர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொண்ட சேமிப்பு பழக்கம்.
2007ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் தள்ளாடத் தொடங்கியது. அதையொட்டி வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளைப் புரட்டிப் போட்டது பொருளாதார நெருக்கடி. அதன் முதல் வீழ்ச்சிதான் கிரீஸில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி. பல நாடுகள் தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. லண்டன், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் என உலகம் முழுக்க பெரும் போராட்டங்கள் நடந்தபோது அந்த நெருக்கடி இந்தியாவையும் பாதித்தது.

இந்த இடத்தில் மேற்குலக நாடுகளில் வசிக்கும் மக்களுக்கும் தெற்காசியாவில் வசிக்கும் மக்களுக்கும் இடையிலான ஒரு வேறுபாடு தெற்காசிய மக்கள் சேமிப்பு பழக்கம் உள்ளவர்கள். அதிலும் குறிப்பாக இந்தியர்கள். பொருளாதார நெருக்கடி சந்தையிலும் உற்பத்தியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விலைவாசியை கட்டுக்கடங்காமல் கொண்டு சென்றாலும்கூட இந்தியக் குடும்பங்களை ஓரளவு இந்த நெருக்கடியில் இருந்து கப்பாற்றியது இந்த சேமிப்பு பழக்கம்தான். அந்த சேமிப்பு பணத்தைத்தான் கறுப்புப் பண ஒழிப்பின் மூலம் கைவைத்திருக்கிறார் மோடி. மக்களின் கைகளில் பணம் இருக்கக்கூடாது. பணம் என்பது தேசிய வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் இருக்க வேண்டும். அந்தப் பணம் பெருமுதலாளிகளுக்கு கடனாக வழங்க பயன்படும், மக்களிடம் இருந்தால் அது எதற்கும் பயன்படாது.
இன்னொரு பக்கம் டிஜிட்டல் இந்தியா என்னும் மோடியின் கனவு அதாவது அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே பண்ணுவது. நமது ஊதியம் வங்கிகளில் டெபாசிட் ஆகி விடும். வங்கியில் இருந்து அனைத்து தேவைகளுக்கான பணமும் சென்று விடும். வீட்டுக்கடன்கள், மருத்துவச் செலவுகள். மளிகைச் சாமான் கூட இப்படி வாங்கலாம். ஆனால், இவை எல்லாம் வளர்ச்சியடைந்த தொழில் புரட்சி நடந்த முதலாளித்துவ நாடுகளில் தன்னிச்சையாக நடந்த விஷயம். நாட்டின் சரிபாதி மக்கள் திறந்த வெளிக்கழிப்பிடங்களையே பயன்படுத்தும் நாட்டில் நவம்பர் 8ஆம் தேதி இரவில் இருந்து டிஜிட்டல் இந்தியா என்பது எவ்வளவு பெரிய முரண்? எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அதிரடியான இந்த மோடியின் அறிவிப்பு மக்களின் இயல்பு வாழ்வை குழப்பி விட்டது. தங்கள் வீடுகளில் வைத்திருந்த சில ஆயிரம் ரூபாய்களை இழந்து விட்டு ரூபாய் 10, 20, 50, 100 மட்டுமே மிகக் குறைவாக புழங்கும் சந்தையில் செய்வதறியாது திகைத்து வருகிறார்கள் மக்கள்.

கருத்துகள் இல்லை: