சனி, 22 அக்டோபர், 2016

பசுப்பாதுகாப்பு ..வன்புணர்வு ,கொலை ,கொள்ளை,கொடூர தாக்குதல்கள் .. காவிகளின் வெறியாட்டம் ..

mewat-victimsபசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி உள்ளிட்ட எல்லாக் குற்றங்களையும் இழைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். காலிகளுக்கு லைசென்சு வழங்கியிருக்கிறது, மோடி அரசு. 
ரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தி தின்கர்ஹெரி கிராமத்தில் ஒரு முசுலீமின் வீட்டிற்குள் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்த பசு பாதுகாப்பு இந்து மதவெறிக் கும்பலொன்று அவர்களிடம், ‘‘ஈத் பண்டிகைக்கு மாட்டுக் கறி சாப்பிடுவியா?” என வக்கிரமாகவும் வன்மத்தோடும் கேட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த இருவரைக் கொலை செய்து, இருவரைக் கொடுங்காயம் ஏற்படும் வண்ணம் அடித்துத் துன்புறுத்தி, சிறுமி உட்பட இரண்டு பெண்களைக் கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, மிகக் கொடூரமான வெறியாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது. இந்து மதவெறிக் கும்பலால் கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளான முஸ்லிம் பெண்கள்.
கடந்த ஆகஸ்ட் 24 அன்று நள்ளிரவில் நடந்த இத்தாக்குதலில் விவசாயக் கூலி வேலை செய்து வரும் ஏழை முசுலீமான இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி ரஷீதா இருவரும் இந்து மதவெறிக் கும்பலால் இரும்புக் கம்பிகள் மற்றும் மரக்கட்டைகளால் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்டனர்.

வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த இப்ராஹிமின் உறவினர்களான ஆயிஷாவும் மற்றும் அவரது கணவர் ஜாஃப்ரூதீனும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஜாஃப்ரூதினின் பதினான்கே வயதான சிறுமி சாஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் மற்றொரு உறவுக்கார பெண் சமீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இக்கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாப்பட்டுள்ளனர். ஆயிஷாவும் ஜாஃப்ரூதீனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், ஜாப்ரூதீன் கோமா நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘‘ஐந்து பேர் எங்கள் அறைக்குள் நுழைந்தார்கள். என் துப்பட்டாவை கொண்டு வெளியில் இருப்பவர்களைக் கட்டினார்கள். நாங்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாகவும் அதற்காகத் தண்டிக்கப்படவிருப்பதாகவும் கூறி மிரட்டினார்கள். நான் தப்பித்து ஓட முயன்றேன். ஆனால், என் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, என்னைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். என் அறையில் இருந்த என் மாமாவின் 14 வயதான மகளையும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினர்”என இக்கொடூரத்தை நாதழுதழுக்க விவரிக்கிறார், சமீனா.
‘‘இப்பெண்கள் போலீசில் புகார் அளித்த பின்னரும் கூட கொலை மற்றும் பாலியல் வன்முறை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக, அத்துமீறி நுழைதல், திருட்டு ஆகிய பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்குரைஞர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சமூக ஆர்வலர்களும் கொடுத்த அழுத்தத்திற்கு பிறகுதான் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்” என்கிறார் ஜனதா தளம் கட்சியின் எம்.பி. அன்வர் அலி.
சமூக செயற்பாட்டாளர்களான சப்னம் ஹஷ்மி மற்றும் அன்வர் அலி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்களை டெல்லிக்கு அழைத்து வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய பிறகே இக்கொடூரம் ஊடகங்களில் வெளியானது.
பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றவாளிகளின் முகநூல் பதிவுகளை வெளியிட்ட சப்னம் ஹஸ்மி, குற்றவாளிகளின் அரசியல் பின்புலம் காரணமாக அவர்கள் பாதுகாக்கப்பட சாத்தியம் இருக்கிறது என எச்சரித்தார். அவர் வெளியிட்ட முகநூல் பதிவுகளில் குற்றவாளிகளில் ஒருவனான ராகுல் வர்மா, ‘‘தான் கடந்த ஏப்ரல் முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் வேலை செய்துவருவதாக”க் குறிப்பிட்டுள்ளான். மற்றொரு குற்றவாளி ராவ், மோடியின் புகைப்படத்துடன், ‘‘முஸ்லீம்கள் போய்விட்டார்கள்”எனப் பதிவிட்டுள்ளான்.
mewat-protest
ஏழை முஸ்லிம் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட இந்து மதவெறித் தாக்குதலை அற்ப விசயமாக ஒதுக்கித் தள்ளிய அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாரைக் கண்டித்து ஆல்வார் நெடுஞ்சாலையில் நடந்த சாலை மறியல்.
இச்சம்பவம் குறித்து அரியானாவின் பா.ஜ.க. முதல்வர் கட்டாரிடம் கேட்கப்பட்ட போது, ‘‘இது போன்ற அற்ப விசயங்களில் நான் அதிக கவனம் கொடுப்பதில்லை”என்று திமிராகப் பேசி, இத்தாக்குதலை மறைமுகமாக நியாயப்படுத்தினார்.
கடந்த ஆண்டு அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றதும் அம்மாநிலத்தில் அதுவரை அமலில் இருந்த பசுவதை தடைச் சட்டத்தை மேலும் கடுமையாக்கி, 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கக் கூடியதாக அச்சட்டத்தை மாற்றியமைத்தது. அது முதல் அம்மாநிலத்தில் பசுப் பாதுகாப்பு குழுக்கள் என்ற பெயரில் இந்து மதவெறி குற்றக் கும்பல்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி, அக்கும்பல் நடத்தும் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.
அரியானாவில் கடந்த ஜூலை மாதம் மாட்டுக்கறியை கடத்தியதாகக் கூறி இரண்டு முஸ்லீம்கள் வாயில் மாட்டுச்சாணியைத் திணித்து, வீடியோவில் பதிவு செய்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வாகனங்களைச் சோதனையிடுவது, தாழ்த்தப்பட்டோரையும் முஸ்லீம்களையும் தாக்குவது, பணம் பறிப்பது, பாலியல் வன்முறை செய்வது உள்ளிட்டு நகர்புறத்து சல்வாஜூடுமாகச் செயல்பட்டு வருகின்றன, இக்குற்றக் கும்பல்கள்.
அரியானா அரசும் பசு பாதுகாப்பு கும்பலும் கூட்டுச் சேர்ந்துகொண்டு பக்ரீத் பண்டிகையையொட்டித் தெருவோர பிரியாணி கடைகளில் பசு மாமிசம் இருப்பதாகக் கூறிச் சோதனைகளை நடத்தி மக்களிடம் பீதியை ஏற்படுத்தின. இவற்றின் நீட்சியாகத்தான் இப்ராஹிம் குடும்பத்தினர் மீது கொலை மற்றும் கும்பல் பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
மாட்டுக்கறி முகாந்திரத்தை வைத்து எந்தக் குற்றத்தையும் செய்யலாம் என்ற நிலைமையை நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ். ஆசி பெற்ற மோடி அரசு உருவாக்கியிருக்கிறது. பசு பாதுகாப்பு என்பதை வைத்துக் கொண்டு பல்வேறு பெயர்களில் உருவாக்கப்பட்டு, நடமாடவிடப்பட்டிருக்கும் இந்து மதவெறி அமைப்புகள், சட்டத்தின் ஆட்சி என்று அவர்களே சொல்லிக்கொள்ளும் மாண்புகள் அனைத்தையும் தூக்கி கடாசிவிட்டு, தங்களைத் தாங்களே சட்டமாகவும் போலீசாகவும் நீதிமன்றமாகவும் நியமித்துக்கொண்டிருக்கிறார்கள். மைய அரசு, அதன் அமைச்சர்களின் வேலையே இத்தாக்குதலை நியாயப்படுத்துவது, குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக உள்ளன. குறிப்பாக, அரியானா அரசின் அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மா, பசு பாதுகாப்பு என்ற முகாந்திரத்தில் நடத்தப்படும் தாக்குதல்களை இந்து சமுதாயம் விழிப்படைந்து வருவதற்கான உதாரணங்களாகக் கூறுகிறார்.
போலீசும், நீதிமன்றமும் இக்குற்றக் கும்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செயல்படுவதோடு, பாதிக்கப்பட்டவகளையே குற்றவாளியாக்குகிறது. குறிப்பாக, உ.பி.யில் தாத்ரி பகுதியில் பசுவைக் கொன்று அதன் மாமிசத்தைச் சாப்பிட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு, தாக்கிக் கொல்லப்பட்ட அக்லக் குடும்பத்தினர் மீது பசுவதைத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உ.பி. மாநில நீதிமன்றத்தாலும், போலீசாலும் அக்லக் குடும்பத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ள முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ‘‘இந்த உண்மை உங்களுக்கு எட்டவில்லையா? இப்படி நடப்பது குறித்து நீங்கள் வெட்கப்படவில்லையா? நீங்கள் அனைவரும் நம்பிக்கை துரோகிகளா? இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு நாஜிக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட நீதிபதிகள் விசாரிக்கப்பட்டதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்”எனக் கடுமையாகச் சாடியும் எச்சரித்தும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் பெரியார் படிப்பு வட்டத்தின் மீது விதிக்கப்பட்ட தடை, ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை தொடங்கி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது ராஜதுரோக வழக்கு பாய்ச்சப்பட்டது வரை; சமஸ்கிருத வாரம் தொடங்கி புதிய கல்விக் கொள்கை வரை; தாத்ரியில் அக்லக் படுகொலை செய்யப்பட்டது தொடங்கி ஊனாவில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மேவாட்டில் விவசாயக் கூலியான இப்ராஹிம் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொலை, பாலியல் வல்லுறவு ஈறாக இவையாவும் அரசின் உறுப்புகள் அனைத்தும் மிகமிக வேகமாக பார்ப்பன பாசிசமயமாகிவருவதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்தவும், வீழ்த்தி முறியடிக்கவும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை என்ன என்பதுதான் நம் முன்னுள்ள சவால்.
– அமலன் வினவு.காம் 

கருத்துகள் இல்லை: