வெள்ளி, 17 ஜூன், 2011

Vijeyakanth-Jeyalalitha இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் எக்காலத்திலும் ஒருவருக்கொருவர் ப

கேள்வி 1:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு கனிமொழிக்கு ஆதரவாக இருக்குமா, எதிராக இருக்குமா? இதில் தி.மு.கவின் மற்ற அமைச்சர்கள் ஏன் இல்லை?
கேள்வி 2:
தேர்தலுக்கு பிந்தைய நாட்களில் அ.தி.மு.க, தே.மு.தி.க உறவு எப்படி இருக்கும்?
- சுப்ரமணி
__________________________________________
கனிமொழி, தயாநிதி மாறன், விஜயகாந்த்….கேள்வி – பதில் !அன்புள்ள சுப்ரமணி,
அலைக்கற்றை ஊழல் வழக்கு ஏன் இப்போது நடக்கிறது, அந்த ஒதுக்கீடு நடந்த வருடங்களில் ஏன் நடக்கவில்லை என்பதை பரிசீலித்துப் பார்த்தால் இது குறித்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம். இந்த ஒதுக்கீடு குறித்த முடிவுகளில் ராசாவுக்கு மட்டுமல்ல, காங்கிரசு அரசுக்கும், ஏன் அதற்கு முன் இருந்த பா.ஜ.க அரசுக்கும் பங்குண்டு. இரண்டு கட்சிகளும் இதனால் ஆதாயம் அடைந்திருக்கின்றன. கூடவே நிறைய முதலாளிகளும். அதனால்தான் அப்போது இந்த ஊழல் குறித்து ஏதுவும் நடக்கவில்லை.
ஆனால் பின்னர் பொதுநல வழக்கு காரணமாக உச்சநீதிமன்றம் இதில் தற்செயலாக தலையிட்டதின் மூலமே தற்போதைய விசாரணை நடந்து வருகிறது. மன்மோகன் அரசு விரும்பும் வகையில் செயல்படும் சி.பி.ஐ வேறு வழியின்றி நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் ஏதாவது விசாரித்து காட்ட வேண்டியிருக்கிறது. மேலும் இதைத் தொடர்ந்து செய்யும் போது ஊழல் வழக்கு ஆழமும், அகலமும் கொண்டதாக விரிந்து செல்கிறது. இதுதான் ஆளும் காங்கிரசு கூட்டணி அரசுக்கு உள்ள பிரச்சினை.
டெக்னிக்கலாக ராசாதான் அவர் மட்டும்தான் இதைச் செய்தார் என்று காட்ட முயன்றாலும் அது அப்படி மட்டும் காட்டிவிட முடியாது. இப்படித்தான் சில நிறுவன அதிகாரிகள், மற்றும்  கனிமொழி வரைக்கும் கைதுகள் சென்றுள்ளது. ஆகவே இந்த குழி அவர்கள் விரும்பாமலேயே உருவாகிவிட்டது. முடிந்த வரைக்கும் ஒரு சிலரை மட்டும் தள்ளிவிட்டு மற்றவர்கள் எஸ்கேப்பாகலாம் என்றுதான் அவர்கள் முயல்கிறார்கள்.
தற்போது தயாநிதிமாறனும் இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னர் அரசியல்வாதிகள், தனியார் நிறுவன அதிகாரிகள் மட்டும் மாட்டிக் கொண்டுள்ள நிலையில் தற்போது ஒரு முதலாளியே மாட்டிக் கொண்டுள்ளார். மாறன் சகோதரர்கள் அரசியல் செல்வாக்கு காரணமாக டாடா, சிவசங்கரன் போன்ற முதலாளிகளோடு வணிக நலன் காரணமாக மோதியது வெளியே வந்திருக்கிறது.
இப்படி முதலாளிகளுக்கிடையே ஏற்படும் பகிரங்கமாக போட்டி, மோதல் காரணமாக மேலும் சில விவரங்கள், ஊழல்கள் வெளிவரலாம். இதவரை ராடியா டேப் உள்ளிட்டு பல விவரங்கள் வெளியே வருவதற்கே முதலாளிகளிடையே உள்ள முரண்பாடுதான்.
கலைஞர் டி.விக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அடிபடும் டி.பி.ரியாலிட்டி நிறுவனம் மத்திய அமைச்சர் சரத்பவாருக்குச் சொந்தமானது என்பது மும்பையில் உள்ள அனைவருக்கும் தெரியுமென்று நீரா ராடியாவே கூறியிருக்கிறார். ஆனாலும் இதுவரை சரத்பவார் சி.பி.ஐ வளையத்தில் பிடிபடவில்லை. அப்படி சரத்பவார் மாட்டினால் வரிசையாக பெரிய தலைகள் காத்திருக்கின்றன.
அதே நேரம் ஒட்டுமொத்தமாக தனியார் மயத்திற்கு ஆதரவாக அலைக்கற்றை விவகாரம் இருப்பதால் முதலாளிகளும் இதை எந்த அளவுக்கு கொண்டு செல்வார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் தி.மு.க, காங்கிரசு உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகளுக்கு இந்த வழக்கை எப்படியாவது முடித்துவிட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் விருப்பம். இல்லையேல் இந்த வழக்கு நேரடியாக முதலாளிகளை குறி வைத்து சென்றுவிடக் கூடும். பார்க்கலாம், என்ன நடக்கிறதென்று…
********
தே.மு.தி.க, அ.தி.மு.க உறவு குறித்து…..
கனிமொழி, தயாநிதி மாறன், விஜயகாந்த்….கேள்வி – பதில் !தேர்தலுக்கு பின் என்ன, தேர்தலுக்கு முன்பேயே இந்த இரு கட்சிகளுக்கும் நல்ல உறவு இருக்கவில்லை. அதற்கான வாய்ப்புமில்லை. தங்களது சொந்த இமேஜின் மூலமே தத்தமது கட்சிகள் நடப்பதாக எண்ணிக் கொண்ட இரு சுயநல யானைகள் எப்படி சேர்ந்து இயங்க முடியும்?
தி.மு.க அரசின் மீதான மக்கள் வெறுப்பை அறுவடை செய்வதற்காகத்தான் இருவரும் சந்தர்ப்பவாதமாக உறவு கொண்டார்கள். அதுவும் துக்ளக் சோ போன்ற அதிகாரத் தரகர்கள் இதற்காக பெரும் பிரயத்தனம் மேற்கொண்டார்கள். தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தின் போதே இருவரும் தனித்தனியாகவே செயல்பட்டார்கள். கோவையில் நடந்த அ.தி.மு.க அணி கூட்டத்திற்கு கூட விஜயகாந்த் வரவில்லை. பின்னர் அ.தி.மு.க வெற்றி பெற்ற பிறகும் அழைப்பு வந்தால் பதவியேற்பு விழாவிற்கு செல்வோமென பட்டும்படாமலும்தான் விஜயகாந்த் கூறினார்.
விஜயகாந்த் செல்வாக்கு அடைவதை ஜெயலலிதா விரும்பமாட்டார். அந்த வகையில் தேர்தலின் போது வடிவேலு செய்த பிரச்சாரத்தை கருணாநிதியைக் காட்டிலும் ஜெயாவே மிகவும் விரும்பியிருப்பார். அது போல விஜயகாந்தும் அ.தி.மு.க கூட மிகவும் நெருக்கமாக இருந்தால் தனது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று இடைவெளி விட்டுத்தான் செயல்படுவார். ஆனால் இவர் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் தே.மு.க.தி.க என்ற கட்சி ஆட்சியைப் பிடிக்குமளவு செல்வாக்கை அடையப்போவதில்லை. கூட்டணி பலத்தின் மூலமே அவர்களுக்கு இப்போதைய எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் தனிஆவர்த்தனம் செய்வது இனிமேலும் அர்த்தமுள்ளதாக இருக்காது. எனினும் விஜயகாந்தைப் பொறுத்தவரை கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க காலியாகும், அ.தி.மு.கவிற்கு போட்டியாக தான் வந்துவிடலாம் என்று ஒரு கணக்கை நிச்சயம் போட்டிருப்பார். அப்படி நடந்தால் அடுத்த முதலமைச்சர் தான்தான் என்று கூட அவர் கனவு காணலாம்.
தற்செயலான சில அரசியல் நிகழ்வுகள் மூலம் ஒரு விபத்து போலத்தான் ஜெயாவும், விஜயகாந்தும் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.   இரண்டு கட்சிகளுமே ஊழல் பெருச்சாளிகள் நிறைந்தவைதான். இந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டும்  கூட்டணி வைத்திருக்கவில்லை என்றால் இதுவே அவருக்கு மங்களம் பாடப்பட்ட கடைசி தேர்தலாக இருந்திருக்கும். கொடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டே கருணாநிதி அரசு எதிர்ப்பு அலை காரணமாக மூன்றாம் முறையாக முதலமைச்சாராகும் வாய்ப்பை பெற்றவர் ஜெயலலிதா.
குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் மக்களிடையே தோன்றுகின்ற அபிப்ராயங்களெல்லாம் வேறு வழியின்றி இத்தகைய கோமாளி பாசிஸ்ட்டுகளை பதவிக்கு கொண்டு வந்துவிடுகின்றன. எது எப்படியோ இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் எக்காலத்திலும் ஒருவருக்கொருவர் பணிந்து போகப்போவதில்லை. அரசியல் உலகில் உண்மையான மாற்று உருவாகாத நிலைமையில் நாமும் இத்தகைய அபத்தங்களை சகித்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.
கடைசியாக இந்த ‘கேப்டன்’ இதுவரை சரக்கு அடிக்காமலேயே சட்டமன்றம் சென்று வருவதை அவரது கட்சிக்காரர்களே வியப்பாக பார்க்கிறார்களாம். இதுதான் தே.மு.தி.கவின் தற்போதைய சாதனை!
நன்றி.

கருத்துகள் இல்லை: