புதன், 21 செப்டம்பர், 2011

நக்கீரன் ஆசிரியருக்கு 'இந்தியா டுடே' புகழாரம்!

தமிழகத்தில் தங்கள் துறைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திய செல்வாக்கு மிக்கவர்களின் பலம் பொருந்தியவர்களின் பட்டியலை வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது 'இந்தியா டுடே' பத்திரிகை. 

இந்த வருடமும் அப்பட்டியலை வெளியிட்டுள்ளது, 'இந்தியா டுடே'.

தமிழகத்தின் பலம் மிக்கவர்கள் செல்வாக்கு படைத்தவர்கள் 2011 பட்டியலில் 10 பேர் அடங்கியிருக்கிறார்கள். பத்து பேர் அடங்கிய அப்பட்டியலில் நக்கீரன் ஆசிரியர் கோபால் இடம் பெற்றுள்ளார்.

இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள நக்கீரன் கோபால் குறித்து இந்தியா டுடே, 'புலனாய்வுப் புலி' என புகழாரம் சூட்டியுள்ளது. மேலும், 'புலனாய்வுப் பத்திரிகைகளுக்கு ஒரு கௌரவ அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் நக்கீரன் கோபால். ஏனெனில் புலனாய்வு செய்திகளுக்கு தரும் அதே முக்கியத்துவத்தை சமூகநீதிக்கும் தருகிறது நக்கீரன். அதனால்தான் கடந்த ஆண்டின் தந்தை பெரியார் விருதை தமிழக அரசு இவருக்கு வழங்கியது. ஏனெனில் புலனாய்வு இதழ் விற்பனை வரலாற்றிலும் சாதனை நிகழ்த்தியவர் கோபால். நித்யானந்தா விவகாரம் இடம்பெற்ற நக்கீரன் 5 லட்சம் பிரதிகள் விற்றது' என்று குறிப்பிட்டுள்ளது.


மேற்கண்டவாறு நக்கீரன் குறித்தும், நக்கீரன் ஆசிரியர் குறித்தும் குறிப்பிட்டுள்ள 'இந்தியா டுடே'யின் பட்டியலில் மேலும், டி.வி.எஸ். மோட்டார்ஸின் எம்.டி. வேணு ஸ்ரீநிவாசன், முருகப்பா குழுமத்தின் செயல் தலைவர் ஏ.வெள்ளையன், அப்பல்லோ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ப்ரீத்தா ரெட்டி, சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், சந்திரா குழுமம் எம்.டி. நந்தினி ரங்சாமி, நடிகர் விஜய், வாசன் ஐகேர் தலைவர் ஏ.எம்.அருண், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், உயிர்மை பதிப்பகத்தின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை: