அவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரனைகளில், அவர்களுக்கு இலங்கையில் எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை என்று தாம் திருப்தியடைந்துள்ளதாக அது கூறியுள்ளது.
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்கள் தமது நாடுகளில் தொந்தரவுக்குள்ளாகலாம் என்று அச்சம் தெரிவித்து ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் உட்பட மனித உரிமை அமைப்புக்கள் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்துள்ளன.
திருப்பி அனுப்பப்பட்ட இந்த 26 பேரும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் உறுதி செய்துள்ளார்.
இந்த 26 பேருக்கும் பிரிட்டனில் தங்குவதற்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என்று கண்டறியப்பட்டுள்ளதாக லண்டனில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
இவர்கள் அனைவரது வழக்குகளும் தனித்தனியாக கவனத்துக்கு எடுக்கப்பட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்பது அந்த விசாரணைகளில் கண்டறியப்பட்டிருந்தால், அவர்களுக்கு தஞ்சம் வழங்கப்பட்டிருக்கும் என்றும் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
மனித உரிமை அமைப்புக்களால் இது குறித்து எழுப்பப்பட்ட கரிசனைகளை வெளியுறவு அமைச்சு நிராகரித்துள்ளது.
இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்களில் உள்ள தமிழர்கள் இலங்கையில் தவறாக நடாத்தப்படுவதற்கான ஆபத்து இருப்பதாக சர்வதேச அபய ஸ்தாபனம் கூறியுள்ளது.
இவ்வாறு திருப்பி அனுப்பப்படவிருந்தவர்களில் ஒருவரான, விடுதலைப்புலிகளால் படைக்கு சேர்க்கப்பட்டிருந்த ஒருவர், விமானத்தில் ஏற்றப்படுவதற்கு முன்னதாக தற்கொலைக்கு முயன்றிருந்தார் என்று அது கூறுகிறது.
ஆனால், அவர் திருப்பியனுப்பப்படுவதை தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவை அவரது சட்டத்தரணி இறுதிக் கட்டத்தில் பெற்றுவிட்டார்.
கடந்த மார்ச் மாதந்தான் எதேச்சையான காணாமல் போதல்களும், கைதுகளும் இலங்கையில் தொடர்வதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சு கவலை வெளியிட்டிருந்தது.
இவர்கள் ஒவ்வொருவரும் காலை முதல் மதியம் வரை ஒவ்வொருவராக இலங்கை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களில் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களும், விசா காலவதியாகிவிட்ட பின்னரும் பிரிட்டனில் தங்கியவர்களும் இருந்தனர்.
இவ்வாறு திரும்பி வந்த அனைவரும் ஏதாவது கிரிமினல் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருந்தார்களா என்பது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் அவர்களை விசாரிப்பதாக இலங்கை பொலிஸ் தரப்புப் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி கூறினார்.
பின்னர் ஐ ஓ எம் என்று அழைக்கப்படுகின்ற குடிபெயர்ந்தவர்களுக்கான சர்வதேச நிறுவனம் அவர்களுக்கு சிறிய நிதி உதவிகளை வழங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக