வியாழன், 10 மார்ச், 2016

யுனிலிவரை வீழ்த்திய பாடகி சோஃபியா : எந்த அறமும் இல்லாமல் விளம்பர நிறுவனங்கள் இயங்குகின்றன.


vikatan.com :Kodaikanal won't Kodaikanal won't
Kodaikanal won't step down until you make amends now..." என்று துவங்கும்  இந்த பாடலை நிச்சயம் நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள்... எந்த வெகுஜன ஊடகங்களிலும் இந்த பாடல் ஒளிப்பரப்பபடவில்லை... ஆனால், இந்த பாடல் யுனிலிவருக்கு எதிரான கொடைக்கானல் மக்கள் போராட்டத்திற்கு முக்கிய ஆயுதமாக இருந்தது. அந்த பாடலில் வரும்  ராப் இசையுடன் கூடிய அந்த பெண்ணின் அலட்சிய குரல், யுனிலிவரை கிண்டல் செய்தது, கோபக் கேள்விகளை வீசியது, மக்களை திரட்டியது, யுனிலிவரின் முதல் செயல் அதிகாரியின் தூக்கத்தை கலைத்தது. இறுதியாக, அந்த மக்களுக்கு ஒரு தீர்வையும் தேடித்தந்துள்ளது. ஆம். யுனிலிவர், மெர்குரி நச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக ஒரு தொகையை தர முன்வந்துள்ளது.
ஆப்பிரிக்கா, அமெரிக்க மக்கள் பாடல்களை ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுத்து இருக்கிறார்கள். அதில், பல வெற்றிகளையும் கண்டு இருக்கிறார்கள். நம் நாட்டின் சுதந்திரத்திற்கும் பாடல்கள் ஒரு முக்கிய போராட்ட கருவியாக இருந்திருக்கிறது. சமகாலத்தில்,  உலகத்தின் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் ஒன்றான யுனிலிவரை இந்த பாடல் பணியவைத்து இருக்கிறது.


2001-ம் ஆண்டு யுனிலிவரின் நிறுவனம் மூடப்படுகிறது. அதற்குள் அது நூற்றுகணக்கான மக்களை பெரும் நோயில் தள்ளியும், ஆயிரக்கணக்காண ஏக்கர் நிலங்கள், நீர் நிலைகளை மாசுப்படுத்தியும் விடுகிறது. அதற்கு இழப்பீடு கேட்டு அந்த மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அந்த மக்களின் எந்த போராட்டத்திற்கும் செவி சாய்க்காத யுனிலிவரின் தலைமை செயல் அதிகாரி பால் போல்மேன், ‘Kodaikanal Won't ' பாடல் வெளியான சில தினங்களில், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இது சம்பந்தமாக ஒரு ட்விட் இடுகிறார்.
பின் அந்த பாடல் முப்பது லட்சம் மக்களை சென்றடைந்து, பெருவாரியான மக்களை இந்த பிரச்னை குறித்து பேசச் செய்தது. இப்போது இதற்கு ஒரு தீர்வையும் தேடி தந்துள்ளது. அந்த பாடலை எழுதி, பாடியவர் சோஃபியா அஷ்ரஃப்.  அவருடன் உரையாடுவது அலாதியான அனுபவமாக இருக்கிறது. உற்சாகத்தை சில நொடிகளில் நம்மிடம் கடத்தி விடுகிறார்.

அவருடன் உரையாடியதிலிருந்து...

உங்களை நான் மத பின்புலத்தில் பார்க்கவில்லை. ஆனால், இதை நான் கேட்டுதான் ஆக வேண்டும். இஸ்லாமிய மதத்திலிருந்து வந்துவிட்டு உங்களால் எப்படி இவ்வளவு தைரியமாக செயல்பட முடிந்தது. நான் இஸ்லாமிய பெண்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள் என்று சொல்லவில்லை, ஆனால், சில தடங்கல்கள் இருக்கத்தானே செய்கிறது... ?

ஆம். ஆனால், என் குடும்பம் எனக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது. என் குடும்பமும் போராட்டங்களில் கலந்து கொண்ட பின்னணி கொண்ட குடும்பம். அவர்களிடமிருந்து தூண்டப்பட்டுதான், நான் இது போன்ற தளத்தில் இயங்க ஆரம்பித்தேன். எல்லாரையும் போல், என் ஆன்மாவும் நேர்மையின் பக்கம் நில், நியாயத்தின் பக்கம் நில், தீமைக்கு எதிராக நில் என்றது. சிறு சிறு வயதிலிருந்தே எனக்கு கலைகள் மீது ஈடுபாடு அதிகம். அதை என் குடும்பமும் ஊக்குவித்தது. தரமான படைப்பு உண்மையிலிருந்தும், நியாயத்திலிருதும்தான் ஜனிக்கும். கலைஞன் ஒரு விஷயத்தில் தன்னை பறிக்கொடுக்கமல், பாதிக்கப்படாமல், ஒரு நல்ல படைப்பை தந்துவிட முடியாது.  கொடைக்கானல் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளை,   சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராம் என்னிடம் கூறினார். அந்த கதைகள் என் தூக்கத்தை களவாடியது. அந்த அழுத்தங்களிலிருந்து தான் இந்த பாடல் பிறந்தது.


பாடலை ஒரு போராட்ட வடிவமாக மாற்ற முடியுமென்று எப்படி கருதினீர்கள்...?

ராப் இசையே ஒரு போராட்ட வடிவம்தான். இப்போது வேண்டுமானால் அந்த இசை  வேறு தளங்களில் பயன்படுத்தப்படலாம். ஆனால், அந்த இசை தோன்றிய காலத்தில் அது போராட்டங்களுக்கு மட்டும்தான் பயன்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக நித்தியானந்த் தந்த ஊக்கம்தான் ஒரு முக்கிய காரணம்.

அந்த பாடல் இந்தளவிற்கு மக்களை சென்றடையுமென்று எதிர்பார்த்தீர்களா...?

நிச்சயம் இல்லை. மக்களின் வலியை சமூகத்தின் பெரு மக்களிடம் ஒரு பாடல் மூலமாக கொண்டு சேர்த்தது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

புரிகிறது. நீங்கள் யுனிலிவருக்கு  விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தீர்கள் அல்லவா...?

ஆம். அதிர்ஷ்டவசமாக நான் மெர்குரி பாடல் வெளிவருவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அங்கிருந்து மட்டுமல்ல, விளம்பர துறையிலேயே நான் இப்போது இல்லை.

என்ன சொல்கிறீர்கள்... காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?

எந்த அறமும் இல்லாமல் விளம்பர நிறுவனங்கள் இயங்குகின்றன. மக்களின் நுகர்வு வெறிதான் பல சூழலியல் பிரச்னைகளுக்கு காரணம். நான் சூழலியல் தளத்தில் செயல்பட்டுக் கொண்டே, நுகர்வு வெறியை தூண்டும் நிறுவனத்தில் வேலை பார்ப்பது முரண்தானே, அதனால்தான் அங்கிருந்து வெளியேறினேன். நிச்சயமாக சொல்ல முடியும், கலைஞர்களுக்கு ஏற்ற இடமாக விளம்பரத் துறை இல்லை.


அப்படியானால், ஒரு கலைஞனாக நிச்சயம் சமூகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் எதிராக போராடுவீர்கள்தானே...?

அதிலென்ன சந்தேகம். தொடர்ந்து நான் செயற்பட்டு கொண்டுதான் இருக்கிறேன். கலைஞனாக என்னால் என்ன பங்களிப்பை எவ்வளவு அளிக்க முடியுமோ, அவ்வளவுக்கு நிச்சயம் அளிப்பேன். அதுதான் அந்த கலைக்கான நியாயமும் கூட.

சொல்லி முடித்த அவரது ஒவ்வொரு சொல்லிலும் உறுதி தெறிக்கிறது. இப்போது ஷோஃபியா அஷ்ரஃப், ஷோஃபியா தேன்மொழி அஷ்ரஃப். ஆம். குக்கூ குழந்தைகள், இவரின் பாடலை கேட்டு விட்டு, தேன்மொழி என்ற கூப்பிட்டுள்ளன. இப்போது தேன்மொழியையும் தன் பெயரில் இணைத்துவிட்டார்.

- மு. நியாஸ் அகமது.

கருத்துகள் இல்லை: