திங்கள், 20 செப்டம்பர், 2010

46 NGO என்ஜிஓக்கள் வங்கிக் கணக்கை முடக்கியது அரசு: ஆந்திரா முதலிடம்


டெல்லி: வெளிநாட்டு நிதிகளைப் பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைக் (என்ஜிஓ) கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கிடுக்கிப்பிடி நடவடிக்கை யில் இறங்கியுள்ளது. 46 என்ஜிஓக்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளது.

மேலும், 41 அமைப்புகள் இனி வரும் காலத்தில் வெளிநாட்டு நிதியை வாங்க முடியாதவாறும், பயன்படுத்த முடியாதவாறும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, கேரளா, தமிழ் நாடு, மஹாராஸ்டிரா, கர்நாடகா , ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள அமைப்புகளுக்கு எதிராகத் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டி.என். ஏ. தெரிவித்துள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் 21 நிறுவனங்கள் ஆந்திராவைச் சேர்ந்தவையாகும். 5 அமைப்புகளுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், 4 அமைப்புகளுடன் குஜராத் 3-வது இடத்திலும், 3 அமைப்புகளுடன் மஹாராஸ்டிரா 4-வது இடத்திலும், 2 அமைப்புகளுடன் ராஜஸ்தான் 5-வது இடத்திலும் உள்ளன.

மேலும் இந்த நிறுவனங்கள் மீது 9 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இவற்றை சிபிஐ விசாரிக்கவுள்ளது.

கடந்த 2006-07-ம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து என்ஜிஓ அமைப்புகளுக்கு பெருமளவில் நிதி வந்தது. அந்த ஆண்டில், ரூ. 11, 336 கோடி வந்தது. இதை 18, 996 தன்னார்வத் தொண்டு அமைப்புகள் பெற்றன. கடந்த 2007-08-ம் ஆண்டில் நிதி குறைந்து 18, 796 அமைப்புகள் ரூ. 9, 663 கோடி பெற்றுள்ளன.

இவற்றில் தமிழ் நாட்டிற்கு ரூ. 5, 397 கோடி சென்றுள்ளது. இதையடுத்து டெல்லிக்கு ரூ. 4,055 கோடியும், மஹாராஸ்டிராவிற்கு ரூ. 2, 744 கோடியும், குஜராத்திற்கு ரூ. 1,070 கோடியும் சென்றுள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பு மட்டும் ரூ. 318.59 கோடிகள் பெற்றுள்ளது.

வெளிநாட்டு நிதிகளை பெறுவதையும், பயன்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துவது தான் எப்.சி.ஆர்.எ.வின் நோக்கம். வெளிநாட்டு நிதிகளின் வரத்தைக் கண்காணிக்க பாராளுமன்றம் அன்மையில் தான் எப்.சி. ஆர். எ. சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: