வெள்ளி, 11 மார்ச், 2016

ஜே.என்.யுவின் விவாத சுதந்திரம் இந்துத்துவவாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பார்ப்பனியத்தில்  ஊறிப் போன வட இந்தியாவின் இதயப்பகுதியில் JNU ஜே.என்.யு மட்டும் ஒருவிதமான ஐரோப்பிய பாணியிலான சுதந்திரத்தை இத்தனை ஆண்டுகளாக எப்படி பாதுகாத்து வருகின்றது?. பொதுவாக இருபத்தைந்து வயதுக்குள் படித்து முடித்து விட்டு வேலையில் செட்டில் ஆனால் தான் முப்பதுக்குள் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக முடியும் என்பது போன்ற எல்லைக் கோடுகளுக்குள் நின்று தான் எங்கள் இளைஞர்கள் ‘அறிவுத் தேடலில்’ ஈடுபட முடிகிறது. நீங்களோ முப்பத்தைந்து வயதில் கூட மாணவர்களாகவே இருக்கிறீர்கள்… எப்போது தான் ’செட்டில்’ ஆவதாக உத்தேசம்?
”ஏன் இப்போதே செட்டில் ஆகித் தானே இருக்கிறோம்? மேலும் அறிவுத் தேடலுக்கும் கற்றுக் கொள்வதற்கும் வயது வரம்பு ஏதும் இல்லை அல்லவா?”
“அப்படியென்றால், உங்கள் செலவுகளுக்கு என்ன செய்கிறீர்கள்?”
”எங்களுக்கு அரசு உதவித் தொகை கிடைக்கிறது. அதை வைத்து சமாளித்துக் கொள்கிறோம்”

ஜே.என்.யு மட்டுமின்றி அரசு உயர்கல்வி நிலையங்களில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் அரசின் உதவித் தொகையை மிகவும் சார்ந்துள்ளார்கள். மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் யு.ஜி.சி (University Grants Commision) தகுதித் தேர்வு ஒன்றை நடத்துகின்றது. வருடாந்திரம் நடக்கும் தேசிய தகுதித் தேர்வில் (National Eligibility Test) தேர்வு பெரும் மாணவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கிறது. முதுகலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் முனைவர் படிப்பு படிக்க மாதம் 25,000 ரூபாயும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு 28,000 ரூபாயும் உதவித் தொகையாக கிடைக்கிறது.
DE23_PAGE3_JNU1_1594132gலட்சக்கணக்கான மாணவர்கள் வருடம் தோறும் தேசியத் தகுதித் தேர்வை எழுதினாலும், சில ஆயிரம் மாணவர்களே அதில் தேர்ச்சியடைகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் முனைவர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களாக உள்ளனர். ஜே.என்.யுவில் மொத்தமுள்ள சுமார் 8000 மாணவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். தேர்ச்சியடையாத மாணவர்களே பெரும்பான்மையினர்.
இவ்வாறு தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களைப் பொருத்தவரை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக பயில்வோருக்கு மாதம் 5000 ரூபாயும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு 8000 ரூபாயும் உதவித் தொகையாக கிடைகின்றது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பது, உயர் கல்வியை முற்றிலுமாகத் தனியார் மயமாக்குவது என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் மோடி அரசு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோரையும் பெறாதவர்களையும் பிளவு படுத்தும் விதத்தில், தேர்ச்சியடையாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை நிறுத்தவுள்ளதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது.
மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து மாணவர்கள் மத்தியில் பெரும் போராட்டம் வெடிக்கவே தற்காலிகமாக மத்திய அரசு பின்வாங்கியது. அப்போது தில்லியில் உள்ள யு.ஜி.சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் முன்னின்றது ஜே.என்.யு மாணவர்கள் தாம். தற்போது அரசின் உதவித் தொகையை “தேசவிரோதிகளுக்கு” வழங்கக் கூடாது என்று இந்துத்துவ கைக்கூலிகள் இணையத்தில் முன்னெடுத்து வரும் பிரச்சாரங்களின் பின்னணி இதுதான்.
”தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு ஏன் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்? தகுதி இல்லாதவர்களுக்கு ஏன் மக்களின் வரிப்பணத்தைக் கொட்டியழ வேண்டும் என்பது வெளியே சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று. அதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம்.
”முதலில் ஒரு மாணவர் இளங்கலை, முதுகலை படிப்புகளில் தேறி முனைவர் பட்டத்திற்கும் ஆராய்ச்சிப் படிப்புக்கும் வருகிறார் என்றால் அவர் திறமையற்றவராகவா இருப்பார்? ஒருவரை முனைவராகவும், ஆராய்ச்சி மாணவராகவும் சேர எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவற்றைக் கடந்து தானே வருகிறார்? அடுத்து, இந்த தேசிய தகுதித் தேர்வு என்பது துறை சார்ந்த ஒன்றல்ல. அதற்கென்று தனியே தயாரிக்க வேண்டும். தேர்வு பெற்ற சிலர் ஆண்டுக்கணக்கில் இதற்காக செலவிட்டுப் படித்துள்ளனர்”
”சரி, இந்தக் காரணங்களுக்காக தகுதியற்றவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்கிறீர்களா?”
“மீண்டும் நீங்கள் புரிந்து கொள்வதில் தவறிழைக்கிறீர்கள். இது துறைவாரியான தேர்வல்ல என்று சொன்னேன். கணிதத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் ஒரு மாணவனுக்கு இந்தியாவின் மூன்றாவது நிதியமைச்சர் யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? துறைசார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர் ஒருவருக்கு அந்தத் துறையில் திறமை உள்ளதா இல்லையா என்பது தான் பிரதானமே ஒழிய இதுவல்ல”
”நீங்கள் சொல்வது புரிகிறது. எனினும், வெளியே முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு உங்கள் பதில் பொருத்தமானதாக இருக்கும் என்று நீங்களே நினைக்கிறீர்களா?”
”பொதுபுத்தியை ஆளும் வர்க்கம் தங்களுக்கு சாதகமாக கட்டமைக்க எளிமையான குற்றச்சாட்டுகளே போதுமானது தான். ”தகுதியற்றவர்கள்” என்று ஒரேugc-protest
வார்த்தையில் அவர்கள் முடித்துக் கொள்வார்கள். இப்போது நீங்கள் கேட்ட முதல் கேள்விக்கு வாருங்கள்.. இங்கே படிப்பவர்களில் சுமார் 20 சதவீதமானோர் வசதியுள்ள குடும்ப பின்னணி கொண்டவர்கள். மீதமுள்ளோர் நடுத்தர வர்க்கத்தினர் – இதில் கணிசமானோர் வறுமையான பொருளாதார பின்னணி கொண்டவர்கள். 21 வயதுக்குள் இளங்கலையும், 25 வயதுக்குள் முதுகலையும் முடிக்கும் இவர்கள், அடுத்த சில ஆண்டுகள் முயற்சி செய்து தான் முனைவர் பட்ட படிப்புக்கு வருகிறார்கள். அதில் இரண்டு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு ஆராய்ச்சி மாணவராகும் போது வயது முப்பதை நெருங்கி விடுகிறது. பின்னர் ஆராய்ச்சிப் படிப்பை முடிக்கும் போது அவரவர்க்குக் கிடைக்கும் வழிகாட்டிகளைப் பொறுத்து முப்பத்தைந்தைக் கூட நெருங்கி விடுகிறார்கள்..”
“இவர்களை பொருளாதார ரீதியில் தாங்கும் நிலையில் இவர்கள் குடும்பங்கள் இருப்பதில்லை. அரசு கொடுக்கும் எட்டாயிரம் ரூபாய் தான் ஒரே வழி. அதை நிறுத்துவது என்பதன் பொருள் ஏழைகளைத் தொடர்ந்து அறிவுக்கண் அற்றவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்கிற அரசின் உள்நோக்கத்தைத் தான் காட்டுகிறது. காசு கட்டி சிறப்பு டியூசன்கள் போயோ அல்லது வீட்டாரின் பொருளாதார நெருக்கடி இன்றி ஒரே மூச்சாக சொந்த முறையில் படித்தோ தேசிய தகுதித் தேர்வை வெல்வது பொரும்பான்மையான மாணவர்களுக்கு எதார்த்தமாகவே சாத்தியமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்”
அன்றாட உணவுக்கும் சொந்தப் பராமரிப்பு செலவுக்கும் என்ன செய்யப் போகிறோமோ என்கிற நெருக்கடி மாணவர்களுக்கு இல்லை என்பதும், வளாகத்தில் நிலவும் விவாதச் சூழலுக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ. 2500 வரை ஆகிறது. மாணவர் விடுதிகளில் உள்ள உணவகங்கள் தவிர்த்து வளாகத்துக்குள்ளேயே தாபாக்கள் உள்ளன. இங்கும் உணவுப் பொருட்களின் விலை குறைவு தான். தேனீரின் விலையும் ஐந்து ரூபாய்தான், ஆலூ பரோட்டாவின் விலையும் ஐந்து தான். உணவுக்கான செலவைத் தவிர செல்பேசி மற்றும் இணையத்திற்கு தோராயமாக ஐநூறு ரூபாய்கள் வரை செலவாகிறது. மீதமுள்ள தொகையில் பெரும்பாலும் புத்தககங்கள் வாங்குகிறார்கள்.
ஒவ்வொரு மாணவரின் அறையிலும் ஒரு குட்டி நூலகம் போல் துறைவாரியான நூல்கள் குவிந்து கிடக்கின்றன. இந்தச் செலவுகளைத் தாண்டி அரசு வழங்கும் எட்டாயிரம் ரூபாயில் வீட்டுக்கு காசு அனுப்புவதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. எங்கோ பீகாரின் கிராமம் ஒன்றில் கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பேராசிரியர்களாவதற்கு கடனாளிகள் ஆகத் தேவையில்லை என்கிற அளவுக்கு அரசின் உதவித் தொகை உதவுகின்றது.
ஜே.என்.யு வளாகத்தை ஒரு குட்டி இந்தியா என்று சொல்லலாம். 25 சதவீதமானோர் பீகாரிகள். அதற்கடுத்தபடியாக பெங்காலிகள் சுமார் 15 – 20 சதவீதமானோரும் உத்திர பிரதேசத்திலிருந்து சுமார் 15 சதவீதம் பேரும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சுமார் பத்து சதவீதம் பேரும் உள்ளனர். ஒரிசா மற்றும் கேரளாவில் இருந்து பத்துக்கும் குறைவான சதவீத மாணவர்கள் உள்ளனர். காஷ்மீரிகள் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு கணிசமாக உள்ளார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சொற்ப அளவில் உள்ளனர்.
”இங்கே பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் பழைய சமூக அமைப்புகளும் சாதியும் வலுவாக உள்ள மாநிலங்களில் இருந்து வருகிறவர்களாக இருக்கிறார்கள். வளாகத்திற்குள் மாணவர்களுக்குள் சாதிப் பாகுபாடு உள்ளதா?”
”வளாகத்திற்குள் சாதி உள்ளது. ஆனால், மாணவர்களுக்கிடையே சாதிப் பாகுபாடுகள் நிச்சயமாக இல்லை”
“கொஞ்சம் புரியும் விதமாக விளக்குங்களேன்”
jnu_2744857g”மாணவர்களைப் பொருத்தளவில் தங்களுக்கிடையே சாதி வேறுபாடு பார்ப்பதில்லை. ஏன் மத, இன வேறுபாடு கூட பார்ப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் இங்கே ஓரிரு பாகிஸ்தானிகளும், சில பங்களாதேஷிகளும் சில இலங்கையர்களும் கூட உண்டு. இவர்களையும் நாங்கள் ஒதுக்குவதில்லை.. தேச வேறுபாடுகள் கூட பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் மாணவர்கள் – அவ்வளவு தான். அவர்களின் பார்வைக் கோணங்களும் இங்கே முக்கியமானது”
”ஆனால், வளாகத்திற்குள் சாதி இருக்கிறது என்றீர்கள்”
“ஜே.என்.யு என்பதால் கொஞ்சம் சுலபமாக கண்டுபிடிக்க முடியாதபடி நுணுக்கமாக இருக்கும். இங்கே சுமாராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளனர். இந்த மொத்த எண்ணிக்கையில் தலித்துகள் என்று எடுத்துக் கொண்டால் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருக்கிறார்கள். அதே போல், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் வெகு சொற்பமாகவே உள்ளனர்.
“சில பேராசிரியர்கள் தன்னிடம் படிக்கும் தலித் மற்றும் ஓ.பி.சி வகுப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவருக்கு ஊக்கமாக உதவமாட்டார்கள். சமர்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளில் சில்லறையான விசயங்களை சுட்டிக்காட்டி மதிப்பெண்களைக் குறைப்பது.. இயல்பாக பழகாமல் இருப்பது… ஆராய்ச்சிப் படிப்பைப் பொருத்தவரை உங்கள் வழிகாட்டி எந்தளவுக்கு உங்களோடு இயல்பாக பழகி வழிகாட்டுகிறாரோ அந்தளவுக்குத் தான் அது வெற்றியடையும். உங்கள் வழிகாட்டி உங்களிடம் ஏனோதானோவென்று கொஞ்சம் இயந்திரத்தனமாக முகத்தைக் காட்டி நடந்து கொள்வாரென்றால் நீங்கள் உளவியல் ரீதியிலேயே நம்பிக்கை இழந்து விடுவீர்கள்…”
எனினும், சமீப காலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகளின் வரவு அதிகரித்துள்ளது. இம்மாணவர்களுக்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தற்போது நேர்முகத் தேர்வுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 25 மதிப்பெண்களைக் குறைத்து எழுத்துத் தேர்வுக்கு அதிக மதிப்பெண்கள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன மாணவர் அமைப்புகள்.
இப்படி வெவ்வேறு சாதி, மத, இன, மொழிப் பின்னணிகளில் இருந்து வளாகத்திற்கு வந்து சேரும் மாணவர்களை அங்கே நிலவும் அரசியல் சூழல் மொத்தமாக மாற்றியமைக்கிறது. பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் வளாகத்திற்குள் நுழைந்ததும் எதிர்கொள்ளும் ஜனநாயக மதிப்பீடுகள் முதலில் அதிர்ச்சியடைய வைக்கின்றன.
எப்படி ஆசிரியர்களுக்கு அடிமையாக அல்லாமல், சமமாக பேசுகிறார்கள்? எப்படி பெண்களை கண்ணியமாக நடத்துகிறார்கள்? எப்படி சாதி வேறுபாடு பாராட்டாமல் கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பழகுகிறார்கள்? பாலியல் கண்ணோட்டம் இன்றி ஆணும் பெண்ணும் பழகுவது சாத்தியமா? இரவு நேரமானாலும் பெண்கள் இவ்வளவு துணிச்சலாக நடமாட முடியுமா? மாணவர்களுக்கென்று உரிமைகள் இருக்குமா? அந்த உரிமைகளுக்காக போராடுவது சாத்தியமா? – என்பவை போன்ற கேள்விகள் முதல் ஆறு மாதங்களுக்குள்ளாகவே மறைந்து அவர்களும் இந்தக் கலாச்சாரத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு வகையில் ஒரு தனித்தீவைப் போல அமைந்திருக்கும் ஜே.என்.யு வளாகத்தின் தனிச் சிறப்புகளில் இதுவும் ஒன்று. வளாகத்தினுள் செயல்படும் ஏ.பி.வி.பி உறுப்பினர்கள் கூட வெளியிலிருக்கும் தங்கள் அமைப்பிலிருந்து நிறைய வேறுபடுகிறார்கள் என்பதை பின்னர் வரும் பகுதிகளில் நாம் காணப் போகிறோம்.
பார்ப்பனிய விழுமியங்களில் ஊறிப் போன வட இந்தியாவின் இதயப்பகுதியில் ஜே.என்.யு ஒருவிதமான ஐரோப்பிய பாணியிலான சுதந்திரத்தை இத்தனை NEHRU_jnuஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றது. ஜே.என்.யு பல்கலைக்கழகத்தை கனவு கண்ட நேருவோ பின்னர் அதை செயல்படுத்திய இந்திரா காந்தியோ கூட இதைக் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். முதலாளிய ஜனநாயகத்தின் மீதான தனது காதலையும் சோசலிசத்தின் மேலான ஃபாண்டசி கனவுகளையும் ஏதோவொரு சமன்பாட்டில் இணைத்து ’உலகத்தரமான’ ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறார் நேரு.
பின்னர் கூட்டு சேரா நாடாகவும், ரசிய சார்பு நாடாகவும் இரண்டு முகங்களைக் காட்டி வந்த இந்திராவின் காலத்தில் இது செயல்வடிவம் பெறுகிறது. ஜே.என்.யுவின் இலச்சினையே இரண்டு (சிந்தனை) உலகங்களின் சந்திப்பிலிருந்து ஒரு சுடர் எழுதுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசத்தைப் புரிந்து கொண்ட மாணவர்களை உருவாக்குவதும் அவர்களை தேச நிர்மாணத்தில் ஈடுபடுத்துவதுமே தங்கள் நோக்கங்கள் என்று அப்போது சொல்லிக் கொண்டார்கள். எனினும் எதார்த்தத்தில் அன்றைக்குப் நாடெங்கிலும் பரவலாக எழுந்து வந்த சோசலிச சிந்தனைகளை நிறுவனமயப்படுத்தும் முயற்சியாகவே அது இருந்தது.
பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட துவக்க காலத்தில், அதாவது எழுபதுகளில், வியட்நாம் போரின் பாதிப்புகள் மேற்கில் மட்டுமின்றி உலகெங்கும் மிகப் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருந்தன. ரசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பனிப்போர் முற்றியிருந்தது. இதன் பின்னணியில் உலகெங்கும் எழுந்த போராட்டங்கள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிலைப்படுத்தின. அந்தக் குரல்களில் மாணவர் சமுதாயத்தின் குரல் தனித்துவத்தோடு ஓங்கி ஒலித்தது.
அமைப்பு முறைக்குள்ளேயே ஒரு வடிகால் என்கிற எல்லையை உடைத்துக் கொண்டு இடதுசாரி அரசியலின் பக்கம் மாணவர்களின் அரசியல் நகர்ந்தது. அதன் பின்னணியில் தான் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போதும் அதிகாரத்தின் காலடியில் பணிய மறுத்து ஜே.என்.யு மாணவர்கள் வீறு கொண்டு எழுந்து நின்றனர். மாணவர்களின் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடுவது என்கிற அளவில் தம்மை சமூகத்திலிருந்து துண்டித்துக் கொள்ளாமல் அரசியல், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு கலாச்சாரத்தை ஜே.என்.யு வரித்துக் கொண்டது.
அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத் தான் தற்போதைய ஜே.என்.யு போராட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது இந்துத்துவ பாசிசம் முழுமையாக தன்னை ஆயுத பாணியாக்கிக் கொண்டு எதிர்ப்புக் குரல்களை முழக்கும் குரல்வளைகளின் மீது வெறி கொண்டு ஏறி மிதிக்கும் நிலையிலும் ஜே.என்.யு வளாகம் அஞ்சாமல் அடிபணியாமல் நிமிர்ந்து நிற்பதற்கு அதன் அரசியல் பாரம்பரியமே காரணம்.
எதிர்க் குரல்களைக் கூட மதித்து இடம் கொடுத்து விவாத மேடைக்கு அழைத்து வந்து கருத்து ரீதியில் வீழ்த்த வேண்டும் என்று கருதும் ஜே.என்.யுவின் அரசியல் பண்பு தனித்துவமானது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கண்ணையா குமார் தனது ஏ.பி.வி.பி நண்பர்களை நோக்கி நீங்கள் சுப்பிரமணிய சுவாமியைக் கூட அழைத்து வாருங்கள் விவாதிக்கலாம் என்கிறார். ஜே.என்.யுவில் நிலவும் இந்த விவாத சுதந்திரம் இந்துத்துவவாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த அரசியல் சூழல் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
(தொடரும்)
– வினவு செய்தியாளர்கள்

கருத்துகள் இல்லை: