செவ்வாய், 14 ஜூன், 2011

M.G.R நெற்றியில் விபூதி. கழுத்தில் துளசி மாலை. உடம்பில் கதர்ச்சட்டை சகிதம் இருந்த அந்த இளைஞரின் பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

குளிப்பதில்கூட சிக்கனம் பார்ப்பவர் பெரியார். அவரிடம் போய் சம்பளம் உயர்த்திக்கொடுங்கள் என்று கேட்டால் கொடுப்பாரா? அடித்தே விரட்டிவிடுவார். பிறகு பிழைப்புக்கு எங்கே போவது? நாளுக்கு நாள் வருத்தம் கூடிக்கொண்டே போனது கருணாநிதிக்கு. அந்த வருத்தத்தைத் தாற்காலிகமாகப் போக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் பெரியார்.
’திராவிடர் கழகத்தின் சார்பில் கறுப்புச் சட்டைப் படை அமைக்கப்படுகிறது.’
அறிவிப்பைக் கண்டதும் சம்பள உயர்வு கோரிக்கை, வறுமை, அதிருப்தி எல்லாம் பறந்து போனது கருணாநிதிக்கு. உடனடியாகச் சென்று கறுப்புச்சட்டைப் படையின் உறுப்பினராகத் தன்னைப் பதிவுசெய்து கொண்டார். அந்தப் படைக்கு ஈ.வெ.கி. சம்பத் மற்றும் கவிஞர் கருணானந்தம் இருவரும் தாற்காலிக அமைப்பாளர்கள்.
கருணாநிதிக்கு உற்சாகம் கொடுத்த அந்த அறிவிப்பு அண்ணாவை ஆத்திரப்படுத்தியது.
திராவிட விடுதலைப்படை என்ற பெயரில் படை உருவாக்குவதாக முதலில் அறிவித்துவிட்டு, திடீரென கறுப்புச்சட்டைப் படை என்று மாற்றியது ஏன் என்று கேள்வி எழுப்பினார் அண்ணா. தவிரவும், இத்தாலி சர்வாதிகாரி முசோலினி அமைத்திருந்த கறுப்புச்சட்டைப் படையுடன் ஒப்ப்பீடு செய்து எதிரிகளால் விமரிசிக்கப்படுவதற்கு ஏன் வாய்ப்பு தரவேண்டும் என்றும் கேட்டார் அண்ணா. மனத்தில் எழுந்த எதிர்ப்பை எழுத்து மூலமாகவும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். அதிருப்தியின் அடையாளமாக கறுப்புச்சட்டை அணிவதையும் தவிர்த்தார். கறுப்புச்சட்டை வேண்டாம் என்பதற்காகப் பெரியாருடன் தர்க்கம் செய்யவும் தயாராக இருந்தார். அந்த அளவுக்கு அண்ணாவால் தீவிரமாக எதிர்க்கப்பட்ட கறுப்புச்சட்டைப் படைக்கு கருணாநிதிதான் முதல் உறுப்பினர்.
என்னதான் கட்சிப்பணியும் பத்திரிகைப் பணியும் மனத்துக்கு உவப்பானதாக இருந்தாலும் பணப்பற்றாக்குறை கருணாநிதியின் நிம்மதியைக் குலைத்துக்கொண்டே இருந்தது. நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அப்படியொரு வாய்ப்பு கோயம்புத்தூரில் இருந்து வந்து சேர்ந்தது.
கருணாநிதி எழுதிய பல நாடகங்களைப் பார்த்து ரசித்த ஏ.எஸ்.ஏ. சாமி என்ற திரைப்பட இயக்குனர் கோயம்புத்தூரில் இருந்து கருணாநிதியைத் தொடர்பு கொண்டார். புதிய படம் ஒன்றை எடுக்கப்போகிறோம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. படத்தின் பெயர், ராஜகுமாரி. நீங்கள்தான் வசனம் எழுதவேண்டும்.
வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தார் கருணாநிதி. ஆனால் அது கண்ணுக்கு எதிரே வந்து நின்றபோது பயம் வந்து குறுக்கே நின்றது. பணம் கிடைக்கும். சரி. தொடர்ச்சியான வாய்ப்புகள்? உறுதியாகச் சொல்லமுடியாது. ஒரு படத்தை நம்பி குடி அரசுவில் இருந்து விலகிவிட்டு, திரும்பவும் பெரியாரிடம் வந்து நிற்கமுடியுமா? இன்னொன்று, கட்சிப்பணி. படங்களுக்கு வசனம் எழுதத் தொடங்கிவிட்டால் தொடர்ந்து கட்சி வேலைகளில் ஈடுபடுவது சாத்தியமில்லை. முதலில் குறையும். பிறகு தடைபடும். மெல்ல மெல்ல நின்றுபோகும்.
என்ன செய்வது?
நன்றாக யோசித்தபிறகு ஒரு முடிவுக்கு வந்தார். தொடர்ச்சியாக வாய்ப்புகள் வரவேண்டும் என்றால் நாம்தான் சிறப்பாக எழுதவேண்டும்; கட்சிப்பணிக்குத் தடையாக இல்லாத வகையில் நேரத்தை ஒதுக்கிக்கொள்வதும் நம்முடைய கையில்தான் இருக்கிறது! நம்பிக்கை வந்த மறுநொடி, கோவைக்குப் புறப்படத் தயாரானார் கருணாநிதி. இன்னொரு பெரிய விஷயம் பாக்கி இருந்தது. விஷயத்தைப் பெரியாரிடம் சொல்லவேண்டும். எப்படி?
எத்தனைப் பெரிய வாய்ப்புகள் எல்லாம் குடி அரசுவில் கிடைத்தது? பெரியாரிடம். அண்ணாவிடம். அழகிரிசாமியிடம். இன்னும் இன்னும் பல பெரிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்புகள். உண்மையில் அங்கே சம்பளம்தான் குறை; மற்றபடி விளம்பரத்துக்குப் பஞ்சமிருக்காது. பிரபலம் அடைவதற்கும் பாராட்டுகள் வாங்குவதற்கும் குடி அரசுவில் வாய்ப்புகள் அதிகம். ஒருமுறை கருணாநிதிக்காக விளம்பரம் ஒன்று குடி அரசில் வெளியானது.
திருவாரூர் முரசொலி எழுத்தாளர்
தோழர் மு. கருணாநிதி அவர்களின்
தற்கால முகவரி:
மு. கருணாநிதி,
C/o குடி அரசு ஆபீஸ்,
ஈரோடு.
அதைக்காட்டிலும் பெரிய வாய்ப்பு ஒன்று கருணாநிதிக்குக் கிடைத்தது குடி அரசுவில் வேலைபார்த்தபோதுதான். திராவிடர் கழகம் உருவான புதிதில் நீதிக்கட்சியின் தராசு பொறித்த கொடியையே பயன்படுத்திவந்தது. கட்சிக்கு இப்போது புதிய பெயர். புதிய தலைவர். எல்லாம் புதிது. எனில், எதற்காகப் பழைய கொடி? தவிரவும், தராசு என்பது புரட்சியின் குறியீடாக, புரட்சியின் அடையாளமாக இல்லை. புதிய கொடியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்தது.
கொடியில் இரண்டு நிறங்கள் இருக்கவேண்டும். கறுப்பு மற்றும் சிவப்பு. கறுப்பு என்பது எதிர்ப்பின் அடையாளம். சிவப்பு என்பது புரட்சியின் அடையாளம். பளிச்சென்று சொல்லி விட்டார் பெரியார். குடி அரசு பத்திரிகையில் இருந்தவர்கள் கொடிக்கான மாதிரியைத் தயாரிக்கத் தொடங்கினர்.
வெள்ளைத்தாளில் கறுப்பு மையை எடுத்து ஒருவர் பூசினார். கறுப்புக்கு நடுவில் சிவப்பு நிறத்தைக் கொண்டுவர சிவப்பு மை வேண்டும். அவசரத்துக்குக் கிடைக்கவில்லை. சட்டென்று குண்டூசி ஒன்றை எடுத்து விரலில் குத்தினார் கருணாநிதி. விரலில் வழிந்த ரத்தத்தை கறுப்புக்கு நடுவே சிந்தினார். இப்போது கறுப்பு – சிவப்பு நிறம்கொண்ட கொடியின் மாதிரி தயார். மாதிரிக்கொடியை எடுத்துச்சென்று பெரியாரிடம் காட்டினர். அதன்பிறகுதான் உண்மையான கொடி உருவாக்கப்பட்டது.
திராவிடர் கழகத்துக்கான கொடி உருவாக்கத்தில் பங்குபெற தனக்கு வாய்ப்பு கிடைத்ததில் கருணாநிதிக்கு அளவற்ற மகிழ்ச்சி. இப்படி, நட்புக்கும் புகழுக்கும் பெருமைக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்த குடி அரசுவை விட்டு வெளியேறுவதை பெரியாரிடம் எப்படிச் சொல்வது? தயங்கித்தயங்கித்தான் சொன்னார் கருணாநிதி.
வாழ்வின் அத்தனை நெருக்கடிகளையும் புரிந்தவர் பெரியார். கருணாநிதியின் தேவைகள் பற்றித் தெரியாதா என்ன? என்னால் கொடுக்க முடியாது; அதை இன்னொரு இடத்தில் கிடைக்கப்போகிறது. எதற்காக அதைத் தடுக்கவேண்டும்? துளியும் தயக்கம் இல்லாமல் சம்மதம் கொடுத்துவிட்டார் பெரியார்.
விழுப்புரம், பாண்டிச்சேரி போன்ற இடங்களுக்குச் சென்றபோது தனியாகத்தான் சென்றார் கருணாநிதி. ஆனால் இம்முறை மனைவி பத்மாவை திருவாரூரிலேயே விட்டுச்செல்வதில் கருணாநிதிக்கு விருப்பமில்லை. கூடவே அழைத்துக்கொண்டார். நண்பர்கள் உதவியுடன் கோயம்புத்தூருக்கு அருகே சிங்காநல்லூர் என்ற ஊரில் வாடகைக்கு வீடு ஒன்றைப் பிடித்துக் கொண்டார் கருணாநிதி.
கருணாநிதியின் சிங்காநல்லூர் வாழ்க்கை வறுமையின் உச்சம். சின்னஞ்சிறு வீடு. பற்றாக்குறையுடன் கூடிய சம்பளம். சிக்கனம் மட்டுமே சாத்தியம் என்பதால் அதையே சிக்கெனப் பிடித்துக்கொண்டார் கருணாநிதி. போதாக்குறைக்கு மனைவி பத்மாவுக்கு பலகீனமான உடல். அடிக்கடி நோய் வந்துவிடும். மருத்துவமனைக்கும் ஸ்டுடியோவுக்குமாக அல்லாட வேண்டியிருக்கும்.
பெரிய வசனகர்த்தாவாக இருந்தால் விடுதிகளில் அறை எடுத்துக்கொடுப்பார்கள். உல்லாசமாக அமர்ந்தபடி வசனம் எழுதலாம். ஆனால் கருணாநிதியோ புதிய வசனகர்த்தா. தன்னுடைய சின்னசிறு வீட்டில் அமர்ந்தபடி வசனங்களை எழுதினார். அந்தப் படத்தில் பணியாற்றியபோது இளைஞர் ஒருவர் கருணாநிதியின் கவனத்தைக் கவர்ந்தார்.
நெற்றியில் விபூதி. கழுத்தில் துளசி மாலை. உடம்பில் கதர்ச்சட்டை சகிதம் இருந்த அந்த இளைஞரின் பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். அவர்தான் ராஜகுமாரி படத்தின் நாயகன். இருவரும் மெல்லப் பழகத் தொடங்கினர். தீவிர காங்கிரஸ்காரரான ராமச்சந்திரனுக்கு கருணாநிதியின் எழுத்தில் ஒரு கவர்ச்சி. அவருடன் பழகுவதில் ஆர்வம் செலுத்தினார். ராமச்சந்திரனின் வலுவான உடல், துடிப்பான நடிப்பு, சுறுசுறுப்பான செயல்பாடு எல்லாம் கருணாநிதியை வெகுவாக ஈர்த்தன.
பெரியாரைப் பற்றி கருணாநிதி பேசினார். காந்தியைப் பற்றி ராமச்சந்திரன் பேசினார்.
இரண்டு துருவங்கள். ஆனாலும் ஒன்றையொன்று ஈர்த்தன. இருவரும் புத்தகங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். நட்பு மெல்ல மெல்ல இறுகத் தொடங்கியது.
ராஜகுமாரி படத்துக்குத் தேவையான வசனங்களை எழுதிமுடித்துவிட்டார். படப்பிடிப்புகள் தொடங்கின. ஆனால் தொடரவில்லை. சின்னதும் பெரியதுமாகச் சில பிரச்னைகள். விட்டுவிட்டுத்தான் பணிகள் நடந்தன. இடைப்பட்ட காலத்தில் வேறு சில படங்களுக்கும் வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது கருணாநிதிக்கு.
நீண்ட இழுபறிக்குப் பிறகு ராஜகுமாரி படம் வெளியானது. புதிய பாணியில் எழுதப்பட்ட புத்தம்புது வசனங்கள். கருணாநிதியின் வசனத்தை ராமச்சந்திரன் பேசியபோது அரங்கில் ஆரவாரம். ராமச்சந்திரனுக்கு ராஜகுமாரி முக்கியமான படம். ஆனால் கருணாநிதிக்கு
முதல் படம்.
அடுத்து அபிமன்யு என்ற படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கருணாநிதிக்குக் கிடைத்தது. முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை சட்டென்று நிறுத்தியது அந்தச் செய்தி. புராணப்படம்! அடடா, பகுத்தறிவு பேசும் நமக்கு புராணக்களம் பொருந்தாத களம் ஆயிற்றே என்று நினைத்தார் கருணாநிதி. ஆனால் புரட்சிகரமாக வசனம் எழுதலாம் என்று தயாரிப்பாளர் தரப்பில் சொன்னபோது போன மகிழ்ச்சி திரும்ப வந்து சேர்ந்தது. உற்சாகமாக எழுதினார்.
படம் விறுவிறுவெனத் தயாராகி வெளியானது.
மனைவி பத்மாவுடன் தியேட்டருக்குச் செல்லவேண்டும்; டைட்டில் கார்டில் தனது பெயர் வரும்போது பத்மாவின் முகத்தில் வெளிப்படும் பெருமிதத்தை ரசிக்கவேண்டும்; நண்பர்களின் மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டும்; நிறைய கனவுகளுடன் எல்லோரையும் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார் கருணாநிதி.
டைட்டில் கார்டு ஓடத் தொடங்கியது. இன்னும் சில நொடிகளில் வசனகர்த்தாவின் பெயர் வரவேண்டும். வந்தது. கருணாநிதி அல்ல; வேறொரு பெயர்!
(தொடரும்)

கருத்துகள் இல்லை: