புதன், 9 மார்ச், 2016

அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு சிபி ஐ முன்வராதது ஏன்? சி பி ஐ மீது சந்தேகம்?

சிபிஐ விசாரணைக்கு முன்வராதது ஏன்? முத்துக்குமாரசாமி வழக்கில் கலைஞர் கேள்வி வேளான் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு முன்வராதது ஏன் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வேளாண் பொறியாளர்  முத்துக்குமாரசாமி  என்ற  மூத்த அதிகாரியை  துறையின் அமைச்சரும், அவருடைய ஆதரவாளர்களும்  ஓட்டுநர்கள் நியமனத்தில்  ஒவ்வொருவரிடமும்  ஒன்னே முக்கால் இலட்சம் ரூபாய் வீதம் வசூலித்துக் கொடுக்கும்படி அழுத்தம் கொடுத்ததாகவும்,  அதிலிருந்து தப்பிக்க முடியாததால்,  அதிகாரி முத்துக்குமாரசாமி புகைவண்டிக்கு முன்னால் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஏடுகளில் எல்லாம் விரிவாகச் செய்தி வந்தது.  தன்னுடைய கணவருக்கு அழுத்தம் கொடுத்த காரணத்தால் தான் அவர்  தற்கொலை செய்து கொண்டார் என்று அதிகாரி முத்துக்குமாரசாமியின் துணைவியாரே புகார் அளித்தார்.


வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று அனைத்துத் தரப்பினரும் வற்புறுத்திய போது,  விசாரணையை  தமிழக அரசின் மேற்பார்வையிலே உள்ள சி.பி., சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றினார்கள்

அப்போதே நான் விடுத்த அறிக்கையில், முத்துக்குமாரசாமி என்ற அதிகாரியின் தற்கொலை குறித்து, சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்,  இந்த அரசு சி.பி., சி.ஐ.டி., விசாரணை  நடத்துவது என்பது உண்மையை மூடி மறைக்கின்ற முயற்சி என்று தெரிகிறது.  ஏனென்றால் சி.பி.ஐ. விசாரணை என்பது  மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குரியதல்ல.  ஆனால் சி.பி., சி.ஐ.டி., விசாரணை என்பது  தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கக் கூடியது.   ஓர் அமைச்சர் தொடர்புடைய  இந்த வழக்கில் அரசு என்ன சொல்கிறதோ, அதைத் தான் சி.பி., சி.ஐ.டி., முடிவாகத் தெரிவிக்கும் என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதது.   இந்தப் பிரச்சினை பற்றி ஏடுகளில் வரும் செய்தி,  முத்துக்குமாரசாமி தற்கொலையில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இதுபற்றி உண்மை உலகத்திற்குத் தெரிய சி.பி.ஐ. விசாரணை நடப்பது தான் பொருத்தமாக இருக்கும்.

அந்த தற்கொலை வழக்கில் குற்றவாளியாகக் கூறப்பட்டவர் அ.தி.மு.க. அமைச்சர்.   அவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனிலும் வெளியே வந்து விட்டார்.   இதுபோன்ற வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்பட்டால்,  அவர்  போலீஸ் காவலில்  எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்.  அவர் வீடு சோதனையிடப்படும்.  ஆனால்  இந்த வழக்கிலே அது இரண்டுமே நடைபெற வில்லை என்று காவல் துறை அதிகாரி ஒருவரே  கூறுகிறாராம்.  செம்மரக் கடத்தல் வழக்கைப் போலவே  இந்த வழக்கையும் சுருட்டி மூடி வைப்பதற்கான  முயற்சிகள் நடப்பதாகத் தான்  கருத வேண்டியுள்ளது என்றெல்லாம் அப்போதே கூறப்பட்டது.

அந்தச் செய்திகளை உண்மையாக்குகின்ற வகையில் அக்ரி கிருஷ்ண மூர்த்தி மீதான  வழக்கு நீதி மன்றத்திலே ரத்து செய்யப்பட்டுள்ளது.  நீதிபதி தனது தீர்ப்பைக் கூறும்போது,  சி.பி., சி.ஐ.டி.  தாக்கல் செய்துள்ள  ஆவணங்கள் வழக்குக்குச் சாதகமாக இல்லை என்று கூறித் தான் வழக்கினைத் தள்ளுபடி செய்திருக்கிறார்.   இதைத் தான் தொடக்கத்திலேயே  இவ்வாறு நடக்குமென்று எதிர்பார்த்தே சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டது.  ஆனால் “பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலும்" என்ற பழமொழிக்கொப்ப,  நடவடிக்கை எடுக்கப்பட்டவர் அ.தி.மு.க. அமைச்சர் என்பதால்,  அவரை இந்த வழக்கிலிருந்து  தப்புவிக்கும் வண்ணம் சி.பி., சி.ஐ.டி. விசாரணை என்ற பெயரால் ஏனோதானோ என்ற முறையில்  விசாரித்து முழுமையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால்  இந்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்திருக்கிறார்கள். 

எனவே  அ.தி.மு.க. அரசு  உண்மையிலேயே இந்த வழக்கில் நீதி நியாயம் நடக்க வேண்டும்  என்றால்,  தானாகவே  இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதோடு, விசாரணையை சி.பி.ஐ. இடம் ஒப்படைத்து, முறையாக விசாரித்து என்ன நடந்தது என்பதை  உலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி தமிழகக் காவல் துறையைப் பற்றி  தனது தீர்ப்பிலே தெரிவித்திருப்பதிலிருந்தே, தவறு யாரிடம் இருக்கிறது  என்று   நாட்டு மக்களுக்கு   நன்றாகவே தெரிகிறது. nakkheeran,in

கருத்துகள் இல்லை: