சனி, 16 ஜூன், 2012

நித்தியின் உடலுக்கு மதுரை மசாஜ்!!

Viruvirupu
“இன்னமும் ஒரு வருடத்துக்கு யாருடைய முதுகையும் பதம் பார்க்க கூடாது” என்ற நிபந்தனையுடன் நித்தி சுவாமிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கேள்வி கேட்ட செய்தியாளருக்கு ரத்தம் வரும் விதத்தில் ‘திருச்சாத்து’ சாத்திய காரணத்தால், நமது சகலகலா வல்லவரான சாமியார் கைதாகியிருந்தார்.

கைது செய்யப்பட்ட மறுநாளே, முதலாவது வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட சாமியார் வெளியே வந்து சோம்பல் முறிப்பதற்குள், இரண்டாவது வழக்கில் கைதாகியிருந்தார். இது பொது அமைதியை சீர்குலைத்த குற்றச்சாட்டு. அதற்காக மைசூர் சிறையில் எழுந்தருளி இருந்தவரை, நேற்று மாலை ஜாமீனில் வெளியே விட்டிருக்கிறார்கள்.
வெளியே விட்ட கையோடு சிட்டுக்குருவிபோல மதுரைக்கு வந்துவிட்டார்.
பொது அமைதியை சீர்குலைத்ததாக கைது செய்யப்பட்ட மதுரை இளைய ஆதீனத்தை ஜாமீனில் விடவேண்டும் என்ற கோரிக்கை மனு நேற்று ராம்நகரம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீராமரெட்டியிடம் தாக்கல் செய்யப்பட்டது. மாலை 3.30-க்கு மனு விசாரணைக்கு வந்தது. சிறையில் இருந்த சுவாமிகளை கர்நாடகா போலீஸ், கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரவில்லை.
“சுவாமிகள் எங்கே?” என்ற கலெக்டர் கேட்டதற்கு, “பாதுகாப்பு கருதி நித்யானந்தாவை அழைத்து வரவில்லை” என்று போலீஸார் தெரிவித்தனர். (சுவாமிகளின் பாதுகாப்பா, கலெக்டரின் பாதுகாப்பா என்று தெளிவாக தெரியவில்லை)
நித்யானந்தாவின் சார்பில் வக்கீல் முத்துமாலை ஜாமீன் கோரி வாதிட்டார். அரசு வக்கீல் நாகராஜ் ரெட்டி ஜாமீன் வழங்கப்படுவதற்கு மறுப்பு தெரிவித்தார். நித்யானந்தாவால் பொது அமைதிக்கு சீர்குலைவு ஏற்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டதாக வாதிட்டார். மேலும் 10 நாட்கள் நித்யானந்தாவின் நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், பக்தர்களும், மதுரை மூத்த ஆதீனமும் செய்த புண்ணியம், கலெக்டர் ஸ்ரீராமரெட்டி, “நித்யானந்தா ஒரு வருடத்துக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி பத்திரம் அளிக்கவேண்டும். அவர் சொந்தமாக 1 லட்சம், வேறு இருவர் தலா 1 லட்சம் பிணை தொகை அளித்து ஜாமீன் பெறலாம். பிணை தொகை செலுத்திய பின்னர் ஜாமீனுக்கான நகலை பெறலாம்” என்றார்.
பொது அமைதிக்கு பங்கம் வராமல் இருக்க வேண்டும் என்பதால், சாமியாரின் சிஷ்யர்களும், சிஷ்யைகளும் அடுத்த 365 நாட்களுக்கு யார் மீதும் கை நீட்டாமல், கட்டுப்பாடாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாநில முதல்வர் சதானந்த கவுடா பெங்களூரில் நேற்று அளித்த பேட்டியில், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்துடனும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவுமே நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்தேன். சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டால் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நித்யானந்தாவுக்கு எதிராக அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய பிறகே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
அவர் வேடிக்கை பார்க்கிறாரோ, இல்லையோ, சுவாமிகள் ஆளை வெளியே விட்டால் போதும் என்ற நிலையில் இருந்தார். எனவே உடனடியாகவே கர்நாடகாவை விட்டு கிளம்பி, வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தை நோக்கி கிளம்பியிருந்தார்.
உடல் அலுப்போடு அலுப்பாக இன்று அதிகாலை சிஷ்யர்கள் சகிதம் மதுரை வந்து சேர்ந்தார்.
மதுரை மூத்த ஆதீனம், தம்மால் முடிசூட்டப்பட்ட இளைய ஆதீனத்தைக் காணாமல் மனச் சோர்வு அடைந்து, கடந்த இரு தினங்களாக உணவுகூட உண்ணாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு, மூத்த ஆதீனத்தின் காதுகளில் பிருந்தாவனத்து வேய்ங்குழல் போன்ற ஒலி கேட்டது. அது வேறொன்றுமில்லை, இளையவரின் கார் ஹாரன் ஒலி!
உடனே துள்ளியெழுந்து சென்று நித்தியானந்தாவை கட்டித் தழுவி வரவேற்றார் மூத்த ஆதீனம் அருணகிரிநாதர்.
தற்போது மதுரை மடத்தில், ஜெயிலில் ஏற்பட்ட உடல் அலுப்பு தீர மசாஜ் செய்தவண்ணம் உள்ள இளைய ஆதீனம், கர்நாடகா அரசில் கடும் கோபத்தில் உள்ளார். மூத்த ஆதீனத்துக்கும் கடும் கோபம்தான். ஆனால், மாநில அரசு மீது அல்ல,
சாட்சாத், மகேஸ்வரன் மீது!
முத்த சுவாமிகளிடம், “நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக்குங்கள்” என்று கூறிய சிவனும், பார்வதியும்,  “இளைய ஆதீனம் அவ்வப்போது ஜெயிலுக்கும் போக வேண்டியிருக்கும்” என்பதையும் முன்கூட்டியே சொல்லவில்லை பாருங்கள்… மூத்த ஆதீனத்துக்கு மகேஸ்வரன்மீது கோபம் வருமா? வராதா?  …நீங்களே சொல்லுங்க!

கருத்துகள் இல்லை: