வியாழன், 10 மார்ச், 2016

விஜயகாந்த் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை...நிமிடத்துக்கு நிமிடம் மாறும் விஜயகாந்தின் மனம்...பணம் பணம் பணம்

விகடன்.com :பழம் கனிந்திருக்கிறது, அது நழுவிப் பாலில் விழும் என்று காத்திருக்கிறேன்'' என்கிறார், தி.மு.க தலைவர் கருணாநிதி. "நாங்கள் பல சுற்றுக்கள் பேச்சு வார்த்தையை நடத்தி முடித்து விட்டோம்... நல்ல முன்னேற்றம் தெரிகிறது (ஆமாம், இதில் யார் பேஷண்ட்?), தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம், இரண்டொரு நாளில் டெல்லியில் இருந்து இன்னும் சிலர் வருகிறார்கள், நல்ல பதிலை உங்களுக்கு (மீடியாக்களுக்கு) சொல்வார்கள்" என்கிறது பா.ஜ.க வட்டாரங்கள். இன்னும் எந்தெந்த பிரதான கட்சிகள் தமிழக தேர்தல் களத்தின் வெள்ளோட்ட வெளியில் இருக்கின்றன என்று பார்த்தால், பா.ம.க.வும், த.மா.கா.வும்தான் மிஞ்சுகின்றன. ச.ம.க., புதிய தமிழகம், ம.ம.க., தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, இ.யூ.முஸ்லீம் லீக், தவ்ஹீத் ஜமாத்,  புரட்சிபாரதம் உள்ளிட்ட  கட்சிகளும் யாருடன் கூட்டணி என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியாத சூழலே காணப்படுகிறது.  தமிழகம் இதுவரை காணாத அளவு வியாபர அரசியலை தற்போது  விஜயகாந்த் பிரேமா சுதீஷ் மூவரும் அரங்கேற்றுகிறார்கள்.


தமிழக அரசியலின் நாற்பதாண்டு கால வரலாற்றில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும், காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட்கள் என்று தேசிய அளவிலான கட்சிகளுடன்தான் மாறி, மாறி கூட்டணியை அமைத்து தங்களை கரை சேர்த்திருக்கின்றன. இதில் விதிவிலக்காக, ஒருமுறை மட்டும் புதிதாக உருவான தமிழ்மாநில காங்கிரசுடன் கூட்டணி வைத்து தி.மு.க ஆட்சியைப் பிடித்தது.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க -வுக்கு  ஒரு மாற்றுக் கட்சியாக தே.மு.தி.க. என்ற புதிய கட்சி இப்போது, களத்துக்கு வந்திருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தே.மு.தி.க., தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், இனி மாநிலத்தில் பிற கட்சிகளை தேசிய கட்சிகள் மதிக்காது என்ற எண்ணவோட்டம், இதுவரை தமிழகத்தை மாற்றி, மாற்றி ஆண்ட கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல், மாநிலத்தில் உள்ள கட்சிகள் 'உன்னிப்பாக' காய் நகர்த்தி வருகின்றன.

இந்நிலையில், "தன்னைச் சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகளை விஜயகாந்த் எப்படிப் பார்க்கிறார்...?  தலைவர்கள் காத்திருக்காங்களா, நல்லா காத்திருக்கட்டும் என்கிறாரா அல்லது கூட்டணிக்குள் நான் வரவேண்டுமென்றால், ...என்று சொல்லி நிறுத்தி, மாப்பிள்ளை வீட்டார் 'சீர்' கேட்பது போல் லிஸ்ட்டைப் படிக்கிறாரா?"  என பல தரப்புகளிலும் பேசி பார்த்தோம்.

''கேப்டனுக்கு எப்போதுமே வியாழக்கிழமை சென்டிமென்ட் அதிகம். வியாழக்கிழமையில முக்கியமான முடிவுகள் எதுவுமே எடுக்க மாட்டார். முதல்வர் வேட்பாளர், ஒரு மத்திய அமைச்சர் பதவி, ஐந்து மேயர் இடங்கள், அப்படியே தேர்தல் செலவை பார்த்துக் கொள்வது ஆகிய நான்கு அம்ச கோரிக்கைகள்தான் பா.ஜ.க.விடம் அழுத்தம் கொடுத்து தே.மு.தி.க. முன்வைத்த கோரிக்கைகள். அவர் சொன்ன  கோரிக்கைகள் அனைத்துக்கும் சரி என்று பச்சைக்கொடி காட்டியாகி விட்டது. ஆனால், இன்னமும்  கேப்டன் சைடிலிருந்து பதில்தான் வரவில்லை'' என்கிறது ஒரு தரப்பு.

இன்னொரு தரப்போ, தங்கள் கூட்டணிக்குள் வரும்படி தே.மு.தி.க.வுக்கு, தி.மு.க தூது விட்டபோது, "ஐந்து மேயர், ஐம்பது சீட், தேர்தல் செலவு இவைகளுக்கு மட்டும் நாங்கள் சம்மதிக்கிறோம். இதற்கு சரியென்றால் மேற்கொண்டு பேசுவோம். இல்லையென்றால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை" என்றிருப்பதாக சொல்கிறார்கள்.

விஜயகாந்த் தயக்கம் ஏன்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த தே.மு.தி.க.வின் மாநாட்டில் பேசிய பிரேமலதா, அ.தி.மு.க.வையும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு லேசாக ரியாக்‌ஷன் காட்டிய ஜெயலலிதா, தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அதற்கு அடுத்த நாளே பதவிகளை ராஜினாமா செய்ய வைத்து, விஜயகாந்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரத்தை ரத்து செய்ய வைத்தார். (இங்கே அடிச்சா, அங்கே வலிக்கும் ஸ்டைல்).

அடுத்த சில நாட்களில்,  அதே காஞ்சிபுரத்தில் அதே 'வேடல்' பகுதியில் அ.தி.மு.க மகளிரணி மாநாட்டின் மூலம் பதிலடி கொடுத்து,  தன்னுடைய முக்கியமான அரசியல் எதிரிகளின் பட்டியலில்  கேப்டன் 'சிறந்து' இருப்பதை வெளிப்படையாக சொல்லாமல், பதிலடியான செயல்கள் மூலம் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க வைக்கும் கூட்டணி வென்றால்தான், 'விஜயகாந்த் ஆகிய நான்' என்று அன்புமணி ராமதாஸ் சொல்வது போல் சொல்லி, தமிழக முதலமைச்சராக கேப்டன் பதவியேற்க முடியும். அப்படி இல்லாமல், தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால், 'விஜயகாந்த் ஆகிய நான்' என்பது கனவாகி விடும்.

"பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து அது 'டோட்டல்' வாஷ்-அவுட் என்ற ரிசல்ட்டை தே.மு.தி.க.வுக்கு கொடுத்து விட்டால்,  இன்னும் சிக்கலாகி விடும். அதேசமயம் முதல்வர் கனவு 2016-ல் பலிக்கா விட்டாலும் பரவாயில்லை. இப்போது துணை முதல்வர் என்ற அளவிலாவது நடந்தால்தானே 2021-ல் முதல்வராக முடியும்?"  என்ற கேள்விகள் அடிக்கடி கேப்டனுக்குள் எழுந்து எழுந்து அடங்குகிறது. பல நேரங்களில் அது வெளிப்படையாகவும் கேட்கிறது.

பாஜகவுடன் வைக்கும் கூட்டணி மூலம் முதல்வர் வேட்பாளர் என்ற பிரசாரத்தை மட்டுமே கையில் எடுக்க முடியும். தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் அது நடக்காது. அதேசமயம், தி.மு.க ஆட்சிக்கு வந்து விடும். ஆனால், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து விட்டால், 'வேடல்' பொதுக்கூட்ட கவுன்டர் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் நடந்து விடும் என்றுதான் கேப்டன் பெரிதும் அஞ்சுகிறார் என்கிறார்கள்.

விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்' படத்தில் ஒரு காட்சி, அதுவும் க்ளைமாக்ஸ் காட்சி. "கமிஷனர் சார், நம்பிக்கை வேணும்... அண்ணாச்சி (நடிகர் திலகன்) சொல்றேன், ஒரே ஒரு நிமிஷம்  மணிபாரதியைக் குடுத்துட்டு வாங்கிக்குங்க..." என்கிற சீன் நிஜ வாழ்க்கையில் நடந்து விட்டால்...?

தேசியக் கட்சிகள் தங்களின் வெற்றிகள் வரையில்தான் மாநிலக் கட்சிகளின் நட்பில் இருக்கும். தோல்விக்குப் பின்னே அப்படியே கைகழுவி விட்டு விடும்... என்றெல்லாம் கேப்டன் தரப்புக்கு எடுத்துச் சொல்லி வருகிறார்களாம்.

மொத்தத்தில் கேப்டன் சத்ரியனா, சாணக்கியனா என்ற சவாலை எதிர்கொண்டு களத்தில் நிற்கிறார்.
-ந.பா.சேதுராமன்

கருத்துகள் இல்லை: