வியாழன், 22 செப்டம்பர், 2011

அம்மா!!!!!!!!! தேம்பித் ததும்பும் கேப்டனும் ‘காம்ரேடு’களும்!

சட்டமன்றத்தில் அம்மாவின் அடிமையாக கருணாநிதியை அடுக்கு மொழியில் பழித்து பேசி அம்மாவை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்து பதவிசாக காலத்தை ஓட்டி வந்தவர்களுக்கு சூப்பர் டீலக்ஸ் ஆப்பு விரைவாக செருகப்பட்டுள்ளது 

ழை பெய்ததும் உழுது, நாற்று நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி, பின் அறுவடை செய்யும் விவசாயிகளோடு ஒப்பிடும் போது ஓட்டுக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளை என்னவென்று சொல்வது?
ஐந்தாண்டுகள் கொட நாட்டில் படுத்துக் கொண்டே எழுதிக் கொடுக்கப்படும் அறிக்கைகளை வெளியிட்டு, இறுதி ஆண்டில் ஈர்த்து வரப்படும் கூட்டத்தை வைத்து ஹெலிகாப்டரில் பறந்து ஆர்ப்பாட்டம் செய்த ‘புரட்சித் தலைவி’ தி.மு.க அரசாங்கம் மீது மக்கள் கொண்ட வெறுப்பினால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கரையொதுங்கினார்.
அது உழைத்துப் பெற்ற வெற்றியல்ல, உட்கார்ந்து பிடித்த வெற்றி என்றாலும் அம்மாவின் ஆணவத்தை தேர்தலுக்கு முன்பேயே நாம் மட்டுமல்ல அம்மாவின் நிழலை வணங்கி கரையேறிய கூட்டணிக் கட்சிகளும் உணர்ந்திருந்தார்கள். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போதே வேட்பார்களை வெளியிட்டதாக இருக்கட்டும், பிரச்சாரத்தில் அவர்களை வேண்டாத விருந்தாளியாக பந்தாடியதாக இருக்கட்டும் எதுவும் மறக்கக் கூடிய ஒன்றல்ல.

ஆனாலும் தி.மு.க எதிர்ப்பு மனநிலையில் குவிந்திருந்த தமிழக மக்களின் மனநிலையை அம்மாவின் சேட்டைகள் சிதறடித்துவிடும் என்று அவரது அந்தப்புரத்து சாணக்கிய குருக்கள் கொஞ்சம் ஓதியதன் பலனாக அம்மா கொஞ்சம் இறங்கி வந்தார். அப்போதும் கூட ‘கேப்டன்’ விஜயகாந்தும், காம்ரேடுகளான போலிக் கம்யூனிஸ்டுகளும் சுயமரியாதை இன்றி அம்மாவின் அருளைப்பெற அலைந்த கதையும் நமக்கு மறந்திருக்காது.
தேர்தல் முடிவு வந்ததும் கையில் திணிக்கப்பட்ட அந்த வெற்றி தனது கடந்த கால ஆட்சியின் மகத்துவத்தை நினைத்து மக்கள் பயபக்தியுடன் அளித்த வெற்றி என்று ஜெயா பேசினார். “எனது அரசு, எனது திட்டம், எனது தொலை நோக்கு,” என்று எதற்கெடுத்தாலும் அந்த ட்ரிபிள் எக்ஸ்எல் அகந்தை அவ்வப்போது ஆட்டம் போட்டாலும் பார்ப்பன ஊடகங்கள் எதுவும் அதை கண்டு கொள்ளாததோடு ஏதாவது கோரிக்கை இருந்தால் பணிவோடு முன்வைத்து அம்மா பார்த்து ஏதாவது செய்தால் சரி என்று எழுதி வந்தனர். இந்த பக்தி பஜனை மண்டலியில் தினமணி வைத்தியநாதன் முதல் ஆளாய் இருந்தார்.
அம்மாவோடு கூட்டணி வைத்து அடிமைத்தனத்தோடு பணியாற்றியதன் பலனாக தே.மு.தி.கவிற்கு எதிர்க்கட்சி தகுதியும், காம்ரேடுகளுக்கு சில சீட்டுகளும் கிடைத்தன. பிறகு சட்டமன்றத்தில் அவர்களும் அம்மா சரணம் பாடியே காலத்தை ஓட்டினார்கள். சமச்சீர்கல்வி ரத்து என்று வந்த சட்டத்திற்கு போலிக்கம்யூனிஸ்டுகள் முதல் ஆளாய் ஆதரித்து ஓட்டுப் போட்டார்கள். கேப்டனின்அடிமை எம்.எல்.ஏக்களோ கருணாநிதியை பழித்து அடுக்கு மொழியில் பேசி அம்மாவை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தார்கள்.
ஆனாலும் அம்மா தே.மு.தி.க சில்லறைகளை மதிக்கவில்லை என்பதோடு அவ்வப்போது கலாய்க்கவும் செய்தார். சட்டமன்ற அனுபவம் இல்லாத அந்த கத்துக்குட்டிகள், மேட்டூரில் அணை இருக்கிறது, திருத்தணியில் முருகன் கோவில் இருக்கிறது என்ற வரலாற்று உண்மைகளை பேசி கொல்கிறார்கள் என்று அம்மா அவர்களை எச்சரிக்கவே செய்தார். இவையெல்லாம்  கேப்டன் முன்னிலையில் நடந்திருந்தாலும் பதிலுக்கு திருப்பி சுடுவதற்கு அவரென்ன இராணவத்தில் இருக்கும் கேப்டனா என்ன? ஆர்.கே.செல்வமணி அளித்த அந்த கேப்டன் பதவியையும், வெத்துத் துப்பாக்கியையும் வைத்து மன்சூர் அலிகானை வேண்டுமானால் சுடலாம், அம்மாவை முடியுமா என்ன?
தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் புரட்சித் தலைவி மேயர், நகராட்சி என்று எல்லா பதவிகளுக்கான அ.தி.மு.க அடிமைகள் பட்டியலை அறிவித்து விட்டார். கூட்டணிக் கட்சி என்று பரிதாபத்துடன் கூறிக்கொள்ளும் சில அய்யோ பாவம் அடிமைகள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் அம்மாவின் அதிரடிக்கு முன் கால்தூசு.
ஆனாலும் காம்ரேடுகள் விடவில்லை. விடாது போயஸ் தோட்டத்திற்கு காவடி எடுத்தார்கள். ராமகிருஷ்ணனும், தா.பாண்டியனும் (நல்லகண்ணுவிற்கு என்னாச்சு?) வந்தார்கள்; பேசினார்கள்; அம்மா வெளியிட்ட பட்டியல் இறுதியல்ல என்றார்கள். இப்படி என்னவெல்லாம் சமாதானமடைய முடியுமோ அப்படி எல்லாம் பேசினார்கள். ஆனாலும் அவர்களுக்கு மேயர் இல்லை, ஏற்கனவே இருந்த நகராட்சி இடங்களும் இல்லை என்று முதல்கட்ட ‘பேச்சுவார்த்தை’கள் தெரிவிக்கின்றன.
ஆயினும் காம்ரேடுகள் இத்தகைய போயஸ்தோட்டத்து அடிமைத்தனத்தில் கொட்டை போட்டவர்கள் என்பதால் ஏதோ சில எலும்புத்துண்டுகள் கிடைக்காமல் போகாது. ஆனால் கேப்டன் நிலையோ இன்னும் பரிதாபம். 29 நபர்களை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தேர்தலுக்கு முன்பு நடந்தது போன்று இப்போதும் அம்மா இறங்கி வரமாட்டார் என்று கேப்டன் வீட்டு நாய்குட்டிக்கு கூடத் தெரியும்.
அப்போதாவது தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. இப்போது அசுர பெரும்பான்மையில் ஆட்சியை அதிகாரத்துடன் நடத்தும் அம்மாவிடம் ஏதாவது கோரிக்கை வைக்க நினைத்தாலும் அது தொண்டைக்குழியை தாண்டி வருவது கடினம். மேலாக தி.மு.க பெருந்தலைகளே அம்மாவின் ருத்ர தாண்டவத்தை கண்டு கதிகலங்கிய நிலையில் கத்துக்கட்சி கேப்டன் கட்சியினர் என்ன செய்து விட முடியும்?
பத்து மேயர் பதவிகளில் நான்கிலிருந்து இரண்டு வரை, உள்ளாட்சி பதவிகளில் முப்பது சதவீதம் என்று பெருந்தன்மையுடன் மனக்கோட்டை கட்டிய கேப்டன் தற்போது என்ன செய்வது என்று திண்டாடி வருகிறார். அம்மாவின் நூறு நாள் ஆட்சி விழா பஜனை மண்டலிக்கு அவர் போகவில்லை என்பதுதான் பு.த வின் கோபத்திற்கு காரணம் என்று கேப்டனது பாடிகார்டுகளே பேசிவருகிறார்கள்.
அதன்படி கேப்டன் தனியாக தேர்தலில் நிற்பதை அவரது கட்சியினர் யாரும் விரும்பவில்லை. அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக அம்மாவும் அருள்பாலிக்க தயாரில்லை. சில பல எலும்புத் துண்டுகளை கவ்விக்கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதுதான் அவரது நிலை. காம்ரேடுகளை முதலில் அழைத்து பேசியது போல பெரிய கூட்டணிக் கட்சியான தே.மு.தி.கவை இன்னும் பேசுவதற்கே அழைக்கவில்லை என்பது வேறு கேப்டனது படை வீரர்களை கதிகலங்க வைத்திருக்கிறது. இதெல்லாம் வைகோ அண்ணனின் வசந்த மாளிகை புலம்பலில் ஏற்கனவே நாம் பார்த்து விட்டோம்.
அரசியல் வெற்றி என்பது கட்சிகள் தமது சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டி பெறும் போராட்டம் என்பது இல்லாமல் சில வரலாற்று விபத்துக்களால் கிடைத்தால் என்ன நடக்கும்? போயஸ் தோட்டத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு அம்மா போடும் ஆட்டமும், அந்த ஆட்டத்தில் சில எலும்புகளாவது தவறி கீழே விழும் என்று கூட்டணி அடிமைகள் தவமிருப்பதும் மேற்கண்ட விபத்து வெற்றியின் தொடர் விளைவுகள்.
இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற அநாமதேயங்கள் கேப்டன் கட்சிக்கு 51 சதவீத சீட்டு ஒதுக்கீடு தருவோம் என்றெல்லாம் பேசிக் கொல்லுகிறார்கள். இந்தச்சூழலில் லெப்டிணன்ட்டுகளின் கூட்டத்தை கூட்டிய கேப்டன் “எல்லாவற்றும் தயாராக இருக்குமாறு” பேசியிருக்கிறார். முக்கியமாக இந்த சொந்தக்கதை, சோகக்கதையெல்லாம் மீடியாவில் வெளியாகிவிடுவதாகவும், இந்த முறை அப்படி வெளியானால் இனி இந்த கூட்டத்தை கூட்டவே மாட்டேன் என்றெல்லாம் எச்சரித்திருக்கிறார்.
தனது சொந்த சோகத்தைக் கூட வெளியுலகிற்கு தெரிவிக்காமல் குமுறி குமுறி அழவேண்டிய இந்தக் காட்சி எதை நினைவுபடுத்துகிறது?
www.vinavu.com

கருத்துகள் இல்லை: