திங்கள், 13 ஜூன், 2011

சமசீர்கல்வியை எப்படியாவது தடுத்து நிறுத்துவதே எமது லட்சியம் ????

மலையாள மாந்திரீகம், பில்லி சூனியம், யாகம், சனீசுவரனுக்கு அர்த்த ராத்திரி பூஜை போன்ற ஆன்மீக வழிமுறைகள் கைவிரித்து விட்டதால், லவுகீக முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது அம்மாவின் அரசுமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கல்வி அமைச்சர், துறைச் செயலர், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட புரட்சித் தலைவியின் போர்ப்பபடைத் தளபதிகள் அனைவரும் டில்லி தமிழ்நாடு இல்லத்தில் பாசறை அமைத்து போர்த்திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
வரலாறு காணாத வெற்றி பெற்ற புரட்சித்தலைவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய வரலாற்று சிறப்பு மிக்க முதல் மசோதாவுக்கே இடைக்காலத் தடையா? முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ வா? அக்கா மூடு அவுட் என்பதை தங்கச்சி தெரிவித்திருப்பார்.
அம்மாவின் நெற்றிக்கண் திறப்பதை அமைச்சர்களும் அதிகாரிகளும் கவனித்திருப்பார்கள். சமச்சீர் கல்வி நல்லதா கெட்டதா, குட்டையா நெட்டையா என்பதையெல்லாம் பேசுவதற்கு இனி நேரமில்லை. “உயர்நீதிமன்றத் தடையைத் தகர்த்தெறிய என்ன செய்ய வேண்டுமோ அதைச் வேண்டும்” என்பதுதான் தளபதிகளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.
மலையாள மாந்திரீகம், பில்லி சூனியம், யாகம், சனீசுவரபகவானுக்கு அர்த்த ராத்திரி பூஜை போன்ற ஆன்மீக வழிமுறைகள் மூலம் இடைக்காலத் தடையைத் அகற்ற வாய்ப்பில்லை என்று ஜோசியர்கள் கைவிரித்து விட்டதால், லவுகீக முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிடப் பட்டிருக்கிறது.
“கவிதையில் எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கேற்ப பரிசுத்தொகையைக் குறைத்துக் கொள்ளலாம்” என்று கூறி, சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள “பிழையான” பாடங்களை நீக்குவதற்கான அதிகாரத்தையும் அம்மாவின் அரசுக்கு வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு. எனினும் இத்தகைய சோளப்பொறிகளால் அம்மாவைத் திருப்திப் படுத்தி விட முடியுமா என்ன?
திமுக ஆட்சிக்கு எதிராக மக்களிடம் நிலவிய வெறுப்பின் காரணமாக தான் வெற்றி பெறவில்லையென்றும், 1991-96, 2001-2006 ஆகிய இரு காலகட்டங்களில் தாங்கள் அனுபவித்த பொற்கால ஆட்சியை எண்ணிப்பார்த்து, அந்தப் பொற்காலத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்று தமிழக மக்களின் இதயத்திலிருந்து வெடித்துக் கொப்புளித்த வேட்கையின் விளைவுதான் இந்த இமாயலய வெற்றி என்றும் அம்மா ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.
மேற்படி பொற்காலம் எப்படி இருந்திருக்கும் என்பது இன்று ஒண்ணாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கக் கூடிய 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் ஆட்சியின் முதல் காட்சியை ஓபன் பண்ணும்போதே பழைய பொற்காலத்தின் “எஃபெக்ட்” தெரியவேண்டும் என்பதை உத்திரவாதப் படுத்தியிருக்கிறார் புரட்சித்தலைவி.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறந்திருக்க வேண்டும். அது ஜூன் 15 க்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஒருவேளை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்மாவின் அரசுக்கு சாதகமாக அமைந்துவிட்டால், செப்டம்பர் மாதம் முடியும்வரை மாணவர்களுக்கு விடுமுறைதான். இதுநாள்வரை வகுப்பறை இல்லாத பள்ளியையும், வாத்தியார் இல்லாத வகுப்பறையையும் மட்டுமே பார்த்திருக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த முறை பாடப்புத்தகமே இல்லாத “கல்வி”யையும் காண்பார்கள்.
அக்டோபர் நவம்பரில் மழைக்காலம் தொடங்கும் வரை கோடைக்கால விடுமுறையை நீட்டிக்கும் ஆட்சி, பொற்கால ஆட்சியாகத்தானே இருக்கமுடியும்? இதை மாணவர்களுக்கு விளக்கிப் புரிய வைக்க வேண்டுமா என்ன? ஓபனிங் ஷாட்டிலேயே முழுப்படத்தின் கதையையும் நுணுக்கமாக கூறும் திறமை புரட்சித்தலைவியைத் தவிர வேறு யாருக்கு வரும்?
“பாடப்புத்தகத்துக்காக 4 மாத காலம் மாணவர்கள் காத்திருக்க வேண்டுமா?” என்று சிலர் குமுறக்கூடும். 2006 இலிருந்து 2011 வரை 5 ஆண்டு காலம் இந்தப் பொற்கால ஆட்சி தொடங்குவதற்காக 7 கோடி தமிழ்மக்கள் காத்திருக்கவில்லையா? ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக புரட்சித்தலைவியே கொடநாட்டில் 5 ஆண்டுகள் தவமிருக்கவில்லையா? அவ்வளவு ஏன், அம்மாவின் தரிசனத்துக்காக கூட்டணிக் கட்சிக்காரர்கள் போயசு தோட்டத்தின் வாயிலில் அன்றாடம் காத்திருக்கவில்லையா? பொற்காலம் வேண்டுவோர் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
எப்பாடு பட்டேனும் தமிழக மாணவர்களைப் பொற்காலத்துக்குள் தள்ளிவிடவேண்டும், இல்லையேல் தங்களது எதிர்காலம் இருண்டகாலமாகிவிடும் என்ற உண்மை புரிந்திருப்பதனால்தான் கல்வி அமைச்சரும், கல்வித்துறை செயலரும், அட்வகேட் ஜெனரலும் சனிக்கிழமை காலை முதல் உச்ச நீதிமன்றத்தின் படிக்கட்டிலேயே படுத்துக் கிடக்கிறார்கள்.
ஆனால் இப்படி ஒரு பொற்காலத்துக்குள் மாணவர்கள் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகவே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கின்றனர் ம.க.இ.க சார்ந்த மனித உரிமைப்பாதுகாப்பு மையம் மற்றும் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் ஆகிய அமைப்புகள். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உச்சநீதிமன்றத்தின் முன் வைத்துள்ள கோரிக்கை.
இன்று – 13.6.2011, திங்கட்கிழமை – காலை தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் வழக்குரைஞர் பி.பி.ராவ் ஆஜரானார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். வழக்கின் விவரங்களைப் படித்துவிட்டு வரவேண்டியிருப்பதால் விசாரணையை நாளைக்குத் – 14.6.2011. செவ்வாய்க் கிழமை – தள்ளிவைப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கே ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்கவேண்டும் என்பது மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கோரிக்கை. விசாரணை நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. ஒரு வேளை மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டாலும், கேவியட் மனு தாக்கல் செய்திருக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வாதங்களைப் பரிசீலிக்காமல் இவ்வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்காது.
அம்மாவின் அரசு vs மனித உரிமைப் பாதுகாப்பு மையம்! இவ்வழக்கில் வெளிப்படையாகத் தெரியும் வாதி-பிரதிவாதிகள் இவர்கள். ஆனால் இந்த வாதப் பிரதிவாதங்களுக்குள்ளே “தனியார் கல்வி vs பொதுக்கல்வி”, “மனுநீதி vs சமநீதி” என்ற முரண்பாடு ஒளிந்திருக்கிறது. பொற்காலத்துக்குள் ஒளிந்திருக்கும் இருண்டகாலம் போல. இருளை அடையாளம் காட்டுவோம்
www.vinavu.com

கருத்துகள் இல்லை: