சனி, 12 மார்ச், 2016

சங்கரமடத்தின் உதவியை நாடியுள்ள ஜெயலலிதா....

விகடன்.com தே.மு.தி.க., தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க கட்சியினரின் மாநாடுகள் தொடர்ந்து காஞ்சி மாவட்டத்தில் நடந்ததைச் சொல்கிறீரா?’’ ‘‘அதைச் சொல்லவில்லை. காஞ்சியில் இன்னொரு அதிரடியும் நடந்ததாகச் சொல்கிறார்கள். மார்ச் 2-ம் தேதி, காஞ்சி சங்கர மடத்துக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மடத்துக்குள் முக்கியமானவர்களைத் தவிர, மற்றவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மேல் அனுமதிக்கப் படவில்லை. பீடாதிபதிகளுக்கு நெருக்கமானவர்கள், ‘ஏதோ நடக்கப்போகிறது... ஆனால், அது என்ன’ என்பது தெரியாமல், நீண்ட நேரம் காத்துக் கிடந்தனர். அப்போது, மடத்தை நோக்கி ஒரு கார் வந்தது. ஜெயேந்திரர், விஜயேந்திரரின் காவி நிற இன்னோவா கார்கள் மட்டும் நிறுத்தப்படும் இடம் வரை, அந்த கார் வந்தது. மடத்துக் காவலர்கள் அதைத் தடுக்கவில்லை. பவ்யமாக வணங்கி வழிவிட்டனர். காரில் இருந்து இறங்கியவர்கள் இரண்டு பெண்கள். அவர்களை நேரில் பார்த்தவர்களுக்கு அப்போது​தான் மடத்தைச் சூழ்ந்திருந்த இனம்புரியாத பரபரப்புக்கு அர்த்தம் புரிந்தது. காரில் இருந்து இறங்கியவர்கள், சசிகலாவும் இளவரசியும் என்கிறார்கள். ஏறத்தாழ 15 ஆண்டுகள் கழித்து சங்கர மடத்துக்குள் காலடி எடுத்துவைக்கிறாராம் சசிகலா.
இதற்குமுன் 2001-ம் ஆண்டு செப்டம்​பர் மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை, சங்கரமடம் வந்திருந்தார் சசிகலா. அதன்பிறகு, 2016 மார்ச் 2-ம் தேதி வந்துள்ளார் என்கிறார்கள்.’’
‘‘அப்படியா?’’

‘‘போயஸ் கார்டனுக்கும் சங்கரமடத்துக்கும் இடையில் ஏகப்பட்ட மோதல்கள். 2004-ம் ஆண்டு சங்கரராமன் கொலை... அதே ஆண்டில் வந்த, தீபாவளி நாளன்று ஜெயேந்திரர் கைது... அந்த வழக்கில் அவருடைய விடுதலை... அதை எதிர்த்து ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு செய்த மேல் முறையீடு என்று இரண்டு அதிகார மையங்களுக்கும் இடையில் பனிப்போர் உச்சத்தில் நடந்து கொண்டிருந்தது. இவை அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திடீரென சங்கரமடத்தைத் தேடி வந்துள்ளது போயஸ் கார்டன் என்றால், அது சாதாரண விஷயமா?’’

‘‘புரிகிறது!’’

‘‘இதுபற்றி விசாரித்தபோது, ‘ஜெயலலிதா மீது ஜெயேந்திரருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை தாள முடியாத ஆத்திரம் இருந்தது. ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்றி பழிவாங்க நினைத்தார். அதற்காகப் பல திசைகளில் தனது பரிபாலனங்களை அனுப்பிப் பேசினார்... செயல்பட்டார். இப்போது, மத்திய அரசும் ஜெயேந்திரருக்கு ஆதரவான பி.ஜே.பி-யின் கையில் இருப்பதால், ஜெயேந்திரரின் முயற்சிகள் அனைத்தும் வீரியமாக விஸ்வரூபம் எடுத்தன’ என்று சொல்கிறார்கள். அதில் ஒன்றுதான், ‘தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி அமைய வேண்டும்’ என்று சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டது. ஆனால், அதை கருணாநிதி விரும்பவில்லை. அதனால்தான் அவர் வேகமாக காங்கிரஸுடன் கைகோத்தார். உடனே, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பற்றி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, ‘காங்கிரஸின் சூழ்ச்சிக்கு கருணாநிதி பலியாகி​விட்டார்’ என்றார். அதாவது கருணாநிதி நல்லவர்; காங்கிரஸ் தீயது என்ற அர்த்தத்தில் இருந்தது அந்தப் பதிவு. சுப்பிரமணியன் சுவாமியின் நடவடிக்கைகளுக்கு அப்போது பின்னால் இருந்து தூபம் போட்டுக் கொண்​டிருந்தவர் ஜெயேந்திரர்​ தரப்பினர்தான். இதுபோல, பிராமணர்கள் மத்தியிலும் ஜெயேந்திரர் தரப்பினர் அ.தி.மு.க-வுக்கு எதிரான பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். இதை யடுத்துத்தான் ஜெயேந்திரரை சமாதானப்​படுத்துவதற்காக சசிகலாவும் இளவரசியும் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையே சிலர் சசிகலா வரவில்லை, ஜெயலலிதாவின் தூதர் ஒருவர் வந்தார் என்றும் சொல்கிறார்கள்.”

‘‘ஜெயலலிதா மீது அவ்வளவு ஆத்திரமாக இருந்த ஜெயேந்திரர் சசிகலா வந்து சமாதானம் பேசினால் சாந்தமடைந்து விடுவாரா?”

‘‘ஏன் மோதல் என்று நினைத்து வரச்சொல்லி இருக்கலாம்” என்ற கழுகார் அடுத்த மேட்டருக்கு வந்தார்.
‘‘இதுவும் ஒரு மடம் சம்பந்தமான செய்திதான். ஒரு சாமியாருக்கு பெருமாளின் பெயரைக்கொண்ட ஓர் உதவியாளர் இருந்தார். அந்த உதவியாளரிடம் ஏதோ சிடி இருக்கிறதாம். அந்த சி.டி-யை காவல் துறையில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவரிடம் இந்த பெருமாள் பெயர்க்காரர் கொடுத்துள்ளார். இருவரும் சேர்ந்து ரகசியமாக அந்தச் சாமியாரை மிரட்டத் தொடங்கி உள்ளனர். இதில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், போலீஸ் உதவியை நாடுவதைத் தவிர சாமியாருக்கு வேறு வழியில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆலோசகராக இருக்கும் பெண்மணியிடம் இந்த அசைன்​மென்ட்டை அவர்கள் ஒப்படைத்தனர். களத்தில் இறங்கியது டீம். அந்த ஓய்வுபெற்ற போலீஸ்காரரைச் சுற்றிவளைத்து, ‘தொலைத்துக்​கட்டிவிடுவோம்’ என்று மிரட்டியதுடன், அந்தரங்க சி.டி-யை பறிமுதல் செய்துவிட்டார் களாம். அத்துடன் இந்த சி.டி யார் மூலம் கிடைத்தது என்பதையும் அவர் வாயிலிருந்தே வரவழைத்துத் தெரிந்துகொண்டனர். அந்தத் தகவலை உடனடியாக சாமியாருக்குத் தெரிவித்து, அவருடைய உதவியாளரை மடத்தில் இருந்து துரத்திவிட்டனர். இந்த விவகாரத்தில் சாமியாருக்கு கொஞ்சம் நிம்மதி. ஆனால், அவருக்கும் மடத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் களுக்கும் இன்னும் உதறல் இருக்கிறது. இந்த விவகாரங்களை எல்லாம், இவர்கள் ‘பப்ளிக்’ ஆக்கிவிட்டால் தங்களுக்குச் சிக்கலாகும் என்று கருதுகின்றனர். அதனால், வெளியேற்றப்பட்ட உதவியாளரை தற்போது, ரகசியமாக ஓரிடத்தில் பிடித்துவைத்துள்ளனர். அவரிடம், ‘உன்னை ஒன்றும் செய்யமாட்டோம். ஆனால், யாரிடமும் எதுவும் உளறிவிட வேண்டாம்’ என்று மிரட்டலும் கெஞ்சலுமாக இருக்கின்றனர். இந்த விவகாரம்தான் இப்போது மடத்தின் நிம்மதியைக் கெடுத்துக்கொண்டிருக்​கிறது” என்று சொல்லி​விட்டுப் பறந்தார் கழுகார்.

அட்டை படம்: மா.பி.சித்தார்த்
படங்கள்: சு.குமரேசன்

கருத்துகள் இல்லை: