சக்சேனாவின் துபாய் பினாமியும் கல்லூரித் தோழருமாக வலம் வந்தவர் 60 கோடி ரூபாயை அபேஸ் செய்தது
அரசியல்வாதி கைது செய்யப்பட்டால், அரசியலில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் சந்தோஷப்படுவார்கள். சினிமாத் துறையில் ஒருவர் கைது செய்யப்பட்டால், அத்துறையில் இருக்கும் அவரது எதிரிகள் சந்தோஷப்படுவார்கள். பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டால், கட்டுமானத் தொழிலில் அவரது போட்டியாளர்கள் கொண் டாடுவார்கள். அரசியல், சினிமா, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் எந்த முத்திரையும் பதிக்காத, நேரடியாக அந்தத் தொழில்களில் இறங்காத ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டதும் எல்லா தரப்பினரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.
தொழில்ரீதியாக இப்படி போட்டிகள் இருப்பதைக் கூட ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும். ஒரு நண்பன் கைது செய்யப்பட்டால், அவரது நண்பர்கள் வருத்தப்படுவதுதான் இயல்பு. ஆனால், ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது நண்பர்கள் எல்லாம் ரகசியமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றால் நம்ப முடிகிறதா?
எல்லாத் தரப்பிலிருந்தும் ஏன் இப்படி சக்சேனாவுக்கு எதிர்ப்பு? தனக்கு வாழ்வளித்த கலாநிதியையே மதிக்காத சக்சேனா, நண்பர்களையும் அப்படியே நடத்தியதுதான் இதற்குக் காரணம்.
தி.மு.க. ஆட்சியில் கிண்டியில் இருக்கும் செக்கர்ஸ் ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கு குறித்து, நண்பர்களிடம் பேசிய சக்சேனா, “அந்த ஓட்டல் அடிச்ச விவகாரத் துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் துரை தயாநிதியும் அவனோட ஆட்களும் செஞ்ச வேலை. இது கலாநிதிக்கும் தெரியும். ஆனால், மாமனும் மச்சானும் சேர்ந்து என்னை மாட்டி விடணும்னு நினைக்கறானுங்க’’ என்று சொல்ல, நண்பர்கள் வட்டாரம் ஆடிப்போயிருக்கிறது. இந்தத் தகவலும் அப்போதே கலாநிதியின் காதுக்குப் போனதாம்.
இப்படியே தனது பழக்க வழக்கங்களையும் நடவடிக்கைகளையும் வைத்திருந்த சக்சேனாவை துபாய் பினாமியும் எதற்காக ஏமாற்றினார் என்பது அவரை விசாரித்தால்தான் தெரியும் என்கிறது சக்சேனாவின் நட்பு வட்டாரம்.
சரி... யார் அந்த துபாய் பினாமி?
சக்சேனாவின் நண்பரான வெங்கட்குமார் ஈரோட்டைச் சேர்ந்தவர். லயோலா கல்லூரியில் சக்சேனாவின் ஜூனியரான இவர், துபாயில் பெரும் நிதி நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். வெங்கட் சென்னை வரும்போதெல்லாம், சென்னையில் இருக்கும் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் தங்கிச் செல்வது வழக்கம். கடந்த ஐந்து வரு டங்களில், வெங்கட் சென்னை வந்து செல்லும் போதெல்லாம், சக்சேனா மூலம் ஏகப்பட்ட கோடிகள் கைமாறியிருக்கிறது.
அந்தப் பணத்தை சென்னை பாரிமுனையில் இருக்கும் ஹவாலா பேர்வழிகள் மூலம் துபாய்க்கு எடுத்துச் சென்றிருக்கிறார் வெங்கட். இப்படி பலமுறை கைமாறிய தொகையின் மதிப்பு மட்டும் 60 கோடி ரூபாய். அந்த நிதியை, அங்கே பெரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார் வெங்கட். இதை உறுதிப்படுத்திக் கொள்ள இரண்டு முறை சக்சேனாவும் துபாய் சென்றிருக்கிறார்.
நான்கைந்து முறை, 3 கோடி, 4 கோடி என்று கொடுத்த சக்சேனா, கடைசியில் கொடுத்த தொகை 20 கோடியாம். இந்த நிதி எப்படி வந்தது என்று வெங்கட் விசாரித்த போது, ‘எந்திரன்’ படத்தின் மூலம் தனக்கு பெரிய கமிஷன் கிடைத்ததாக, சக்சேனா சொல்லியிருக்கிறார்.
இப்படி சேர்ந்த தொகை அனைத்தும், துபாயில் முதலீடு செய்த விஷயம் வெங்கட்டுக்கும், சக்சேனாவுக்கும் மட்டுமே தெரியும். சிறை சென்ற பிறகு, தனது முக்கிய நண்பர் மூலமாக வெங்கட்குமாரிடம் பேசி இருக்கிறார் சக்சேனா.. அந்த நண்பரிடம், ‘சக்சேனா எந்தப் பணமும் என்னிடம் தரவில்லை’ என்று மறுத்து விட்டாராம் வெங்கட்குமார். இந்தத் தகவல் கிடைத்ததும் சக்சேனா சிறைக்குள் தனிமையில் கதறி அழுதிருக்கிறார்.
சிறையில் இருந்து சக்சேனா வெளியே வந்ததும் முதல் வேலையாக வெங்கட்குமாரை தொடர்பு கொண்டு பணம் குறித்து கேட்டிருக்கிறார். ‘பணத்தை முதலீடு செய்த நிதி நிறுவனம் கடும் நஷ்டத்தில் இருக்கிறது. பணம் எப்படி வரும் என்று தெரியவில்லை. அதை எப்படியாவது வாங்கிடலாம்’ என்று பதில் சொல்ல, ஆடிப் போய்விட்டாராம் சக்சேனா.
இந்தப் பண விவகாரத்தை வெளியே சொல்லவும் முடியாமல், வெங்கட்குமாரை அழைத்து கறாராக கேட்கவும் முடியாமல் தவித்து வருகிறார் சக்சேனா. இது குறித்து சக்சேனாவின் நட்பு வட்டாரத்தில் கேட்டபோது, “அவருக்கு துபாயில் ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக மலேசியா, சிங்கப்பூரில் முதலீடு செய்தி ருக்கலாம். ஆனால், வெங்கட்குமாரிடம் அவ்வளவு தொகை இருக்குமா என்பது சந்தேகம். ஒரே நபரிடம் இத்தனை பெரிய தொகையை சக்சேனா தருவதற்கு முட்டாள் இல்லை. வெங்கட்குமார் சென்னை வரும் போதெல்லாம், காஸ்மோபாலிட்டன் கிளப்பில் சக்சேனாவை தனியாக சந்தித்துப் பேசுவார். மற்றபடி வெங்கட்குமாரிடம் சக்சேனா பணத்தைக் கொடுத்து ஏமாந்தாரா என்பது தெரியாது’’ என்ற மழுப்பலான பதிலே கிடைத்தது.
தங்களுக்குத் தெரியாமல் சன் நிறுவனத்தில் சக்சேனா செய்திருந்த தில்லுமுல்லுகள் ஒவ்வொன்றாக வெளிவர, மாறன் சகோதரர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். இந்த வெங்கட் விவகாரம் அவர்கள் கோபத்தைப் பலமடங்கு அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
‘சன் பிக்சர்ஸ்’ சம்பளமும் இல்லை. காஸ்மோபாலிட்டன் கிளப்பிலிருந்துகூட அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். நண்பர்களும் ‘அல்வா’ கொடுத்திருக்கும் இந்த நிலையில், அதிகாரத்தில் இருக்கும் போது போட்ட ஆட்டங்களை சக்சேனா நிச்சயம் நினைத்திருப்பார்.
திருட்டு சி.டி. தயாரித்தாரா?
கடந்த ஆட்சியில் எல்லா புதுப்படங்களின் சிடியும் உடனடியாக வெளிவர, ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, வெளியிட்ட படங்களுக்கு மட்டும் ஏக கெடுபிடி விதிக்கப்பட்டது.
ஆனாலும், படம் வெளிவந்து ஓரிரு வாரங்களில் சி.டி. வெளியானது சன் பிக்சர்ஸ் நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்தது. அதிலும் மற்ற படங்களை விட, சன் பிக்சர்ஸ் நிறுவனப் படங்களின் சி.டி.க்கள் அதிக தரத்தில் வெளிவந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ந்து போனார்கள். இதுகுறித்து கலாநிதி மாறன் பலமுறை சக்சேனாவிடம் பேசியி ருக்கிறாராம். அதுகுறித்து தன்னுடைய அதிர்ச்சியையும் பதிலாகத் தெரிவிப்பாராம் சக்சேனா.
அந்த திருட்டு சி.டி.க்களைத் தயாரித்ததும் சக்சேனாதான் என்று இப்போது தெரிய வந்துள்ளதாம். இதன் மூலமும் பெருமளவு பணம் சம்பாதித்து இருக்கிறார் சக்சேனா. இந்தத் தகவல் தெரிந்து கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் கலாநிதி மாறன்.
thanks kumudam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக