வெள்ளி, 23 செப்டம்பர், 2011

சவூதி பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே றிஸானா விடுதலையாவாள்.

றிஸானா தான் குழந்தையை கொலை செய்ததாக மூன்று தடவைகள் அதாவது பொலிஸ் விசாரணையில், மஜிஸ்திரேட் விசாரணையில், மற்றும் நீதிமன்ற விசாரணைகளில் தெரிவித்துள்ளார். நான்காவது தடவையே விசாரணையின் போது தான் கொலை செய்யவில்லை என மறுத்து வாக்கு மூலம் அளித்துள்ளார்.
நீதிமன்றில் விசாரணையின் போது றிஸானா, தான் எவ்வாறு சிசுவை கொலை செய்தேன் என்பதை சைகை மூலமும் செய்து காட்டியுள்ளார். மூன்று நீதிபதிகள் அடங்கிய  விசாரணையின் போதே தான் கொலை செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

`றிஸானாவின் விடுதலைக்காக போராட்டங்கள் நடாத்துவதினாலோ, வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதினாலோ பலனில்லை, சவூதி பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே அவள் விடுதலையாவாள்.
சவூதி அரேபியா ஷரீஆ சட்டங்களைச் சரியாகக் கடைப் பிடிக்கும் நாடு. எனவே பெற்றோரின் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட வேண்டும்.
சவூதி அரேபியாவின் முன்னணி ஆங்கில தினசரி ARAB NEWS பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹமட் ரசூல்தீன் இவ்வாறு  தெரி வித்தார்.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட மொஹமட் ரசூல்தீன் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சவூதியில் பத்திரிகையாளராகக் கடமையாற்றி  வருகிறார். சவூதியில் பகிரங்க மரண தண்டனையை எதிர் நோக்கி சிறையில் இருக்கும் றிஸானா நபீக் தொடர்பான செய்திகளை அரப்நியூஸ் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து வருகிறது. மொஹமட் ரசூல்தீனுடனான `விடிவெள்ளி’ யின் நேர்காணலை இங்கு தருகிறோம்.

கேள்வி:
றிஸானாவுக்கு எதிராக வழக்கு நடைபெற்ற ரியாத் நகரில் நீங்கள் சிரேஷ்ட பத்திரிகையாளராக கடமையாற்றுகிறீர்கள். உங்கள் பார்வையில் வழக்கு விபரங்களைத் தெரிவிப்பீர்களா?

பதில் : ஆம், 2005ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி ரியாத்துக்கு பணிப் பெண்ணாக வந்து சேர்ந்த றிஸானா மே மாதம் 22 ஆம் திகதி 4 மாத சிசுவொன்றினை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டாள்.
தொடர்ந்து இரு வருடங்களாக நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைகளின் பின்பு கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் திகதி பகிரங்க மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேன்முறையீட்டு விசாரணைகளின் பின்பும் அவளது தண்டனை ஊர்ஜிதம் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணைகளின் செய்தி சேகரிக்க நானும் சென்றிருக்கிறேன். றிஸானாவுக்கு அரபு மொழி தெரியாமையினால் மொழி பெயர்ப்பாளரின் உதவியை நீதிமன்றம் பெற்றிருந்தது. அவள் தமிழிலே தனது வாக்கு மூலங்களை அளித்தாள்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு விசாரிக்கப்பட்ட போது அவள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜரானார்கள். வழக்கு தவாத்மி நீதிமன்றிலும், மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அடங்கிய நீதிமன்றிலும் அப்பீல் நீதிமன்றிலும் விசாரிக்கப்பட்டது. மொத்தம் 25 நீதிபதிகள் இவ் வழக்கினை விசாரித்திருக்கிறார்கள்.
கேள்வி : கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிசுவின் பெற்றோர்களை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?
பதில் : ஆம், வழக்கு விசாரணை செய்திகளைச் சேகரிக்க சென்ற போது நான் அவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது குடும்பம் ரியாத்தில் மிகவும் செல்வாக்கான குடும்பம். ஒதைபி குடும்பம் என்று அழைப்பார்கள். சிசுவின் தந்தையின் பெயர் நைய்ப் கவார் ஜிஸ்யான் அல் ஒதைபி 35 வயதான அவர் நிதியமைச்சில் வரவுசெலவுத் திட்ட பிரிவில் கடமையாற்றுகிறார். அவரது மனைவி (சிசுவின் தாயார்) ஒரு பாடசாலை ஆசிரியையாவார்.
நான் அவரை நேருக்கு நேர் சந்தித்து கதைத்திருக்கிறேன். றிஸானா தானே சிசுவைக் கொலை செய்ததாக நீதிமன்றில் வாக்கு மூலம் அளித்திருக்கிறாள். நீதிமன்றம் அவள் குற்றவாளி என நிரூபித்திருக்கிறது. தீர்ப்பு அதுதான் என்று அவர் என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

கேள்வி : வழக்கு மேன்முறையீட்டு செலவுகளுக்கான நிதி எங்கிருந்து பெறப்பட்டது?
பதில் : ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இதற்கென 150 ஆயிரம் ரியால்களைச் சேகரித்து வழங்கியது. சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகமும் இந்நிதியைத் திரட்டுவதில் பெரும் பங்கினை வகித்தது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையரும், மற்றும் பொதுநல இயக்கங்களும் நிதி உதவிகள் வழங்கின.
சவூதியில் சட்டத்தரணி குழுவொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இவ் வழக்கில் ஆஜராகி வாதிடுவதற்கு 150 ஆயிரம் ரியாலுக்கு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டு 100 ஆயிரம் ரியால்கள் வழங்கப்பட்டன. சட்டத்தரணி காத்திப் அல் சமாரியின் தலைமையில் சட்டத்தரணிகள் வழக்கில் ஆஜராகினர். வழக்கில் வெற்றியைப் பெற்றுத் தந்தால் மிகுதி 50 ஆயிரம்  ரியால்கள் வழங்கப்படுமெனவும் உடன்படிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: றிஸானாவின் விடுதலைக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என் ன?

பதில் :
ரியாத்தில் பணி புரியும் கண்டியைச் சேர்ந்த டாக்டர் கிபாயா, இலங்கை தூதுவராலயத்தின் உதவியுடன் இது தொடர்பில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள், றிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கும்படி சவூதி மன்னருக்கு மனுவொன்றினைக் கையளித்துள்ளார்கள். உள்நாட்டு மனித உரிமை ஆணைக் குழுவும் மன்னிப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.
சவூதி அரேபியாவின் முன்னாள் இலங்கை தூதுவரும், தற்போது கெய்ரோவின் இலங்கைத் தூதுவருமான எஸ்.அன்ஸார் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் ஹுசைன் பைலா இறந்த சிசுவின் குடும்பத்தின் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். சிசுவின் தாயினது தந்தையையும் சந்தித்து மன்னிப்பு பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் நடைபெற்றன.
இலங்கையின் முன்னாள் சவூதி தூதுவர் மர்ஹும் மொஹமட் மர்லினும் றிஸானாவின் விடயத்தில் அதிக அக்கறை கொண்டிருந்தார். அவர் வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்கு நீதிமன்றுக்கு வந்து பார்வையாளர்கள் அமரும் பென்ச்சில் அமர்ந்திருப்பார்.
அண்மையில் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க அடங்கிய குழுவொன்று ரியாத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், பெற்றோருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. சவூதியில் குடியுரிமையைப் பெற்றுள்ள இலங்கையைச் சேர்ந்த மசூர்மௌலானாவும் இது விடயத்தில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
கேள்வி : றிஸானா, சிசுவுக்குப் புட்டிப் பாலூட்டிக் கொண்டிருந்த போதே சிசு மூச்சுத் திணறி இறந்ததாக கூறப்படுகிறது. அவளது வாக்கு மூலம் மொழி பெயர்ப்பாளரால் பிழையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று பரவலாகப் பேசப்படுகிறதே?
பதில் : றிஸானா தான் குழந்தையை கொலை செய்ததாக மூன்று தடவைகள் அதாவது பொலிஸ் விசாரணையில், மஜிஸ்திரேட் விசாரணையில், மற்றும் நீதிமன்ற விசாரணைகளில் தெரிவித்துள்ளார். நான்காவது தடவையே விசாரணையின் போது தான் கொலை செய்யவில்லை என மறுத்து வாக்கு மூலம் அளித்துள்ளார்.
நீதிமன்றில் விசாரணையின் போது றிஸானா, தான் எவ்வாறு சிசுவை கொலை செய்தேன் என்பதை சைகை மூலமும் செய்து காட்டியுள்ளார். மூன்று நீதிபதிகள் அடங்கிய  விசாரணையின் போதே தான் கொலை செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
தனக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது றிஸானாவுக்குத் தெரியும் என்றாலும் அவள் தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே சிறையில் இருகிறாள்.
கேள்வி : றிஸானா குற்றம் சாட்டப்பட்ட போது 18 வயது பூர்த்தியாகி இருக்கவில்லை. அவள் வயது மாற்றம் செய்யப்பட்டே சவூதி அனுப்பப்பட்டாள் என்று கூறப்படுகிறதே?

பதில் : குற்றவாளிகளின் வயதினை சவூதி கவனத்தில் கொள்வதில்லை. சவூதியில் ஷரீஆ சட்டமே அமுலில் இருக்கிறது. ஷரீஆ சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட சிசுவின் பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே றிஸானா விடுதலை செய்யப்பட முடியும்.
சவூதி ஷரிஆ சட்டங்களை சரியாகக் கடைப்பிடிக்கும் நாடு. எனவே சவூதி சட்டங்களை ஷரீஆ சட்டத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்புவதன் மூலம் மன்னிப்பு பெற்றுக் கொள்ள முடியாது. எனவே றிஸானாவை விடுதலை செய்யக் கோருபவர்கள் சவூதி அரசையும், சவூதி தீர்ப்பையும் எதிர்த்து அறிக்கைகள் விடுவதைத் தவிர்த்து பெற்றோரிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
றிஸானாவுக்கு சிசுவின் பெற்றோர் மன்னிப்பு வழங்கினாலும் நீதிமன்றம் அவள் செய்த குற்றத்துக்காக மற்றுமோர் தண்டனையை வழங்கும். பெற்றோரின் மன்னிப்பு பெறப்பட்டால் BLOOD MONEY சவூதி அரேபியா வழங்கும் சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.
கேள்வி : றிஸானாவின் தீர்ப்பு தொடர்பான இன்றைய நிலை என்ன?

பதில் : தீர்ப்பு அரச அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்றும் திகதி அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது. றிஸானாவின் விடுதலை கோரி பல மனுக்கள் கிடைத்துள்ளமையை அடுத்து உள்விவகார அமைச்சு ரியாத் பிராந்திய மீள்பரிசீலனைக் குழுவிடம் ஒப்படைத்துள்ளது.
இக்குழு பெற்றோரின் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. குழுவின் அங்கத்தவர்கள் பலதடவைகள் பெற்றோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. இந்த ஏற்பாடுகளுக்கு ஒரு கால எல்லை நிர்ணயிக்கப்பட்டில்லை. இக்குழு சமரச முயற்சிகளை ஒரு மாதத்திலும் நிறைவு செய்யலாம். ஒரு வருடத்திலும் நிறைவு செய்யலாம். ஆனால் இன்று வரை பெற்றோர் றிஸானாவை மன்னிக்கும் மனநிலையில் இல்லை. காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
`அரப் நியூஸ்’ பத்திரிகை தொடர்ந்து இச்சம்பவத்தில் அக்கறை கொண்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை பக்கம் சாராது நடுநிலையில் செய்திகளைப் பிரசுரித்து வருகிறது.
கேள்வி : இது தொடர்பாக இறுதியாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் : இச்சம்பவம் சவூதியிலேயே நடைபெற்றுள்ளது. சவூதி நாட்டின் சட்டத்தின் படியே குற்றம் செய்தவர் தண்டிக்கப்படுவார். இதனை எம்மால் மாற்ற முடியாது.
நாம் றிஸானாவின் விடுதலைக்காக துஆ செய்ய வேண்டும். வேறெதுவும் செய்ய முடியாது. சவூதி அரசையோ, சவூதி சட்டத்தையோ எதிர்த்துக் கொண்டிருப்பதால் எதனையும் சாதித்துவிட முடியாது.
றிஸானா 17 வயதாக இருக்கும் போது அவளது வயது 23 என்று பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் திருத்தம் செய்து, கடவுச்சீட்டினைப் பெற்றே சவூதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவ்வாறான மோசடியைச் செய்த முகவரும், உதவி முகவரும் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த பகீர் மொஹிதீன் வஜூர்தீன், மூதூரைச் சேர்ந்த சாஹுல்ஹமீது அப்துல் லத்தீப் இருவரும் இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கெதிராக தண்டனைக் கோவை சட்ட விதிகளுக்கு அமைய வழக்கு தொடரப்படவுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி வரை சந்தேக நபர்கள் இருவரையும் தடுப்புக் காவலில் வைக்கும்படி கொழும்பு பிரதம மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
றிஸானாவின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தையும், தேசிய அடையாள அட்டையையும் போலியாகத் தயாரித்த மற்றுமோர் சந்தேக நபரைக் கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அரப் நியூஸ் சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹமட் ரசூல்தீன்
நேர்காணல்: ஏ.ஆர்.ஏ.பரீல்

கருத்துகள் இல்லை: