அமீர்கான் தயாரித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பீப்ளி லைவ் இந்திப் படம், இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது.
சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங், பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் பார்த்து ரசித்த படம் இந்த பீப்ளி லைவ். இந்தியாவின் அடிமட்ட விவசாயிகளின் அவலத்தைச் சொன்ன படம் இது. ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரங்களை சென்னை பிலிம்சேம்பரில் நேற்று இரவு நடந்த கூட்டத்தில், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை கமிட்டி தலைவர் கே.எஸ்.சேதுமாதவன் வெளியிட்டார்.
சிங்கத்தையும் பரிசீலித்த கமிட்டி:
மேலும் அவர் கூறுகையில், "ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டு பட பிரிவுக்காக சிங்கம், அங்காடி தெரு, மதராச பட்டினம், விண்ணைத்தாண்டி வருவாயா, பா (இந்தி), பீப்லி லைவ் (இந்தி), பழசிராஜா (மலையாளம்) உள்பட மொத்தம் 27 படங்கள் பரிசீலிக்கப்பட்டன.
இறுதியில், இந்திய விவசாயிகளின் அவலநிலையை மிக யதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் சித்தரித்து இருந்த பீப்லி லைவ் (இந்தி) படம், ஆஸ்கர் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டது...,'' என்றார்.
அப்போது இந்திய திரைப்பட சம்மேளன தலைவர் எல்.சுரேஷ், பட அதிபர்-இயக்குநர் ரவி கொட்டாரக்கரா, பிலிம்சேம்பர் செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், இயக்குநர்கள் எஸ்.கிருஷ்ணசாமி, ஏ.எஸ்.பிரகாசம், மனோஜ்குமார், பட அதிபர் காட்ரகட்ட பிரசாத், பாடல் ஆசிரியர் மற்றும் இயக்குநர் கங்கை அமரன் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக