யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க
வலி. வடக்குப் பகுதியில் விரைவில் மீள்குடியேற்றம் செய்யப்படும் என்று யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அண்மையில் யாழ்ப்பாணத்தில் அறிவித்ததன் பிரகாரம் இதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். 51ஆவது படைப்பிரிவின் கீழ் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு நேற்று மானிப்பாய் பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்ததாவது: நடைபெற்று முடிந்த யுத்தம் காரணமாகத் தமிழ் மக்கள் பெரும் இழப்புகளை எதிர்கொண்டுள்ளர். அவர்கள் இழந்தவற்றைக் கட்டியெழுப்பவேண்டியது எமது பொறுப்புமாகும். அந்தவகையில் படையினர் மக்களின் நலன்களில் அக்கறை எடுத்துச் செயற்பட்டு வருகின்றனர். இதுவரை காலமும் யாழ். குடாநாட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 450 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு நிரந்தர வீடுகளை நாம் அமைத்துக் கொடுத்துள்ளோம். இது தொடர்பான செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலர் ப.செந்தில் நந்தனன், வலி.வடக்கு பிரதேச செயலர் எஸ்.முரளிதரன், வலி. தெற்கு பிரதேச செயலர் திருமதி ச.மஞ்சுளாதேவி, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி யோ.எழிலரசி, வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக